Published:Updated:

கொரோனா: `ரிசல்ட்டை ஏன் மாத்திச் சொல்றீங்க?' - திணறும் தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்

கொரோனா தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்கள் பலரின் வேலைப்பளு அதிகரிப்பதாகவும். அதோடு, பலருக்கும் உடல், மனம் இரண்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

`மணிமாறா நீ எங்கப்பா இருக்க’ என்கிற டைட்டிலுடன் சில தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் வெளியான கட்டுரை கொரானா விஷயத்தில் சென்னை மாநகராட்சியின் ஒருவித அலட்சியப் போக்கைச் சுட்டிக் காட்டியது. இந்த நிமிடம் வரை அந்த மணிமாறனைக் கண்டுபிடித்தார்களா எனத் தெரியாத சூழலில், இதோ இன்னொரு சம்பவம்...

கோவிட் டெஸ்ட்
கோவிட் டெஸ்ட்
GCC

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர். வயது 65. உடலில் வேறு எவ்வித வயோதிகப் பிரச்னைகளூம் இல்லாமல் ஆக்டிவாக இருந்தார். திடீரென ஒருநாள் வயிற்று வலி. பிரபல தனியார் மருத்துவமனையை அணுக, `கோவிட்’ டெஸ்ட் எடுக்கச் சொன்னது அந்த மருத்துவமனை. ரிசல்ட் `டிடெக்டட்’ என வந்தது.

`தொற்று இருக்கிறது என்பதுதான் அர்த்தம்’ என்றவர்கள், `முதலில் கொரோனாவைக் குணப்படுத்துங்கள், பிறகு வயிற்றுவலிக்குச் சிகிச்சை எடுக்கலாம்’ என்றார்கள்.

காய்ச்சல், தலைவலி என்றாலே ஊசி மாத்திரை எடுத்துக்கொள்ளாத ஆசிரியரோ சித்த மருத்துவச் சிகிச்சையை நாடினார்.

தமிழக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை
தமிழக அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை

எந்த அறிகுறியும் இல்லாமல் சிகிச்சைக்குச் சென்றவருக்கு அங்கு சென்ற மூன்றாவது நாளில், மூச்சுத் திணறல், காய்ச்சல் எல்லாம் வந்துவிட்டது. `இனி இங்கு சிகிச்சை பலனளிக்காது’ என அங்கிருந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.

அங்கு சென்றதும் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டவர்தான், மூன்றாவது நாள் அவரது மூச்சு அடங்கிவிட்டது.

ஓய்வுக்குப் பிறகும் கூட உழைத்து உழைத்துத் தன்னுடைய மூன்று மகள்களுக்காகவும் நிறைய சேர்த்து வைத்த அவரின் முகத்தை இறந்தபின் வெறும் மூன்று நிமிடங்கள்தான் அந்த மகள்களால் பார்க்க முடிந்தது.

இதன் பிறகே தொடங்கியது `மணிமாறன்’ டைப் வில்லங்கம். ஆசிரியரின் வீட்டில் அவர் மூன்று மகள்கள், அவர்களது கணவன்மார்கள், பிள்ளைகள் என மொத்தம் ஒன்பது பேர்.

மறுநாள் காலை, மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வார்டிலிருந்து அந்த ஆசிரியரின் வீட்டுக்கு வருகிறார்கள்.

``… வீடு தானங்க.’’

``ஆமா...’’

``நீங்க இங்க எத்தனை பேர் இருக்கீங்க...’’

``9 பேர்’’ (இதில் ஒருவர் மத்திய அரசின் சுகாதாரத்துறையில் பணிபுரிவதால் அவரும் கொரோனா வைரஸுக்கு எதிரான முன்களப் பணியாளரும்கூட)

``எல்லாரும் உடனே கிளம்புங்க. பக்கத்துல கேம்ப் இருக்கு. கொரோனா டெஸ்ட் எடுக்கணும்...’’

துயரத்தோடு துயரமாக மொத்த குடும்பமும் டெஸ்ட் எடுக்கச் செல்கிறது. எவ்வித அறிகுறியும் இல்லாது திடகாத்திரமாக இருந்த ஒருவரே போய் விட்டதால் எல்லாருக்குமே அந்த நிமிடம் முதல் `என்ன ரிசல்ட்டோ’ என்கிற பீதி.

சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம்
GCC

மறுநாள் மாலை. 638…….46 என்கிற நம்பரிலிருந்து அழைப்பு.

``ஹலோ, ……. ஃபேமிலிதாங்க.’’

``ஆமா.’’

``நேத்து வந்து டெஸ்ட் எடுத்துட்டுப் போனீங்கல்ல.’’

‘’ஆமா.’’

``ஒன்பது பேருக்கும் பாசிட்டிவ்’ங்க.’’

``என்னது ஒன்பது பேருக்குமா’’?

``ஆமா. எல்லாரும் ரெடியா இருங்க. என்ன பண்ணணும்னு திரும்ப போன் பண்ணிச் சொல்வாங்க. இல்லாட்டி ஆட்கள் வீட்டுக்கு வருவாங்க.’’

செய்வதறியாது விக்கித்துப் போய் நின்றது அந்தக் குடும்பம். சில உறுப்பினர்களின் அழுகை அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கேட்டது. சிலர் நெஞ்சைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டார்கள். யார் யார் எங்கெங்கு போய் என்ன பாடெல்லாம் படப்போகிறோமோ’ எனப் பயந்தபடியே கிளம்பத் தயாராக, அரைமணி நேரமிருக்கும், மறுபடியும் அதே நம்பரிலிருந்து அழைப்பு.

``ஹலோ...’’

``சொல்லுங்க...’’

``ஸாரிங்க. ஒன்பது பேருக்கும் பாசிட்டிவ்னு தவறுதலாச் சொல்லிட்டோம். பாசிட்டிவ் கேஸின் கான்டாக்ட்டில் இருந்தவர்கள் லிஸ்ட்டைப் பார்த்துட்டு தவறுதலா, அப்படிச் சொல்லிட்டோம். உங்க ரிசல்ட் இனிமேல்தான் தெரியும்.’’

தொலைபேசி ஆலோசனை மையம்
தொலைபேசி ஆலோசனை மையம்
GCC

ஆசுவாசம் ஆனாலும் ``யோவ்... என்னய்யா வேலை பார்க்கிற’’ எனக் கேட்டார் இவர்.

மறுமுனையில் போனை வாங்கிய வேறொரு அலுவலர், ``ஸாரி சார், அவர் வாலன்டியர். அதனால தெரியாமத் தப்பு நடந்திடுச்சு" எனச் சொல்லி விட்டுத் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

`கொரோனா’ எனக் கேட்டாலே பலரும் நடுங்கும் இந்த சூழலில், கொஞ்சம் நிதானத்துடன் வேலை பார்க்கலாமே’ எனத் தன்னார்வலர் ஒருவரிடம் கேட்டேம்.

``கொரோனா எப்ப ஒழியும்னு தெரியாத சூழல்ல இருக்கோம். அதனால தன்னார்வலரா ஒர்க் பண்ண ஆரம்பத்துல வந்த மாதிரி தைரியமா இப்ப யாரும் வர்றதில்லை. பயப்படறாங்க. அதனால இப்ப ஃபீல்டுல இருக்கிறவங்களுக்கு வேலைப்பளு. எங்கள்ல நிறைய பேருக்கு உடல், மனம் ரெண்டுமே இப்ப பாதிக்கப்பட்டிருக்கு.

நீங்களே வேணாலும் இதைச் சோதிச்சுப் பார்க்கலாம். 99……80 நம்பருக்கு கால் பண்ணிப் பாருங்க. என்னை மாதிரி ஒரு வாலன்டியர் அவர். கொரோனா பாசிட்டிவ்.

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்
GCC

`மாத்திரையைப் போட்டுட்டு வேலையைப் பாருங்க’னு இந்த நிமிடம் வரை வேலை வாங்கிட்டுருக்காங்க.

`எக்ஸ்க்யூஸ் மீ. நான் கொரோனா பாசிட்டிவ் வந்திருக்கேன். மே ஐ ஹெல்ப் யூ’ன்னபடி போய் ஃபீல்டு ஒர்க் பண்ற காட்சியை யோசிச்சுப் பாருங்க? எப்படி இருக்கும்? என்றவர்,

வாலன்டியர்கள்லாமே ஒருவித அழுத்தத்திலேயே திரியறாங்க சார். சமயத்துல ரிசல்ட்டை மாத்திச் சொல்லிடுறோம்னா, காரணம் அந்த மாதிரியான அழுத்தம்தான், மத்தபடி, அலட்சியமெல்லாம் இல்லீங்க’’ என்றார்.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடன் கேட்டபோது, ``சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தன்னார்வலர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் பாதுகாப்புகளையும் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம். உதாரணமாக, மாநகராட்சியில் 25,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதுவரை 200-க்கும் குறைவான பணியாளர்களுக்குத்தான் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி தரப்பில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததின் காரணமாகத்தான், பாதிப்பு இந்த அளவு குறைந்து காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களோடு கைகோத்துள்ள தன்னார்வலர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, தினமும் காலையில் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. விட்டமின் மாத்திரைகளும், சத்து மாத்திரைகளும் தொடர்ச்சியாக கொடுக்கப்படுகிறது. தன்னார்வலர்களில் யாருக்கேனும் அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக உடல் பரிசோதனை செய்ய அனைத்து வகையான ஏற்பாடுகளும் அந்தந்த பகுதிகளிலேயே செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
ரமேஷ் கண்ணன்

தொற்று உறுதி செய்யப்பட்ட தன்னார்வலர் பணிக்குச் செல்ல வற்புறுத்தப்பட்டார் என்று நீங்கள் கூறுவது போன்று நிகழ்வு நடந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும். அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் அதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும். இந்தப் பேரிடர் காலத்திலும் களத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாது சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் பாதுகாப்பை நாங்கள் 100 சதவிகிதம் உறுதிசெய்துள்ளோம்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு