Published:Updated:

தொல்லை தரும் தொப்பை... இனி வேண்டாம்!

தொப்பை
பிரீமியம் ஸ்டோரி
News
தொப்பை

#Health

``தொப்பையை அழகு, தன்னம்பிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்காதீர்கள். தொப்பை உங்கள் உடலின் ஆரோக்கியமின்மையை உங்களுக்கு உணர்த்தும் ஓர் எச்சரிக்கை மணி'' என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் ராதா. தொப்பை குறித்து அவர் தரும் மிக முக்கிய விளக்கங்கள் இதோ உங்களுக்காக...

ஏன் வருகிறது தொப்பை?

உடலானது நாம் உண்ணுகின்ற உணவிலிருந்து கலோரிகளை எடுத்து ஆற்றலாக மாற்றி, நம் உடல் இயங்கத் தேவையான ஆற்றலைக் கொடுத்துவிடுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக உண்ணுகிறபோது, உடல் அந்த அதிகப்படியான கலோரிகளைக் கொழுப்பாக மாற்றி சருமத்துக்கு அடியில் சேமித்து வைத்துக்கொள்கிறது. பொதுவாக நம் உடலில் சேருகின்ற அதிகப்படியான கொழுப்பு கைகள், உடலின் பின்பகுதி, தொடை என உடலின் எல்லா பாகங்களிலும்தான் டெபாசிட் ஆகும். ஆனால், வயிற்றில் இருக்கக்கூடிய தசைகளின் திசுக்கள் இறுக்கம் இல்லாமல் இருப்பதால் அந்த இடத்தில் சற்று அதிகப்படியாகவே கொழுப்பு சேகரமாகிறது. அதுதான் தொப்பை ஆகிறது.

தொல்லை தரும் தொப்பை... 
இனி வேண்டாம்!

அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சிகள்!

தொப்பைக்கும் இதயநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனில், அதிகப்படியான உடல் எடை உள்ள அனைவருக்குமே இதயநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? ஒருவரது உடலின் வெய்ஸ்ட் மற்றும் ஹிப் ஆகிய இரண்டுக்கும் இடையில் இருக்கிற விகிதமே (Waist Hip Ratio - WHR) ஒருவருக்கு இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

வெய்ஸ்ட் (Waist), ஹிப் (Hip) என்பதை, இரண்டுமே இடுப்புதானே என்று சிலர் நினைக்கலாம். டேப் (Tape) கொண்டு அளக்கும்போது, தொப்புள் - பின்முதுகு - தொப்புள் என்று சுற்றி எடுக்கும் அளவு வெய்ஸ்ட் மெஷர்மென்ட் (Waist Measurement). அதுவே, தொப்புளுக்குக் கீழே இரண்டு இடுப்பு எலும்புகளைச் சுற்றி எடுக்கப்படும் அளவு ஹிப் மெஷர்மென்ட் (Hip Measurement). இதில், வெய்ஸ்ட் மெஷர்மென்ட்டின் அளவு, ஹிப் மெஷர்மென்ட்டின் அளவைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும். பொதுவாகப் பெண்களுக்கு வெய்ஸ்ட் - ஹிப் சுற்றளவு விகிதம் 0.80 - 0.85 வரை இருப்பது நார்மல். அதாவது, ஒருவருக்கு வெய்ஸ்ட்டின் அளவு 29 இன்ச், ஹிப்பின் அளவு 34 இன்ச் என்றால், 29/34 = 0.85. அதற்கு அதிகமாக ஆக, ரிஸ்க்குக்கு அருகில் செல்கிறோம் என்று அர்த்தம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொல்லை தரும் தொப்பை... 
இனி வேண்டாம்!

பெண்களுக்கு தொப்பை பெரிதாக இருந்தால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதயநோய் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்கின்றன ஆய்வுகள். எனவேதான் தொப்பையை பெண்கள் தங்களது தோற்றம் சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்காமல் ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரசவத்துக்குப் பிறகு ஏன் தொப்பை?

கருவுற்றிருக்கும்போது பொதுவாக வயிற்றின் தசைகள் விரிவடையும். குழந்தை பிறந்தவுடன் விரிவடைந்த தசைகளின் நார்மல் டோன் (tone), அதாவது, இறுக்கம் குறைந்து தளர்ந்துபோய்விடும். இப்படித் தளர்ந்த தசைகளே பிரசவித்த பெண்களின் தொப்பைக்குக் காரணமாக இருக்கின்றன. எனவே, டெலிவரிக்குப் பிறகு, தளர்ந்த வயிற்றுத் தசைகளை உடற்பயிற்சி மூலம் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஹெர்னியாவா, தொப்பையா?

சிசேரியன் பிரசவமான பெண்களில் சிலருக்குத் தையல் போட்ட இடத்தில் ஹெர்னியா வரும். ஆனால், அது ஹெர்னியா என்று அடையாளம் கண்டு கொள்ளாமல் அதைத் தொப்பை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். எனவே, உடற்பயிற்சி போன்றவற்றை முறையாகச் செய்தும் தொப்பை குறைவில்லை என்றால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

தொல்லை தரும் தொப்பை... 
இனி வேண்டாம்!

இளம்பெண்களுக்கும் ஏன் தொப்பை?

அதிக நொறுக்குத் தீனிகள் உண்பது, உடல் இயக்கங்கள் குறைவாக இருப்பது ஆகியவை இளம்பெண்களுக்கும் தொப்பை ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணங்கள்.

தொப்பையைக் குறைக்க என்ன செய்யலாம்?

உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி கைகொடுக்கும். மேல் வயிறு மற்றும் அடி வயிறு இரண்டுக்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கின்றன. நிபுணர்களின் ஆலோசனையுடன் அவற்றைச் செய்யலாம். அடுத்ததாக, நடைப்பயிற்சி மிக நல்லது. நடைப்பயிற்சியின்போது உடல் ஆற்றலைச் செலவழிக்கும் விகிதம் அதிகமாகும். இதன் காரணமாக வயிற்றில் சேரும் கொழுப்பின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால் அன்றைய நாளில் 200, 300 கலோரிகளை உடல் செலவழித்துவிடும், தொப்பையைத் தவிர்க்கலாம்.

என்ன டயட் எடுக்கலாம்?

நார்மலாக மனித உடலுக்கு தினசரி 2,000 கலோரிகள் தேவைப்படும். ஆனால், எடை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் தினசரி 1,000 - 1,100 கலோரிகள் வரை எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு மீதம் தேவைப்படும் கலோரி களை உடலானது வயிற்றில் ஏற்கெனவே சேர்ந்துள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொண்டுவிடும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டுமே தவிர, எந்த வடிவில் அந்த உணவை உண்கிறீர்கள் (Form of Food) என்பது இரண்டாம்பட்சமே.

இட்லி ஆவியில் வெந்த உணவுதானே என்று நினைத்து ஐந்தாறு சாப்பிட்டால் அந்த ஒரு வேளையில் மட்டும் சுமார் 300 கலோரி உங்கள் உடலுக்குள் சென்றுவிடும். மதியம் பிரியாணி மட்டும்தான் சாப்பிட்டேன் என்று சொல்லக்கூடாது. அதிலேயே 500 கலோரி வந்துவிடும். எனவே, தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள் கலோரி விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். சர்க்கரையைத் தவிர்த்து மெதுவாக ஜீரணமாகும் நார்ச்சத்து உணவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

தொப்பைக்கு குட்பை சொல்வதென்பது ஆரோக்கியத்துக்கு வெல்கம் சொல்வது!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலெக்ட்ரிக் பெல்ட் அணியலாமா?

தொப்பையைக் குறைக்க சிலர் எலெக்ட்ரிக்கல் பெல்ட் போன்றவற்றைப் பயன்படுத்துவது உண்டு. ஒருவேளை அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு ஹெர்னியா போன்ற பிரச்னைகள் இருப்பின் இந்த பெல்ட்கள் இன்னும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால், மருத்துவ ஆலோசனை யின்றி இதை முயற்சி செய்யக் கூடாது.

தொப்பையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும்

நான்கு நிலைகள்!

நடைப்பயிற்சி மற்றும் கலோரி பார்த்து உண்பது முதல் நிலை. உணவின் கலோரி அளவுகளை இணையம், செயலிகள் என அறிந்துகொள்ளலாம்.

பேலியோ, கீட்டோ, இன்ட்டர்மிட்டன்ட் போன்ற ஏதாவதொரு மாற்று டயட் முறைக்கு (Alternate diet) மாறலாம். ஆனால், எந்த டயட்டையும் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் என முடித்துக்கொள்ளாமல், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை என நீண்ட காலத்துக்குப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த டயட்டுக்கு உடலுடன் சேர்ந்து, பசியுணர்வை கட்டுப்படுத்த உங்கள் மூளையும் அதற்கேற்ப செட் ஆகும்.

எண்டோஸ்கோபி சிகிச்சையில், தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் ஒன்று வயிற்றில் செலுத்தப்பட்டு, இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதால் எப்போதும் சாப்பிடும் அளவைவிடப் பாதியளவே சாப்பிட முடியும். இதன் காரணமாக நாளடைவில் உடல் எடை குறைந்துவிடும். 3 - 6 மாதங்களில் இந்த பலூனை வயிற்றிலிருந்து மருத்துவர் எடுத்துவிடுவார். மாதக்கணக்கில் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியதால் பலூனை எடுத்த பிறகும் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாது. இதன் மூலம் சீரான எடையைத் தொடர்ந்து பராமரிக்கலாம். சிலருக்கு இதிலும் பழையபடி உடல் எடை அதிகரிக்கலாம். அப்போது மருத்துவரை நாட வேண்டும்.

Bariatric Surgery என்கிற அறுவை சிகிச்சை முறையில் வயிற்றின் கொள்ளளவு சிறியதாக்கப்படும். இதற்கு வயது வரம்பு கிடையாது. சம்பந்தப்பட்ட நபரது உடல் எடை, உடலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே அவருக்கு இந்த சிகிச்சை அவசியமா, இல்லையா என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.