Published:Updated:

கொரோனா பாதிப்பு... வடசென்னையை விஞ்சுகிறதா தென்சென்னை? #ChennaiUpdate

சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்

வடசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவந்த நிலையில், தற்போது தென்சென்னையிலும் கொரோனா வீரியத்துடன் பரவிவருகிறது.

தமிழகத்தில் நேற்று (மே 8) 600 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் 399 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6,006 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 1,589 பேர் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலமாகப் பாதிக்கப்பட்டவர்கள். தாம்பரத்தைச் சேர்ந்த 78 வயதான நபர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ஏப்ரல் 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) மரணமடைந்தார். அதே நாளில் 56 வயதுடைய ஒரு நபரும் உயிரிழந்தார்.

வாகன சோதனை
வாகன சோதனை

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட `ஹாட்ஸ்பாட்’ பகுதிகளுக்குத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தினமும் நிறைய பேருக்குப் பரிசோதனை செய்யப்படுவதனால்தான் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முன்னணி செயல்வீரர்களாகப் பணியாற்றிவரும் காவல்துறையினரும் மருத்துவப் பணியாளர்களும் தூய்மைப்பணியாளர்களும் கொரோனா தொற்றுக்குத் தொடர்ந்து ஆளாகிவருகின்றனர். அண்ணாநகர் துணை ஆணையர் ஒருவருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (மே 7), பூக்கடை காவல்நிலையத்தில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

மேலும், திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட சுமார் 60 போலீஸார் சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள காவலர்கள் குடியிருப்புகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மே 7-ம் தேதி சென்று ஆய்வு மேற்கொண்டார். கபசுரக் குடிநீர், அதிமதுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் ஆகியவற்றை காவலர் குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு ஆணையர் வழங்கினார்.

கோயம்பேடு சந்தை மூலமாகத்தான் மிகப்பெரிய அளவுக்குக் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பூர், அரியலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்குக் கோயம்பேட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக தினந்தோறும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதனால், மே 5-ம் தேதி கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு
கோயம்பேடு

கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிகக் காய்கறிச் சந்தை ஏற்படுத்தப்பட்டுவருகிறது. 140 கடைகளுடன் அந்தச் சந்தை இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. மே 10-ம் தேதி முதல் திருமழிசை சந்தை செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவந்த நிலையில், தற்போது தென்சென்னையிலும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. குறிப்பாக, வளசரவாக்கம் (மண்டலம் 11), அடையாறு (மண்டலம் 13) உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. வளசரவாக்கம் மண்டலம் என்பது கோயம்பேடு சந்தையை ஒட்டிய பகுதி என்பதால், இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். வளசரவாக்கத்தில் 145 மற்றும் 148 ஆகிய வார்டுகளில் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் மட்டும் கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. வளசரவாக்கம் மண்டலத்தில் கடந்த ஐந்து நாள்களில் 130 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 45 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றன. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டது அடையாறு மண்டலம். அங்கு, கடந்த வாரம் 20 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது. திருவான்மியூர் காய்கறிச் சந்தையே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

கவலைக்குரிய இந்த நேரத்தில் ஆறுதல் அளிக்கும் செய்தியும் உண்டு. ஊரடங்கு காலத்தில் சென்னை நகரில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு 15 நாள்களுக்கு முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 79 சதவிகிதம் அளவுக்குக் குற்றங்கள் குறைந்துள்ளன. கொலை வழக்குகள் 44 சதவிகிதம், கொள்ளை வழக்குகள் 75 சதவிகிதம், வீடு புகுந்து திருட்டு வழக்குகள் 59 சதவிகிதம், காயங்கள் தொடர்பான வழக்குகள் 82 சதவிகிதம், சாலைவிபத்துகள் 81 சதவிகிதம் என்ற அளவுகளில் குறைந்துள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு