Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 21

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 21

Published:Updated:
இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘இன்னும் ரெண்டு மாசத்துல நடந்திட முடியுமா? கை உயர்த்த இன்னும் எவ்வளவு நாளாகும்? வீட்ல இருந்து நானேதான் தனியா வந்தேன் டாக்டர். நானே ஓலா ஆட்டோ புக் பண்ணி வந்துட்டேன். இம்ப்ரூவ் ஆறேன்ல?’ - கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, இந்தக் கேள்விகளைக் கேட்டு எழுந்து செல்லும் அவர், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு வங்கி அதிகாரி; ஹாக்கி விளையாட்டு வீரரும்கூட. அவர் விடைபெறும்போது கதவைத் திறந்துவிடச் சென்றால், ‘டாக்டர் ப்ளீஸ்... வேண்டாம்... நானே கதவைத் திறப்பேன்...’ எனத் தன்னம்பிக்கையை சற்றும் தளராமல் வைத்திருக்கும் அவர், பக்கவாத பாதிப்புற்ற நண்பர். அவர் உடலில் நடக்கும் மிக மெல்லிய முன்னேற்றம் காய் கனிவதுபோலக் கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் மிக மிக மெதுவாக நடைபெறுகிறது. அவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார், சரியான சிகிச்சையுடன். குறிப்பாய் உடற்பயிற்சிகள் மற்றும் இயன்முறை சிகிச்சைகளுடன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘நாளைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து 5 மணிக்கெல்லாம் கிளம்பி 8 மணிக்கெல்லாம் பாண்டிச்சேரி போயிடணும்’ எனத் திட்டமிட்டு இரவில் படுத்தவரால், அதிகாலையில் எழ முடியவில்லை. நோய்தான் எழுப்பியது. படுக்கையில் புரள முடியாமல், படுக்கையிலிருந்து எழ முடியாமல், அருகில் படுத்திருந்த மனைவியைக்கூட சத்தமாகக் கூப்பிட்டுச் சொல்ல முடியாமல் வாய்குழறி, ஊர்ந்தபடி சென்று தன் இருப்பைச் சொன்னபோது, மொத்தக் குடும்பமும் முடங்கிப்போயிற்று.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

பெரும்பாலானோருக்கு இடப்பக்க மூளை கொஞ்சம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இடப்பக்க மூளையில், அதன் நுண்ணிய ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்தக் கசிவு, அடைப்பு கொஞ்சம் நீடித்ததாகவும், சில நேரங்களில் உடலோடு தங்கிப்போய்விடுகின்ற பாதிப்புகளைத் தந்துவிடுவதாகவும் அமைந்துவிடும். பேசும் திறனைத் தரும் மூளையின் ‘பிராக்கோஸ்’ ஏரியாகூட மூளையின் இடப்பக்கத்தில்தான் உள்ளது. எனவே, அங்கு ஏற்படும் பாதிப்புகளின் விளைவாக, வலதுபக்க உடலின் இயக்கம் பாதிப்பதோடு, பேச முடியாத சூழலும் சேர்கிறது. நினைத்தவற்றை வாயால் சொல்ல முடியாமல் கண்களால் கடத்தப் பரிதவித்து அவர்கள் திணறுவதைப் பார்க்கும் நம் கண்களில் கண்ணீர் வரும். நடுங்கும் தங்கள் விரல்களால் நம் கைகளைப் பற்றும்போதுதான் பக்கவாதத்தின் பரிதவிப்பு மொத்தமாய்ப் புரியும்.

சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், இளவயதில் ரத்தக்கொதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வரும் காலங்களில் பக்கவாத நோயின் பிடியும் கூடும் என்றே மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மருத்துவ எச்சரிப்பை விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ளாமல், ‘சும்மா எப்போதும் பயமுறுத்தாதீங்கய்யா’ என அலட்சிய விமர்சனங்களை அள்ளித்தெளிப்பது, ஒரு சமூக அநீதி. 50 வயதில், எழுந்து போய்ச் சிறுநீர் கழிக்க முடியாமல், ‘அடல்ட் டயப்பர்’ வாங்கவோ, வாங்கியதைக் கழற்றியும் மாட்டியும் விடவோ வழியில்லாமல், படுக்கையிலேயே கழித்து, யாரேனும் வந்து தன்னைச் சுத்தப்படுத்தி விடுவார்களா என்று காலைவரை காத்திருக்க வேண்டிய வலியில், வாழ்வு மொத்தமாய்க் கசக்கும். படுக்கையில் புரண்டு படுக்காததால் சூரிய ஒளி, காற்று முதுகில் படாமல் படுக்கைப் புண்கள் ஏற்படும். அவை தரும் வலியை வார்த்தைகளாக்க முடியாத உளவியல் வலியும் சேர்ந்து துன்புறுவோரைப் பார்த்தால் மட்டும்தான், நாம் எவ்வளவு அக்கறையாக இருக்க வேண்டும் என்பது புரியும். சொல்லப்போனால், பக்கவாதம் வராது பார்த்துக்கொள்வது, டெங்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வதைவிட எளிதுதான். தேவையெல்லாம்... கொஞ்சம் அக்கறையும் கரிசனமும், சில மெனக்கெடல்களும்தான்.

பொதுவாக, பெண்களுக்குப் பக்கவாதம் வருவது குறைவு. காரணம் அவர்களுக்கான பிரத்யேக சுரப்பான ஈஸ்ட்ரோஜெனின் அளவு என்கிறார்கள் ஆய்வாளர்கள். சினை முட்டையைப் பாதுகாத்து, புதிய உயிருக்கான உடலை மட்டும் பெண்ணின் ஈஸ்ட்ரோஜென் தரவில்லை. அந்த ஹார்மோன், அவள் மூளைச் செல்களைப் பாதுகாக்க, அங்குள்ள அவளது ரத்தக்குழாயின் வலுவையும் சேர்த்துப் பாதுகாக்கின்றது. குடும்பத்தில் பக்கபலமாய் அவள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பை, இறைவனும் இயற்கை அன்னையும் இயல்பாய் அவளுக்குக் கொஞ்சம் ஸ்பெஷலாகத் தந்திருக்கிறார்கள் போலும்.

ஆனால் அதே நேரம், மாதவிடாய் கடந்த மகளிருக்கு சர்க்கரையும் ரத்தக்கொதிப்பும் இருக்கும்பட்சத்தில், ஒருவேளை பக்கவாதம் வந்தால் அதன் ஆபத்து ஆண்களைவிட அதிகம் என்று சொல்லப்படுகிறது. ‘பொதுவாகவே, ஆணோ பெண்ணோ, சர்க்கரையும் ரத்தக் கொதிப்பும் சேர்ந்து இருப்பது கொஞ்சம் ஆபத்தான கூட்டணி. இரண்டையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் பக்கவாதத் தடுப்பின் முதல்வழி’ என்கின்றார்,

‘மூளை எனும் மூலவர்’ நூலின் ஆசிரியர், திருச்சி மருத்துவக்கல்லூரி நரம்பியல் பேராசிரியை மருத்துவர் வேணி. பக்கவாதம் பக்கத்தில் வராமல் இருக்க, மூளையை எவ்வளவு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பல விஷயங்களை அந்த நூலில் சொல்லிச் செல்கிறார் வேணி. எளிய தமிழில் மிகப்பெரிய மருத்துவ விஷயங்களைக்கூடப் புரியும்படி சொல்ல முடியும் என்பதற்கு, இந்தச் சிறிய நூல் மிக முக்கிய உதாரணம். ஒவ்வொரு மருத்துவத்துறையிலும் உள்ள மருத்துவர்களும் மருத்துவப் பேராசிரியர்களும், இப்படித் தங்களது துறை குறித்த பெரிய விஷயங்களை எளிய தமிழில் அடிக்கடி எழுதினால், தடுப்பூசி தடுக்காத பல நோய்களை இவ்வெழுத்துகள் தடுக்கும்.

‘பக்கவாதம் வந்தால் மிகப்பெரிய மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டுமா? அங்கே அவசர சிகிச்சை மற்றும் உயர் சிகிச்சைக்கு அவர்கள் செலவழிக்கச் சொல்லும் தொகையில், உடன் செல்பவருக்கும் லேசாகப் பக்கவாதம் வந்துவிடும்போல் உள்ளதே...’ என்போருக்கு முக்கியமான ஒரு தகவல். தமிழக அரசின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களிலும் TAEI-SCRIPT (Tamilnadu Accident and Emergency Initiative - Stroke Care, Rapid Intervention with Plasminogen Activator and Thrombectomy) பிரிவு இயங்குகிறது. நவீன மருத்துவம் சொல்லும் Golden Hours எனும் நான்கு மணி நேரத்துக்குள், 108 மூலமாகவோ வேறு வாகனத்திலோ விரைந்து இங்கே வந்துவிட்டால், பக்கவாதத்திலிருந்து காப்பாற்றிவிடலாம் என்கின்றனர் அரசு மருத்துவமனைகளின் நவீன மருந்துவர்கள். நான்கு மணி நேரத்துக்குள், தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இவ்வசதி உள்ள ஒரு மருத்துவமனைக்கு விரைந்து சென்றுவிட முடியுமா? கூகுள் மேப்பில் கொஞ்சம் பார்க்க வேண்டும். டாஸ்மாக்கை முக்கு மூலையெல்லாம் திறந்து பக்கவாதம் முதல் முழு நோய்க்கூட்டத்தையும் பாட்டிலில் அடைத்து அனுப்பும் அரசாங்கம், இந்த மாதிரி வசதியுள்ள மருத்துவ மனைகளை மேலும் பரவலாக்க மெனக்கெடலாமே!

‘எம்புள்ள நீட் எக்ஸாம்ல 635 மார்க் வாங்க எதனாச்சும் மூலிகை மருந்து இருக்குமா டாக்டர்? ஏழு மலை ஏழு கடல் தாண்டி இருந்தால்கூடப் பரவாயில்ல. அவர் சும்மாதான் இருக்கார், அவரை அனுப்பி வாங்கி யாந்துருவேன்’ எனப் பரிதாபமாய்க் கேட்கும் ‘மார்க்’ மம்மிகள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பாதுகாக்கப்பட வேண்டிய மூளை உங்கள் பிள்ளையுடையது இல்லை, உங்களுடையதுதான். எப்போதும் மனது பரபரப்புடன் இருப்பவர்கள்தான் பக்கவாதத்தால் பாதிப்புறுகின்றனர். பதற்றத்தையும் பரபரப்பையும் நீங்கள் குறைத்தே ஆக வேண்டும். யோகாசனப்பயிற்சியும், தியானப் பயிற்சியும், நல்ல உணவுப் பழக்கமும் பக்கவாதத்தைத் தவிர்க்கப் பெரிய அளவில் உதவுவதாக மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. என்ன உணவு? என்னென்ன யோகா? பெட்டிச் செய்திகளைப் பாருங்கள்.

மூளையின் இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் சமீபத்தில் நடந்தவை அல்ல. 4,000 ஆண்டுகளுக்கு முன் போரில் வெட்டுப்பட்ட மூளையைப் பார்த்த கிரேக்க அறிஞர்கள், ‘கபாலத்துக்குள் ஒரு சதை இருக்கிறது. இதில் ஏற்பட்டுள்ள காயம் அவனுக்குப் பேச்சை வரவைக்கவில்லை. கூடவே வலிப்பு தருகின்றது’ என ஆவணப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. பின்னாளில், ரோம மருத்துவ அறிஞன் கேலன் பல உயிரினங்களின் உடற்கூறுகளை ஆய்வுசெய்து மூளை மிக முக்கியமானது எனச் சொல்லியுள்ளான். இந்திய மருத்துவ வரலாற்றில், யூகியும் சரகரும், ‘வலிப்பு நோய் மந்திரப் பேய் நோயெல்லாம் இல்லை, மருந்து சாப்பிட்டு சரிபண்ணிக்கொள்ளப்பா’ என மூளையில் செயல்படும் மருந்துகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று பக்கவாதம் தாக்கிய நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு விரையும்போது rtPA மருந்துகள் மூலம் ரத்த உறைவைக் கூடிய மட்டும் அகற்றி, பக்கவாதத்திலிருந்து காப்பாற்றும் அளவுக்கு நவீன மருத்துவம் உயர்ந்திருக்கின்றது (அய்யா! உடனே இந்த மருந்தை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடாதீர்கள். மிக கவனமாக ரத்த உறைதல் நிலையில் மட்டுமே உபயோகிக்கும் மருந்து இது. ரத்தக் கசிவிலும் பக்கவாதம் வரும். அதற்கு இம்மருந்தே எமனாகிவிடும்). ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகள் விஷயத்தில், அதன் அறிவியல் நுட்பம் புரியாது சுய வைத்தியம் செய்வது ஆபத்து. உறைதலைத் தடுக்கும் சில மருந்துகளை எடுக்கும்போது, ஒரு சில கீரைகள், காய்கறிகள், மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் சொல்கின்றன. ‘வாஸ்து சரியா இருக்கா?’ எனப் பல கல்சல்டன்சி வைத்துப் பார்க்கும் நாம், ‘வாழ்வு சரியா இருக்கா?’ என்பதைக் குடும்ப மருத்துவர் மூலம் சரிபார்த்துக்கொள்வதும் அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கியமான ஒரு விஷயம், பக்கவாதம் வரும் அறிகுறியைப் பல நேரங்களில் தவறவிடுவதுதான் மிகப்பெரிய தவறு. எப்போதேனும் நொடிப்பொழுதில் வரும் நிலைகுலைய வைக்கும் தலைச்சுற்றல் (Syncope), பேச்சுக் குழறல், சில மணித்துளிகள் நாக்கு அல்லது கைகால் மரத்துப்போதல் முதலான அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது. Transient Ischemic Attack எனும் இப்பிரச்னையை ஒரு முறை சந்தித்து முழு நலனுடன் கடந்தவர்கள், வரும்காலத்தில் பக்கவாதத் தாக்குதல் வராமல் பாதுகாத்துக்கொள்வது மிக மிக முக்கியமான பொறுப்பாகும். சர்க்கரையோ ரத்தக்கொதிப்போ இருக்குமானால் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சீரான உணவுப்பழக்கம், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனையுடன் ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளைச் சரியாக எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

மரபு ரீதியாய் தாயோ தந்தையோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், கூடுதல் அக்கறை அவசியம். மரபாய் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறியும் சோதனைகள்கூட இன்று நவீன மருத்துவத்தில் வந்துவிட்டன.

கோல்டன் ஹவரில் மருத்துவமனை சென்று பக்கவாதம் தடுக்கப்பட்டுவிட்டால் நன்று. ஆனால், பலருக்கும் அப்படி நேரத்துக்குள் சென்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் தடுக்கப்பட முடியாமல் ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் நிகழ்ந்து, நகர்வுகள் முடக்கப்பட்டால்? அப்போது, சித்த மருத்துவம் - வர்ம மருத்துவம் - இயன்முறை மருத்துவம் - அவசியமான நவீன மருத்துவம் எனும் ஒருங்கிணைந்த கூட்டணி மிக மிக இன்றியமையாதது. இப்படியான ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான ஆய்வுகளும் அதை வெகுசனத்திற்கு அரசு மருத்துவமனைகள் மூலம் எடுத்துச்செல்வதும் இன்றைய காலத்தின் கட்டாயம். இப்படியான ‘ஒருங்கிணைந்த கூட்டணி’யைத் தனியாரில் பெற முயலும்போது அது சாமான்ய மக்களுக்குப் பெரும் சுமையாகவும், பல நேரங்களில் சாத்திய மற்றதாகவும் ஆகிப்போகிறது. எப்படி அவசர சிகிச்சைக்கு அரசு SCRIPT சிகிச்சை முறையைக் கொண்டு வந்துள்ளதோ, அதேபோல் நாள்பட்ட, ஒருங்கி ணைந்த சிகிச்சை தேவைப்படும் பக்கவாதத்தில் புதிய ஒருங்கிணைந்த மருத்துவ வழிமுறையை அரசு ஏன் செயல்படுத்தக் கூடாது?

- இனியவை தொடரும்...

மூளை பாதிப்பைக் காக்கும் மருந்துகள்!

இன்னா நாற்பது இனியவை நாற்பது

மஞ்சள்

புற்றுநோய்ப் பெருக்கம், நோய்க்கிருமிப் பெருக்கம் இவற்றைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட மஞ்சள், மூளை நாளங்களில் ரத்த உறைதலைத் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Bisdemethoxycurcumin எனும் மஞ்சளின் கூறு மூளையில் ரத்தம் உறைதலைத் தடுப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தினம் உணவில் மஞ்சள் சேர்ப்பது ஆகச்சிறந்த மருத்துவம். பொங்கல் - சாம்பார், சோறு - ரசம், வடை - சாம்பார், பூரி - கிழங்கு, கோழிக்கறி மசால் என எல்லாவற்றிலும் மஞ்சள் சேர்ப்பவர்கள் நாம். எங்காவது ஓட்ஸ் கஞ்சியில், பீட்ஸாவில், பர்கரில், பாஸ்தாவில் மஞ்சள் தூவிப் பார்த்திருக்கிறீர்களா? இனி வியாபாரத்துக்காகத் தூவினாலும் தூவுவார்கள்.

பூண்டு - வெங்காயம்

ரத்தம் உறைவதையும், ரத்தத் கொதிப்பையும், கொஞ்சம் ரத்தக் கொழுப்பையும் தடுக்கும் உணவுகள் இவை. பூண்டை வேகவைத்தும் வெங்காயத்தைப் பச்சையாகவும் தினம் சாப்பிட, மூளைக்கு நல்லது. பூண்டு 10 பற்களும், வெங்காயம் 10 துண்டுகளும் உண்ண வேண்டும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

செம்பருத்தி - வெள்ளைத் தாமரை இதழ்

இரு பூவிதழ்களும் இதயத்துக்கும் மூளைக்கும் ஆனவை. ரத்தக்கொதிப்பைக் குறைப்பதற்கும், பக்கவாதத்தைத் தடுப்பதற்கும் உங்கள் அத்தனை மருந்துகளுடன் இப்பூக்களின் தேநீரையும் பருகிவாருங்கள்.

திராட்சை விதை

திண்டுக்கல்லின் விதையுள்ள பன்னீர் திராட்சை, விதையில்லா கலிஃபோர்னியன் அல்லது பிற வெளிநாட்டுத் திராட்சைகளைவிடப் பல விஷயங்களில் நல்லது. திராட்சை விதையின் எக்ஸ்ட்ராக்ட் மூளையின் ரத்த உறைவைக் குறைப்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. விதையோடு பன்னீர் திராட்சையைச் சாப்பிடுங்கள். கொஞ்சம் துவர்த்துப் புளிப்பது, வாழ்வை இனித்து நகர்த்த உதவும். அதில் அடிக்கும் ரசாயனத்தை மட்டும் நிறுத்தச்சொல்ல வேண்டியது இன்னொரு போராட்டம்.

இஞ்சி

உலகில் இதைப் பயன்படுத்தாத பாரம்பர்ய மருத்துவங்கள் இல்லை எனலாம். ஜப்பானிலிருந்து ஜமைக்கா வரை ஒவ்வொரு நாட்டின் பாரம்பர்ய மருத்துவத்திலும் இஞ்சிக்கு முதலிடம் உண்டு.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமி இல்லை’ என்கிற மருத்துவ கானா சொன்னதும் அதைத்தான். இஞ்சித் துவையல், இஞ்சித்தேநீர், இஞ்சித்தேன், இஞ்சிச்சாறு என ஏதேனும் ஒரு வகையில் இதை உணவாக்கிக்கொள்ளுங்கள்.

தொக்கணமும் (herbal oil massage therapy)

வர்ம சிகிச்சையும்

பக்கவாதத்தில் பாதிப்புற்ற பின்னர் செய்யவேண்டிய மிக முக்கியமான சிகிச்சைகள் இவை. ஒவ்வோர் உடலுக்கும் ஏற்றவாறு மூலிகைத் தைலங்களை சித்த மருத்துவரைக் கொண்டு தேர்ந்தெடுத்து, வர்ம சிகிச்சையைப் பிரதானமாக வைத்து இச்சிகிச்சையை அளிக்க வேண்டும். நட்சத்திர ஓட்டலில் செய்யப்படும் சொகுசு மசாஜ் அல்ல இது. உடலுக்கேற்ற தைலத்தையும், நோய்க்கேற்ற வர்மப் புள்ளிகளையும் வைத்து, இயன்முறை சிகிச்சையாளர் (Physiotherapist) அறிவுரையுடன் அளிக்கப்படும் இச்சிகிச்சைதான், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலம் தாமதிக்காமல் தங்களின் மருந்துகளோடு எடுக்க வேண்டிய முக்கியமான ஒருங்கிணைந்த சிகிச்சை. பாதிப்புற்றோரின் குடும்ப உறுப்பினரும் இச்சிகிச்சையில் நோயாளியுடன் நின்று அவர்களுக்கு உரிய பயிற்சிகளைச் செய்துவிடுவது விரைந்து உடல்நலத்தை மீட்டுத்தரும்.

மூளைக்கான முக்கிய மூச்சுப்பயிற்சி

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகளில் முக்கியமானது, ரத்தக்கொதிப்பு. அதைக் குறைக்க உதவும் முக்கியப் பயிற்சி, சீதளி பிராணாயாமம். நாவை நீளவாக்கில் மடக்கி (ரப்பர் பேண்ட் போட்டெல்லாம் மடக்க முயலாதீங்க, ஒரு நல்ல யோகப் பயிற்சியாளரிடம் கத்துக்கோங்க) மூச்சை வாய் வழி இழுத்து, நாசி வழியாக வெளிவிடும் மிக எளிய பயிற்சி இது. ரத்தக்கொதிப்புக்கான மருந்துகளுடன் இப்பயிற்சியை தினம் செய்யுங்கள்; பக்கவாதம் பக்கத்தில் வராது.