Published:Updated:

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

மீள்வோம்... மீட்போம்
பிரீமியம் ஸ்டோரி
மீள்வோம்... மீட்போம்

#SpreadPositivity

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

#SpreadPositivity

Published:Updated:
மீள்வோம்... மீட்போம்
பிரீமியம் ஸ்டோரி
மீள்வோம்... மீட்போம்
மீள்வோம்... மீட்போம்... இந்த இக்கட்டான கொரோனா கால சூழலில் அனைவருக்கும் தேவை... மன தைரியமும் தன்னம்பிக்கையும்தான். அப்படி தைரியம் மற்றும் நம்பிக்கையோடு கொரோனாவை வென்றவர்கள்தாம் இங்கே அதிக சதவிகிதம் இருக்கிறார்கள். அப்படி வென்றவர்களில் சிலர் விகடன் இணைய தளத்தில் பகிர்ந்தவற்றிலிருந்து...
மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

இதுவும் கடந்துபோகும்... - ‘காதல்’ சரண்யா

‘‘எனக்கு கொரோனா உறுதியானதும் நான் ரொம்ப பயந்து, பதற்றமாயிட்டேன். நான் தனியா இருக்கேன். தனிமையில இதை எப்படி சமாளிக்கப் போறேன், இதுலேருந்து எப்படி மீளப் போறேன்னு பயந்தேன். அழுதேன். ஃபிரெண்ட்ஸும் வேலை பார்க்கிற இடத்துல உள்ளவங்களும் என்னை எப்படிப் பார்ப்பாங்களோனு பயந்தேன். கொரோனா வந்தபோது எனக்குத் தாங்க முடியாத தலைவலி இருந்தது. அதனால டாக்டரை கேட்காம நானாவே மாத்திரை போட்டுகிட்டேன். அந்தத் தப்பை நீங்க யாரும் பண்ணிடாதீங்க. நான் செய்த தவறுகளை நீங்களும் செய்யாதீங்க.

அறிகுறிகள் இருந்தா தயக்கமில்லாம டெஸ்ட் எடுங்க. பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு உடனே போயிடுங்க. ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகணுமா, வீட்லயே தனிமைப் படுத்திக்கிறதானு நீங்களா முடிவெடுக்காதீங்க. உங்களுக்கு ஒருவேளை கொரோனா டெஸ்ட்டுல பாசிட்டிவ்னு வந்தா, உங்க ஆக்ஸிஜன் அளவைப் பார்த்துட்டு, ஆஸ்பத்திரியில அட்மிஷன் தேவையா, வீட்லயே இருக்கலாமானு டாக்டர்ஸ் உங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. டாக்டர் எடுத்துக்கச் சொன்ன மருந்துகளை மட்டும் எடுத்துக்கோங்க. நீங்களா கூடுதலா எதையும் எடுத்துக்காதீங்க. கூகுள் டாக்டர்கிட்ட அட்வைஸ் தேடாதீங்க. வைட்டமின் சியும் புரோட்டீனும் அதிகமுள்ள, காரமில்லாத சாப்பாடு எடுத்துக்கோங்க. ஆவி பிடிக்கிறது, வெந்நீர்ல வாய் கொப்பளிக்கிறது, நல்ல தூக்கம்னு மத்த விஷயங்களையும் மறந்துடாதீங்க. வாசனையோ, டேஸ்ட்டோ இல்லைனு பயந்துடாதீங்க. அந்த ரெண்டு உணர்வுகளும் போறது கொரோனா வைரஸ் பாதிப்போட ஓர் அறிகுறிதான். உங்களுக்கு இன்ஃபெக்‌ஷன் சரியாகும்போது நீங்க இழந்த ஸ்மெல்லும் டேஸ்ட்டும் தானா திரும்ப வந்துடும். இது எல்லாத்தையும்விட ரொம்ப ரொம்ப முக்கியம்... உங்களை நீங்க பாசிட்டிவ்வா வெச்சுக்கிறது.’’

எல்லாரும் நல்லாருப்போம்! - ‘சுந்தரி’ கேப்ரெல்லா

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

‘‘கொரோனா பல பேருக்கு சத்தமே இல்லாம வந்துட்டுப் போயிடுது. சிலரை பாடாப்படுத்திடுது. நான் ரெண்டாவது ரகம். எனக்கும் என் கணவருக்கும் ஒரே நேரத்துல கொரோனா வந்தது. ரெண்டு பேருமே போராடிதான் மீண்டு வந்திருக்கோம். விட்டுவிட்டுக் காய்ச்சல், பயங்கரமான தலைவலினு உடல்ரீதியா ரொம்பவே அவஸ்தைப்பட்டேன். ஆனாலும், அந்த நிலைமைலயும் ‘சரியாயிடும்... சரியாயிடும்’னு மனசுக்குள்ளே சொல்லிட்டே இருந்தேன். அதை எனக்குச் சொல்லிக்கொடுத்தவரே என் கணவர்தான்.

கொரோனா அறிகுறிகளைத் தாங்கிக்கிறது கஷ்டமாதான் இருக்கும். ஆனாலும், மனசளவுல தைரியமா இருந்தாதான் அதையெல்லாம் எதிர்கொள்ள முடியும்னு நம்பணும். டாக்டர் எனக்குச் சொன்ன முக்கியமான அட்வைஸ் எல்லாத்தையும் நான் சரியா ஃபாலோ பண்ணதாலதான் இதுலேருந்து மீண்டேன். நல்ல, சத்தான சாப்பாடு. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிற எதையும் மிஸ் பண்ணாம சாப்பிடச் சொன்னாங்க. ஒருநாளைக்கு ரெண்டு முறை ஆவி பிடிக்கச் சொன்னாங்க. நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க.

உங்க யாருக்காவது ஹெல்த் விஷயத்துல சந்தேகம் வந்தா தயவுசெய்து அலட்சியமா இருக்காதீங்க. அலட்சியமா, கவனிக்காம விட்டுட்டு தீவிரமான பிறகு டாக்டரை பார்க்கறதுல பிரயோஜனமே இல்ல.’’

நான் ரெண்டு தடவை கொரோனா வந்து மீண்டிருக்கேன்! -`குக் வித் கோமாளி' அஷ்வின்

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

‘‘2020-ம் வருஷம் ஒருமுறையும் இந்த வருஷம் ஏப்ரல் மாசம் இன்னொரு முறையுமா எனக்கு ரெண்டு தடவை கொரோனா வந்து குணமாயிருக் கேன். முதன்முறை வாசனையும் டேஸ்ட்டும் போய், கடுமையான காய்ச்சல், தலைவலியால அவதிப்பட்டேன். ரெண்டாவது முறை பயங்கரமான தலைவலி, அசதினு வேற மாதிரி அவஸ்தைகள். ரெண்டு முறையுமே டாக்டர் அட்வைஸ்படி ஹோம் க்வாரன்ட்டீன்லதான் இருந்தேன். டாக்டர் சொன்ன மாத்திரைகளை எடுத்துக்கிட்டு, ஆவி பிடிச்சு, ரெஸ்ட் எடுத்துதான் மீண்டேன்.

பர்சனலா கொரோனா அவஸ்தைகளை அனுபவிச்ச பிறகுதான் எனக்கே அதோட வீரியம் புரிஞ்சது. தண்ணீரோட சுவைகூட தெரியாத அந்தக் கொடுமையை நான் அனுபவிச்சிருக்கேன். பல இடங்கள்ல பலரும் இன்னும் விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க. கைகொடுக்குறாங்க. கட்டிப் பிடிக்கிறாங்க. மாஸ்க்கை எடுத்துட்டுப் பேசுறாங்க. இது வெயில் காலம். அதிகம் வியர்க்குது. அந்த வியர்வையோட யாருக்காவது கைகொடுத்தாலோ, நாம தொட்ட இடத்துல யாராவது தொட்டாலோகூட வைரஸ் பரவிடுது. பல பேர் சானிடைஸரை எல்லாம் மறந்துட்டாங்க. மாஸ்க்கை துவைச்சு உபயோகிக்கிறதில்லை.

ஒருமுறை வந்துடுச்சு... மறுபடி வராதுனு நினைச்சாலும் நான் அதிகபட்ச கவனத்தோடுதான் இருந்தேன். அதையும் மீறி ரெண்டாவது தடவையும் என்னை கொரோனா பிடிச்சது இருக்கே... மரண அவஸ்தை. அப்ப நான் கத்துக்கிட்டது பெரிய பாடம்.’’

முழுக்கட்டுரையையும் படிக்க க்ளிக் செய்யவும்

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

நம்பிக்கையான வார்த்தைகளை மட்டுமே பேசுவோம்! - `ஆர்.ஜே' நித்யா கோபிநாத். சேலம்

‘‘என்னுடைய சிறு கவனக்குறைவால் ஏற்பட்ட தொற்றுதான் அந்த எட்டு நாள்களின் போராட்டங்கள். லேசான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். பரிசோதனை செய்தபோது கொரோனா ஆரம்ப அறிகுறி. எனக்கு அதிகப்படியான தலைவலி, வாந்தி, கண் எரிச்சல் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட முட்கள் ஒன்றாகத் தொண்டையின் நடுப்பகுதியில் அமர்ந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிமிடத்துக்கு நிமிடம் ஊசி போல குத்திக்கொண்டே இருந்த வேதனை, நரக வேதனை. எச்சில் விழுங்க முடியவில்லை. தண்ணீர் குடிக்க முடியவில்லை. நாக்கில் ருசி, வாசனை அறியும் தன்மையும் இல்லை. ஆனால், தன்னம்பிக்கை யோடு போராட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

தினமும் இரண்டு வேகவைத்த முட்டைகள். மூன்று வேளை வெந்நீர். நான்கு வேளை தேநீர். காலை, மதியம், இரவு சூடான உணவுகள். பச்சைப்பயறு, கொள்ளு அதிகமாக எடுத்துக் கொண்டேன். மிளகு சேர்த்த உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டேன். கீரை வகைகள், காய்கறிகள், காளான்களை பிடிக்கவில்லையென்றாலும் சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை வெந்நீரில் கல் உப்பு, மஞ்சள்தூள் போட்டு வாய் கொப்பளித்தேன். நில வேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், இஞ்சி - எலுமிச்சை - தேன் கலந்த சாறு, இஞ்சி, மிளகு, சீரகம், கற்பூரவள்ளி, வெற்றிலை, துளசி, புதினா இவற்றை நன்கு கொதிக்கவைத்து ஒரு நேர கஷாயமாக எடுத்துக்கொண்டேன்.

எட்டு நாள்களில் தனி அறையில் இருந்தபோது எந்த ஒரு செய்தியையும் கேட்கவில்லை. மொபைல் போனை ஆஃப் செய்தேன். தனிமையில் இருப்பது போல் உணரும் தருணங்களில் புத்தகம் வாசித்தேன். பாட்டு கேட்டு ரசித்தேன். இன்னும் பலவற்றையும் யோசித்தேன். அப்படி நான் யோசித்தவை, ஒவ்வொருவருமே கொரோனாவில் இருந்து மீண்டு வரமுடியும் என்பதை உறுதிப்படுத்தக்கூடியவை.’’

முழுக்கட்டுரையையும் படிக்க க்ளிக் செய்யவும்

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

பாசிட்டிவ்வாக வாழப் பழகுவோம்! - எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் கல்கி கவியரசு

``இருக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சுடுதண்ணீர் பருகுங்கள். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளின் மீது நம்பிக்கை வையுங்கள். தேவையற்ற தகவல்களை இணையதளத்தில் தேடிப் படிப்பதைத் தவிருங்கள். உங்களைச் சூழ்ந்து இருக்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலும், பிரார்த்தனைகளும் உங்களை இந்த நோயில் இருந்து வெளியே கொண்டு வரும். பயத்தை விடுத்து பாசிட்டிவ்வாக வாழ்ந்து பாருங்கள். நீங்கள் கொரோனாவில் மட்டும் பாசிட்டிவ் அல்ல. வாழ்க்கையிலும் ஆல்வேஸ் பாசிட்டிவ் வாகவே வாழப் பழகுவீர்கள்.

- இவையெல்லாம்... கொரோனாவில் இருந்து மீண்ட என்னுடைய அனுபவ வார்த்தைகள். ஆனால், கொரோனா பாசிட்டிவ் ஆன பிறகான அந்தத் தருணங்கள்...

கொரோனா எப்படி வேண்டுமானாலும் வரலாம். எனக்கு முதுகுப் பகுதியில் எதிர்பாராத வலி. இரண்டு நாள்கள் கடந்ததும் முன் நெற்றியில் இடைவிடாத வலி. முதல் நாளே என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அடுத்த நாள் காலை எழவே முடியாத அளவுக்கு உடம்புவலி கத்தியால் கீறுவதுபோல்... கூடவே, உடல் வெப்ப நிலையும் அதிகரித்தது. டெஸ்ட் ரிசல்ட்... கொரோனா பாசிட்டிவ்.

மருத்துவரை போனில் அழைத்தேன். ‘எதுவுமே இல்லை பயப்படாதீங்க...’ என்றதோடு, அடுத்தடுத்து அவர் தந்த நம்பிக்கை வார்த்தைகள் எனக்கு மட்டுமல்ல, உங்களுக்குத்தான். அந்த வார்த்தைகளில் அத்தனை அழுத்தங்கள்... அர்த்தங்கள்.''

முழுக்கட்டுரையையும் படிக்க க்ளிக் செய்யவும்:

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

கொரோனாவை விரட்ட தன்னம்பிக்கைதான் முக்கியம்! - அவள் வாசகி ஆதிரை வேணுகோபால்

``ஏப்ரல் 24 சனிக்கிழமை அன்று இரண்டாவது தடுப்பூசியை நானும் என் கணவரும் எடுத்துக்கொண்டோம். அன்று மாலையே கணவருக்கு லேசான உடல்வலியும் காய்ச்சலும் தொடர்ந்தது. அடுத்து டெஸ்ட் எடுத்துப்பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது.

குடும்ப மருத்துவரைச் சந்தித்தோம். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்தவர், மாத்திரை எழுதிக் கொடுத்து, `இந்த இந்த மாத்திரைகளை இந்த இந்த நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். மூன்று முறை உப்புத் தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். குப்புறப்படுத்து உறங்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆக்ஸிமீட்டரைக் கொண்டு பல்ஸ் பார்த்துக்கொள்ளுங்கள். பல்ஸ் குறைந்தால் உடனே என்னைக் கூப்பிடுங்கள். தைரியம் முக்கியம். பயப்படுவதற்கு ஒண்ணுமில்லை. அவரைத் தனியாக இருக்கச் சொல்லுங்க. கூடவே நல்ல புரோட்டின் உணவுகளை நிறைய கொடுங்க. சூப் தயாரித்துக் கொடுங்க. மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது நல்லது' என்றார்.

முதலில் தொலைபேசி அழைப்புகளை நிறுத்தினேன். எந்த அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை. டிவி நிகழ்ச்சி களையும் செய்திகளையும் குறைத்தேன். வேளா வேளைக்கு சமைத்துக்கொடுத்தேன். இப்படியாக முதல் 7 நாள்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையைக் கடந்தேன்... 15 நாள்கள் ஓடி விட்டன. வெளியே வந்தார். டெஸ்ட் எடுத்தோம். நெகடிவ் ரிசல்ட்.

இதற்காக நாம் அனைவருமே சொல்ல வேண்டிய நம்பிக்கை மந்திரம்... ஒன்றே ஒன்றுதான். அதை பாசிட்டிவ்வாகக் கடைப்பிடித்தால் நிச்சயம் கொரோனா நெகட்டிவ்தான்.”

முழுக்கட்டுரையையும் படிக்க க்ளிக் செய்யவும்:

மீள்வோம்... மீட்போம்: கொரோனாவை வென்ற கதைகள்

எனக்காக அவர்கள் இருந்தார்கள்; மீண்டேன்! - பத்திரிகையாளர், குழந்தை எழுத்தாளர் கோ.கணேசன்

``கொரோனாவா, நமக்கெல்லாம் வராது என்ற எண்ணத்தில் இருந்தவன் நான். ஒரு நாள் ஜுரம் வந்தது. அடுத்த இரண்டு நாள்களில் என்னால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. கொரோனா என்னைப் பிடித்துக்கொண்டது என்பதை உணர்ந்தேன்.

நெருங்கிய உறவினர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து என்னை வலுக்கட்டாயமாக சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு ஏற்றி விட்டனர். இனி அதைப் பதற்ற‌மில்லாமல் எதிர்கொண்டு மீண்டு வர வேண்டும் என்ற எண்ணம்தான் ஆம்புலன்ஸில் ஏறியதும் என்னுள்ளே நிறைந்திருந்தது.

முதல் மூன்று நாள்கள் எல்லாமே படுக்கையில்தான். ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுக்க முடியாது. எனக்கு சுவாசத்தை வழங்கிக் கொண்டிருந்த கருவியில் ஒரு சிறிய கன்டெய்னரில் தண்ணீர் ஊற்றி அதை அந்தக் கருவி யுடன் இணைக்க வேண்டும். தேவை யான அளவுக்கு ஆக்ஸிஜன் லெவல் வைக்க வேண்டும். கன்டெய்னரில் இருக்கும் தண்ணீர், நோயாளியின் சுவாசத்துக்கேற்ப விரைவாகவோ, மெதுவாகவோ குறையும்.

அந்த வார்டில் இருந்த அத்தனை நோயாளிகளில் எனக்கு அட்டெண்டர் இல்லாத குறையைத் தீர்த்தவர்கள் அங்கிருந்த மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், ஆயாம்மாக்கள்... தன்னலம் கருதாமல், ஓய்வு ஒழிச்ச லின்றி என்னைப் பராமரித்து, தைரியமூட்டி, என்னை கொரோனா அலையிலிருந்து மீட்ட அந்த நாள்கள் மறக்க முடியாதவை.

ஆனால், ஒரு நாள் நள்ளிரவு. மயக்கநிலையிலிருந்து திடீரென விழித்தேன். என் சுவாசக் கருவியைப் பார்த்தேன். ஆக்ஸிஜன் ரெகுலேட்டரில் தண்ணீர் இல்லை என்பதை உணர்ந்தேன். எழுந்துகொள்ள முயற்சி செய்தபோது...''

முழுக்கட்டுரையையும் படிக்க க்ளிக் செய்யவும்: