Published:Updated:

இறந்த மகனுடன் பேசும் தாய், மரணித்த தந்தையை விசாரிக்கும் மகள்... #SilentPandemic எனும் துயரம்!

மனோதத்துவ நிபுணர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் சந்திக்கும் இன்னல்களை silent pandemic என்கிறார்கள். கோவிட் 19 உலகத்திற்கு வெறும் உடல்ரீதியான சிக்கல்களை மட்டும் கொடுக்கவில்லை. பண ரீதியாக, மன ரீதியாகப் பல வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் மக்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகம் தோன்றியது முதலே பேரிடர்கள் பழக்கமானவை தான். சில நிமிடங்களில் எண்ணிலடங்கா உயிர்களைக் கொல்லும், அடுத்த நிமிடம் அமைதி கொள்ளும். ஆனால், பல்வேறு உயிர்களை சிறுகச் சிறுக கொல்கிறது கொரோனா. இதுவரை உலகில் 30 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்தது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை. இந்தியாவில் ஏப்ரல் 20, 2021 நிலவரப்படி 180,550 பேர் மரணித்திருக்கிறார்கள்.

கொரோனா  டேட்டா
கொரோனா டேட்டா
worldometers.info

இந்தியாவில் பேரழிவுகளாகக் கருதும் 2004-ம் ஆண்டு சுனாமியில் பலியான இந்தியர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 12,405. குஜராத் பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 20,000. உத்திராகண்ட் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5700. ஆயிரங்களில் மரணங்கள் நிகழும்போதே அழுத தேசம், லட்சங்களில் பலி எண்ணிக்கை தாண்டியும் அதன் வீரியம் புரியாமல் மந்த நிலையில் இயங்குகிறது. 1,80,550 பேர் என்பது பலியானவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என லட்சக்கணக்கானவர்களை நேரடியாகவே பாதித்திருக்கும் கொடூரம்.

1,80,550, 1,80,551, 1,80,552 என உயிரிழந்தவர்களை ஒரு எண்ணிக்கையாக மட்டும் பார்க்காமல், மொத்த நாட்டிற்கும் ஒரு இழப்பின் வலியை உணர்த்துகிறது சில சம்பவங்கள்.

பூனம் சோலங்கி எனும் தாய் அகமதாபாத் நகரின் சிவில் மருத்துவமனை வாசலில் நிற்கிறார். 1200 படுக்கை வசதிகொண்ட கோவிட் சிறப்பு மருத்துவமனை அது. மருத்துவமனை வெளியிலிருந்து அவர் தன மகனிற்கு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறார். "எப்படி இருக்கிறாய் மகனே... உள்ளே நல்ல உணவு கொடுக்கிறார்கள் தானே... நீ சீக்கிரம் குணமடைவாய். நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" என அலைபேசியில் தெரியும் மகனுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இங்கிருக்கும் பிரச்னை என்ன தெரியுமா? அந்த மகன் அப்போது உயிரோடு இல்லை. கடந்த ஆண்டே கோவிட்-19 நோய்த் தொற்றிற்கு ஆளாகி, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் அந்த மகன். இது அந்த தாய்க்கும் தெரியும். அவ்வப்போது மகனின் இறப்புக்காக அழுதாலும், அதை முழுவதும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. விளைவு, அடிக்கடி சிவில் மருத்துவமனைக்கு வந்துவிடுகிறார். அவரது மகன் தன்னிடம் கடைசியாகப் பேசிய வீடியோவை பார்த்து அவர் இருப்பதாக நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். அவரை சரிப்படுத்தவும் தேற்றவும் மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

corona at old age home
corona at old age home

இதேபோல பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு 18 வயது பெண், தன் தந்தை அனுமதிக்கப் பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு தினம் தினம் அழைத்து அப்பாவின் உடல் நலம் பற்றி விசாரிக்கிறார். ஆனால், அவரது தந்தை மரணித்து ஒரு மாதம் ஆகிறது. அது அவருக்கும் தெரியும், அப்பாவின் இறப்பிற்கு பிறகான எல்லா சடங்குகளிலும் பங்கேற்றார் அந்த பெண். இருப்பினும் தந்தை இல்லை என்பதை அவள் மனம் ஏற்க மறுக்கிறது. இப்படிபலர் எதிர்பாராத கொரோனா மரணங்களைத் தாள முடியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக நெருக்கமான ஒருவர் மரணித்தால், அந்த துக்கத்தை ஒரு மனிதன் கடந்து வர ஐந்து கட்டங்கள் உண்டு என விளக்குகிறது கூப்ளேர் - ராஸ் தியரி (Kübler–Ross Grief Cycle). அதில் முதல் கட்டம் Denial. அதாவது தனக்கு அன்பானவர் எந்த நிமிடமும் திரும்பி வருவார், அவர் இறக்கவில்லை என அந்த மரணத்தை ஏற்க மறுப்பது. மேற்சொன்ன அனைவரும் இந்த கட்டத்தில்தான் இருக்கிறார்கள். இங்குதான் சிக்கலே. மனோதத்துவ அறிவியலின் படி, ஒருவர் இந்த மனநிலையில் இருந்து விடுபட பெரும்பாலும் உதவுவது மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்கு. உயிரற்ற அந்த உடலைப் பார்ப்பதும், அழுவதும், எல்லா இறுதிச் சடங்குகளையும் அவரவர் நம்பிக்கைகளின்படி செய்வதும், ஒருவரின் மரணத்தை நெருக்கமானவர்கள் ஏற்றுக்கொள்ள உதவுகிறது என்கிறார்கள்.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்

கொரோனா அதற்குக் கூட வாய்ப்பளிப்பதில்லை. இறந்தவரின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்குக் கூட சமயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமாக ஒரு இழப்பைச் சந்தித்த வீட்டிற்கு நிறைய நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்து ஆறுதல் வார்த்தைகள் கூறி துணையிருப்பர். கொரோனா மரணங்களில் அதுவும் சாத்தியமற்றுப் போகிறது. இப்படி மனதளவில், உடலளவில் தனித்துவிடப்பட்ட பலர் சத்தமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவம் இது. ஒரு பத்து வயது சிறுமியின் தாய், தந்தை, அண்ணன் மூவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சிறுமி மட்டும் பத்து நாட்கள் தனிமையில் வீட்டிலிருக்கிறாள். துணைக்கு ஆள் இல்லை, உணவு சமைக்க தாய் இல்லை, உதவிக்கு யாரும் வரமுடியாத லாக்டௌன் சூழ்நிலை வேறு. அந்த சிறுமியின் மனப்போராட்டங்களுக்கு தீர்வு காண்பது எளிதல்ல.

கொரோனாவால் பெரிதாக பாதிக்கப்படாத இந்த 5 நாடுகள் குறித்து தெரியுமா?

மனோதத்துவ நிபுணர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் சந்திக்கும் இன்னல்களை Silent pandemic என்கிறார்கள். கோவிட் 19 உலகத்திற்கு வெறும் உடல்ரீதியான சிக்கல்களை மட்டும் கொடுக்கவில்லை. பண ரீதியாக, மன ரீதியாகப் பல வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். இதிலிருந்து மீள்வதற்குப் பல மாதங்கள் ஆகும். பல ஆண்டுகளாக நாம் சொல்லும் அதே பழமொழியைத் தான் இங்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. கொரோனா வந்தபின் மீள்வது எளிதல்ல. உங்களுக்காகவும், உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் சற்று கவனமுடன் இருந்து, வருமுன் காப்பதே சிறந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு