Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 22

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 22

Published:Updated:
இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

“முதல்ல கொஞ்சம் கையை எடுக்குறீங்களா? எனக்குக் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு!’’ - ‘மௌனராகம்’ திரைப்படத்தில் கதாநாயகி ரேவதி, நாயகன் மோகனிடம் சொல்லும் ஒரு ‘மணி ரத்ன’ வசனம் இது. பிடிக்காதவன் தொடுதலின் அருவருப்பையும் விலக்கலையும் இதைவிடக் கூர்மையாகச் சொல்லிவிட முடியாது. படம் வந்து 33 வருடங்கள் ஆகியிருந்தாலும் திரையை ரசிக்கும் இன்றைய 40, 50 வயதுக்காரர்களுக்கு, அந்த வசனம் ஆழ்மனதில் கட்டாயம் ஒட்டியிருக்கும். காரணம், அந்தக் காலத்தில் மெல்லிய, அழகிய காதலை வெளிப்படுத்த அதிகபட்ச உணர்வு என்பது, சுண்டு விரலைப் பற்றுவதும், கைகளைக் கோப்பதுமான தொடுதல்கள் மட்டும்தான். முத்தமெல்லாம் ‘பேட் பாய்ஸ் பண்றது’ என அவர்களின் காதல் ரூல் புத்தகத்தில், ஆணி அடித்துத் தொங்கவிடப்பட்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`மச்சான், அனாடமி க்ளாஸ்ல அவ புக் கொடுத்தப்ப சுண்டுவிரல் பட்டு என்னென்னவோ ஆகிப்போச்சுடா!”

“என்னடா ஆச்சு?”

“4400 வோல்ட் வந்து பட்டமாதிரி... அய்யோ!”

“நாயே... 4400 வோல்ட் உன் சுண்டுவிரல்ல பட்டா என்னாகும் தெரியுமா... இந்த ஃபார்மலின்ல கிடக்கிற பாடியைவிடக் கருகி, எரிஞ்சு சாம்பலாயிருப்ப தெரியுமா?”

அன்று நண்பன் ஒருவன் நக்கலாகச் சொன்னதுகூட ஞாபகம் இருக்கிறது. பிடித்தவரின் சின்னத் தொடுதலுக்கு அன்று சிலிர்ப்பாகி சின்னாபின்னமாகிப்போன தலைமுறைதான் இன்றைய நாற்பதுகள். ஆனால் இப்போதைய இளசுகளைப் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் கல்லூரி போர்ஷன், காதல் போர்ஷனில் எவ்ளோ படிக்காமப்போயிட்டோம்’ எனப் பொங்கிப் புகைவிடாத நாள் கிடையாது. ஆண் பெண் நட்பில், கைகுலுக்கிக்கொள்வது, தோளில் கைபோட்டுச் சுற்றுவது, அன்பைப் பரிமாறும் விதமாகக் கட்டியணைப்பது என இவற்றிலெல்லாம் ஒரு புதிய உலகம் பிறக்கத்தான் செய்கிறது. Good touch, bad touch படித்து வந்த குழந்தைகள், தொடுதல் எனும் தொடர்பு மொழியில் இன்று அழகான, அன்பான கவிதைகளை மட்டுமே எழுதுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடுதல் எனும் உணர்வு எவ்வளவு அற்புதமானது? என்றோ நட்பிலும் காதலிலும் அன்பிலும் தொட்ட விஷயங்கள் இன்னும் விட்டுப்போகாமல் எவ்வளவு இருக்கின்றன? இன்றைய நாற்பதுகள் அதே அன்பை, நட்பை, காதலை வெளிப்படுத்தத் தொடுதலை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார்கள்? கொஞ்சம் தொட்டுப்பார்க்கலாமா?

கருப்பைக்குள்ளேயே நாம் முதன்முதலாகக் கற்ற உணர்வு தொடுதல் என்கிறது மருத்துவம். தொடுவது மூளைக்குள் மணி அடிக்கவைக்கும் வைபவம். தொடுதல் என்பது வெறும் சூடு, குளிர்ச்சியை மட்டும் உணரவைப்பதற்காகப் படைக்கப்பட்டதல்ல. தொடுதல் மூலம் அது நட்பா, கோபமா, அன்பா, அரவணைப்பா, அங்கீகாரமா, காதலா, காமமா என எல்லாவற்றையும் மூளை புரிந்துகொள்ளுமாம். ‘Painful pinch but I desire’ எனக் கிளியோபாட்ரா கிளுகிளுப்பாய்ச் சொன்ன ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள், மூளையின் அறிவியல் அறியப்படாத காலத்திலேயே எழுதப்பட்ட, ஆணுலுகத்தை உசுப்பேற்றிய வசனம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

மொழிகள் உருவாகாத காலத்தில், தொடுதல் மூலமாக நிறைய விஷயங்களை அழகாய்க் கடத்தியவர்கள் நாம் என அறிவியல் சொல்கிறது. இன்னும் சொல்லப்போனால் பார்வைத்திறன், கேள்வித்திறன் இல்லாத குழந்தைகூட தொடுதல் உணர்வு சரியாக இருக்கும்பட்சத்தில் உலகைச் சமாளிக்கும் என்கிறது ஆய்வு. நட்பிலும், காதலிலும், திருமணமான பொழுதிலும் அடிக்கடி நடந்த சின்னச் சின்னத் தொடுதல்கள் சொன்ன கவிதைகள், காலம் செல்லச் செல்ல அலங்காரமற்றுப்போய்விடுகின்றன. இப்போதெல்லாம், எப்போதாவது எங்காவது பள்ளத்தில் இருந்து ஏற முடியாமல் சிரமப்பட்டு, ‘ஏங்க, கொஞ்சம் பிடிங்க’ எனச் சொன்னால்கூட, ‘சரியா கையைப்பிடிச்சு ஏறித் தொலையேன்’ எனக் கரித்துக்கொண்டே கைகொடுக்க, அப்போது மட்டுமே தொடுதல் நடக்கிறது. மற்றபடி தற்செயலாய்த் தொட்டுக்கொண்டால், ‘அங்க இவ்வளவு இடம் இருக்குல்ல, கொஞ்சம் நகர்ந்து தொலையேன்’ என்பதும், அல்லது கொஞ்சம் தொட்டுத்தான் இன்றைக்குக் காய் நகர்த்துவோமே எனத் தொட்டால், ‘வீட்டுல வளர்ந்த புள்ளைங்க இருக்கும்போது விவஸ்தையே இல்லாம’ என வெடுக்கென விலகுவதும் நாற்பதின் இயல்பாகிவருகிறது.

‘அப்படி என்ன பொது இடத்தில் அசிங்கமா தொட்டுப் பேசிக்கிட்டு, ஒரு விவஸ்தை வேணாம்’ என யாராவது சொன்னால், உண்மையில், அவரிடம்தான் அசிங்கங்களும் பொறாமையும் இருக்கின்றன என்று அர்த்தம். இந்தக் கட்டுரையை கோவை விமான நிலையத்தில் என் கைப்பேசியில் நான் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது, என் எதிரே ஒரு தம்பதி தன் 10+ வயதுப் பையனுடன் உட்கார்ந்திருந்தார்கள். விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பையனைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் அம்மா, தூக்கம் வராமலேயே தன் கணவனின் தோளில் லேசாய்த் தலைசாய்க்க, அவர் பார்க்காத பொழுதில் அவரின் கண்பார்த்துத் திரும்பிய கணவனின் முகத்தில், சிறு அசைவும் இல்லாமல் பெரும் மகிழ்ச்சி போய்ச் சென்றதை என்னால் உணர முடிந்தது. தொட்டது தோளில்; தொட்ட பொருள் மனைவியின் கன்னம். அங்கே தொடங்கியதென்னவோ ஒரு மொழியில்லாத கவிதை. கருவிகளில்லாமல் ஒரு சிம்பொனி.

இப்படியான சின்னச் சின்னத் தொடுதல்கள் எல்லாம், வாழ்வின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கும் நடுவயதுக்காரர்கள் பலரின் வாழ்வில் தொலைந்தே போய்விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லாத் தொடுதலும் காமத்துக்கான குறியீடு இல்லைதான். ஆனால் சரியான பொழுதில் தொடுதல் அற்புதமான காமத்துக்கான தொடக்க ஆட்டமும்கூட. ‘சார், ஐயுஐ(IUI - Intrauterine insemination) பண்ணச் சொல்றாங்க; நேரா இக்ஸீ(ICSI - Intracytoplasmic sperm injection) பண்ணிடலாமான்னும் தோணுது. ஒருவாட்டி உங்களைப் பார்த்து நேச்சுரலா நடக்க வாய்ப்பிருக்கான்னு பேச வந்தோம்’ என, PWD அலுவலக சூப்பரின்ட ண்டன்ட் ரேஞ்சில், கை முழுக்கக் கலர் கலராய்க் கோப்புகளைத் தூக்கி வந்த 35 வயதுகளில் இருந்த அந்தத் தம்பதியிடம் பேசியபோது, தீண்டாப் பிரச்னையின் தீவிரம் அங்கும் தென்பட்டது. ‘ரெண்டு பேரும் ரொம்ப பிஸி; இப்பவெல்லாம் ‘அதுல’ ஆர்வம் குறைஞ்சுட்டே வருது. ஆனாலும் எப்படியாச்சும் டி13, டி14-ல கண்டிப்பா தொட்டுக்குவோம்’ என்ற ரேஞ்சில் அவர்கள் பேசினார்கள். அப்போதுதான், சிலருக்குக் குழந்தைப்பேறு தள்ளிப்போக உயிரணுக்கள், கருமுட்டைகள் தொட்டுக்கொள்ளாமல் இருப்பதைத் தாண்டி, சம்பந்தப்பட்ட இருவரும் தொட்டுக்கொள்ளாமல் பிஸியான இயந்திரங்களாய் இருப்பதும் காரணம் என்பது புரிந்தது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

தொடுதலில் பலவகை இருப்பதாக மருத்துவ உளவியல் சொல்கிறது. பாராட்டைச் சொல்ல, பாசத்தைக் காட்ட, பரிதவிக்கையில் பாதுகாப்பை உணர்த்த, தனித்திருக்கையில் நானும் உடனிருக்கிறேன் எனக் காட்ட எனக் காதலைத் தாண்டி, தொடுதல் உணர்த்தும் உணர்வுகள் ஏராளம். மெனோ பாஸிலும் ஆண்ட்ரோபாஸிலும், தனித்திருக்கும் உணர்வாலும் பாதுகாப்பற்ற உணர்வாலும் முட்டும் அழுகையின்போது, மாத்திரைகள் செய்யாத மாயத்தை கரம் பற்றல், தோள் சாய்தல் நிகழ்த்தும். விரல்களில் சொடக்கு எடுத்தலிலிருந்து வாஞ்சையாக முதுகைத் தடவுதல் வரை, உங்கள் தொடுதல் எப்படியும் இருக்கலாம். எல்லா உயிருக்கும் இப்படியான வாஞ்சையான ஸ்பரிசங்கள் பாதுகாப்புணர்வைத் தரும். அறிவியல் சொல்லும் முக்கிய விஷயம் என்னவென்றால், வாஞ்சையாய்த் தொட்டுத் தடவிக் கொடுப்பதால், தீண்டப்படுபவர் உள்ளம் மட்டுமல்ல, தீண்டுபவர் உடலும் மருத்துவப்பலனைப் பெறுகின்றது என்பதுதான். ஆதலினால் தொடுதல் செய்வீர்!

தொட்டுச் செய்யும் சிகிச்சைகள், நம் உடலினுள் கழிவுகளைச் சுமந்து செல்லும் நிண நீர் ஓட்டத்தைச் சீராக்கி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வைப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

காதலில், திருமணமான பொழுதில், இணையை ஆர்வமாய், ஆதரவாய்த் தொடுதலில் காட்டும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்ச மாய்த் தொலைந்துபோவது நம் சமூகத்தின் சாபம். இதற்கு சமூகத்தின் போலிக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஆறிப்போய்விட்ட டிகாக்ஷனாகிப்போன காமத்தைத் தாண்டி, சாவனிசச் சிந்தனையும் ஈகோவும் முக்கிய காரணங்கள். ஆக்ரோஷமான உரையாடலில்கூட, ‘நான் இருக்கேன்பா’ எனச் சொல்லி ஆற்றுப்படுத்தி அமைதியாக்க அவள்/அவன் புறங்கையின் மேல் அழுத்தமான ஒரே ஒரு தொடுதல் போதும். அந்தத் தொடுதலும் பற்றலும் சொல்லும் ஆதரவை, ஆயிரம் வார்த்தைகள் கொண்டும் சொல்ல முடியாது. வார்த்தைகள் மூளையில் சென்றுசேரும் இடம் வேறு; தொடுதல் சென்றுசேரும் இடம் வேறு. தேவைப்பட்டால் அந்தத் தொடுதல், ‘மூளையின் உணர்வை ஊற்றுப்படுத்தும் அமைக்டலா(amygdala)வில் ஆக்ஸிடோசினைத் திருகிவிடும்’ எனத் தொடுதல் விஞ்ஞானம் திரும்பத் திரும்பச் சொல்கின்றது.

தொடுதலில் ‘நம் மரபினர் ரொம்பப் பின்னாடி’ என்கின்றன ஆய்வுகள். காரணம் நம் ஆணாதிக்கப் பண்பாட்டுக் கூறுகளும்கூட. ஒரு காபி குடிக்கச் செல்லும் இடத்தில் ஆணும் பெண்ணும் எத்தனை முறை தொட்டுக்கொள்கின்றனர் என ‘Haptic communication (non verbal communication)’ குறித்த ஆய்வு ஒன்றின் முடிவு இப்படிச் சொல்கிறது: தென்னமெரிக்கர்கள் 180 தடவையாம். ஆசிய மரபினர் இரண்டு முறையாம். பொதுவாய் குளிர்ப்பிரதேசத்தினர் அதிகம் தொட்டுப் பேசுகின்றனர், கை குலுக்குகின்றனர், கட்டிப்பிடிக்கின்றனர், கன்னம் உரசிக் கொள்கின்றனர். கொளுத்தும் வெயிலுள்ள நம் பகுதியில் சீதோஷ்ணம் காரணமாகக்கூட அது குறைந்திருக்கலாம் எனச் சொல்கின்றனர். சீதோஷ்ணம் காரணமோ இல்லையோ, ‘அவன் யாரோ என்னவோ தெரியலை; அதெல்லாம் தோஷம்’ என்று ஒதுக்கும் கேவலமான, தலைகுனியவைக்கும் சாதியத் தீண்டாமை மண்டிக்கிடந்த நிலமென்பதாலும் நம்மிடமிருந்து இந்தத் தொடுதல் எனும் அற்புத உணர்வு தூரவைக்கப்பட்டுவிட்டது.

பல மருந்துகள் எழுதி, பல ஸ்கேன்கள் பார்த்து, நோயர் திகைத்தும், மருத்துவர் தயங்கியும் நிற்கும்பொழுதில், ‘ராஜா அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா’ என நோயாளியின் தோள் தொட்டுச் சொல்லும் வார்த்தைகள் பல மாயாஜாலங்களை மருத்துவ உலகில் செய்யும். அதேபோலத்தான், முதலில் தட்டிச் சொல்லும் ஆசிரியரின் பாடம் முதுகு வழி மூளைக்கு ஏறும். தொட்டுச் செய்யும் சிகிச்சைகளில் ஒன்றான ‘மூலிகைத் தைல மசாஜ் சிகிச்சை’ சித்த ஆயுர்வேத உலகில் மிகப்பிரபலம். பக்கத்து மாநிலமான கேரளம் கணிசமான அந்நியச் செலாவணியை ஆயுர்வேதத்தின் மூலம் பெறுவதில், இந்த மூலிகைத் தைல புற சிகிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது. கூடவே, இதன் சந்தையைப் பார்த்த பல வியாபாரிகளும், விடுதிகளும் ஆயுர்வேதத்தின் பெரும் மருத்துவ வழிமுறையான பஞ்சகர்மா சிகிச்சையை, அதன் பெரும் பயனை, தனித்துவத்தை, நுட்பங்களை எல்லாம் தூரவைத்துவிட்டு, ‘தைல மசாஜ்’ எனச் சுருக்கி தவறாய் வழிநடத்திப் பணம் பறிப்பது, வருத்தப்படவைக்கும் ஒன்று.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

சித்த மருத்துவம் தொட்டுச்செய்யக் கற்றுக்கொடுத்த மருத்துவத்தின் பெயர் ‘தொக்கண சிகிச்சை’. ‘தேரன் தரு’ எனும் சித்த மருத்துவ நூல் இந்த தொக்கண சிகிச்சையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. உடல்பிரிவுக்கேற்ற, உடல் தகுதிக்கேற்ற தைலங்களைத் தேர்ந்தெடுத்து, தட்டல், இறுக்கல், அழுத்தல், இழுத்தல், கட்டல், பிடித்தல், முறுக்குதல், மல்லாத்துதல், அசைத்தல் என ஒன்பது பிரிவுகளைத் தேரன் அந்த நூலில் நோய்க்கேற்றவாறு நடத்தச் சொல்லியிருக்கிறார். மருத்துவம் பார்க்கும் வைத்தியர் மட்டும் இதை நோயாளிகளிடம் செய்யட்டும். கட்டுரையை வாசிக்கும் நாற்பது வயதினர், இந்தக் ‘கட்டல் முறுக்கல்’களை எல்லாம் எசகுபிசகாக வீட்டில் செய்தால், பின்னர் குடும்ப வன்முறை வழக்குகளில் சிக்க நேர்ந்துவிடலாம்.

தொக்கண சிகிச்சை இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் சில ஆயிரம் ஆண்டுகளாகவே பிரபலமாக இருந்துவரும் மருத்துவ முறை. சீனாவில் சீன மூலிகை மருத்துவத்திலும், தாய்லாந்தின் தாய் மருத்துவத்திலும், இந்தோனேசிய புற மருத்துவத்திலும், கொரியாவின் சுஜோக் மருத்துவத்திலும் இந்த மசாஜ் சிகிச்சைகள் நெடுங்காலமாக உள்ள புற சிகிச்சை முறைகள். இப்படியான தொட்டுச் செய்யும் சிகிச்சைகள், நம் உடலினுள் கழிவுகளைச் சுமந்து செல்லும் நிண நீர் ஓட்டத்தைச் சீராக்கி (lymphatic drainage), நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வைப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மூட்டு வலி, முதுகுவலி மட்டுமல்ல, சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் வரை, முறையான புற சிகிச்சைகள், மருந்துகளுக்குப் பக்கபலமாக இருந்து நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றனவாம். அதே நேரம், உலகெங்கும் மசாஜ் எனும் பெயரில் நடக்கும் அட்டூழியங்களைப் பற்றி அறிந்துவைத்துக்கொண்டு, நல்லவற்றைப் பகுத்தாய்ந்து பயன் பெறுவது முக்கியம்.

கதவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குழந்தையின் வெளித்தெரியும் கால் சொல்லும் ஹைக்கூ மாதிரி, அவன் அவசரமாகக் கிளம்புகையில் அவனது நாற்பதின் வழுக்கையை அவள் சீப்பால் அட்ஜஸ்ட் செய்து அழகனாக்குவது மாதிரி, 3 மிமீ இடைவெளியில் முன்னே நின்று சட்டை பட்டனை மாட்டி விடுவது மாதிரி, சாப்பாட்டில், ‘இந்தக் கூட்டைக் கொஞ்சம் வெச்சுக்கி ட்டாதான் என்ன?’ என்று சொல்லி, தடுக்கவரும் அவன் புறங்கையில் கூட்டைப் பரிமாறுவது மாதிரி, உள்ளங்கையை அழுத்திப் பிடித்தலும் ஆயிரம் அன்பைச் சொல்லும். ஈகோ கொஞ்சம் கால்மானிப்பிடி அதிகமுள்ள ஆணுக்கு, அவன் அம்மணி தொட்டால் அது தொலைந்தே போகும். தொட்டால் பூ மட்டும் அல்ல, வாழ்வும் மலரும்!

- இனியவை தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism