Published:Updated:

`முடி உதிர்தல் பிரச்னைக்கு என்ன தீர்வு?' - அரோமாதெரபிஸ்ட் தரும் டிப்ஸ்

கிராபியென் ப்ளாக்

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் 100 மி.லி வீதம் எடுத்து, மொத்தமாகக் கலந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து நாளொன்றுக்கு இரண்டு டீஸ்பூன் (10 மி.லி) எடுத்து உபயோகிக்க வேண்டும்.

முடி உதிர்தல்
முடி உதிர்தல் ( pixabay )

நவீன சமூகச்சூழல் பரபரப்பான, நெருக்கடி மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளியிருக்கிறது. விளைவு, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். முடி உதிர்தல் பிரச்னையும் அவற்றில் ஒன்று. அதைச் சரிசெய்ய வழிகாட்டுகிறது, அரோமாதெரபி!

முடி உதிர்தல்
முடி உதிர்தல்
pixabay

``இன்றைய சூழலில், பத்தில் எட்டு பேருக்கு முடி உதிர்தல் பிரச்னை இருக்கிறது. முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் உண்டு. பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், ஹார்மோன் கோளாறுகள், மனஅழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றை கூறமுடியும்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்வதாலும் கடும் குளிர், கோடைக்காலத்திலும் முடி உதிர்தல் ஏற்படும். இதையெல்லாம் தாண்டி, முடிகொட்டும் பருவமும் உண்டு. அதை ,`டீலோஜென்’ (Tealojen) என்போம். மரங்களில் இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்ப்பது போன்று, தலையிலுள்ள முடிகளும் உதிர்ந்து பின் முளைக்கும்.

முடி உதிர்தல்
முடி உதிர்தல்
pixabay.com

இந்த பிரச்னையைச் சரிசெய்ய கேசப் பராமரிப்பு அவசியம். தலையில் அழுக்கு, தூசு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். துரித உணவுகளைத் தவிர்த்து, சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

குறித்த நேரத்தில் உணவருந்துவதும் அவசியமானது. மனஅழுத்தம் தரக்கூடிய சம்பவங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். தூக்கமின்மையும் இதற்கு முக்கியக் காரணம் என்பதால், குறித்த நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கடைபிடித்தும் முடிகொட்டும் பிரச்னை இருந்தால், அதற்கு `அரோமாதெரபி’யில் தீர்வு உண்டு.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில்

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் 100 மி.லி வீதம் எடுத்து, மொத்தமாகக் கலந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து நாளொன்றுக்கு இரண்டு டீஸ்பூன் (10 மி.லி) எடுத்து உபயோகிக்க வேண்டும். தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் தலையில் தேய்க்க வேண்டும். காலையில் எழுந்து குளிக்கும்போது, ஷாம்பு போட்டு முடியை அலசுங்கள். இதை ஒரு வாரம் கடைப்பிடித்து வந்தால், முடி உதிர்தல் பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும். தினசரி தலைக்குக் குளிக்க முடியவில்லையென்றாலும் ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்யலாம்” என்கிறார், அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக்.