Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 23

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் - 23

Published:Updated:
இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
இன்னா நாற்பது இனியவை நாற்பது

ம்பதிக்குள் வாய்ப்பேச்சு சண்டையாக மாறும்போது, பரம்பரைவரை இழுத்துக் குத்திக் குதறுவது 40 வயதுக்காரர்களின் குணம்.‘பரம்பரை புத்தி மாறுமா என்ன? இத்தனை வருசமா குப்பை கொட்டுறோம், எங்களுக்குத் தெரியாதாக்கும்...’ என்ற அங்கலாய்ப்புகள் அதிகரிக்கும். குழம்பில் உப்பு இல்லை என்றால், குரோமோசோம் சோதனையெல்லாம் செய்யாமலேயே, உப்பு குறைந்ததற்கான மரபுப் பின்னணியைக் கண்டறியும் உன்னத மூளை, நம் ஊரில் பலருக்கும் நடுவயதில் வந்து சேரும். திருமணமான புதிதில் அப்ரென்டிஸாக இருக்கும் ஆரம்பக்கட்ட வாழ்வில், சண்டைகள் பெரிதாய்த் தொடர்வது இல்லை. காலையில் காணாமற்போகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், 40, 45-களில் வரும் சண்டைகள் அப்படியானதல்ல. அது அடிக்கடி எல்லைதாண்டிய தீவிரவாதமாகி, `எப்போது யார் அணுகுண்டை வீசி, மொத்தமாய்த் தரைமட்டமாகப்போகிறார்களோ?’ என்கிற கவலையுடனே தினமும் நகரவைக்கும். `அணுகுண்டு வீசவேபடாது’ என்றாலும், அந்த பயத்திலேயே நசுங்கி நடைப்பிணமாய்த் திரியும் மக்களாய், நாற்பதில் நகரும் கூட்டம் இப்போது நகர்ப்புறத்தில் அதிகம். இம்மாதிரியான சண்டைகளில் அடிக்கடி மரபை இழுத்து வசவுபாடுவது நம் மரபுப் பழக்கம். முதலில் எதிர்த்தரப்பின் அம்மா, அப்பாவில் ஆரம்பித்து, ஒண்ணுவிட்ட, இல்லையேல் முப்பத்தி மூணாவது விட்ட அண்ணன் தம்பி வரை அந்தக் குடும்பத்து குரோமோசோமின் ஓரம் சாரம் எல்லாம் கண்டறிந்து, இன்றைய பிரச்னைக்குக் காரணமாகக் கோத்துவிடும் கலை தமிழ்ச்சமூகத்தின் தனிக் கலை. இப்படி, மரபை இழுத்துக் கும்மியடிப்பதன் பின்னணியிலும் ஓர் அறிவியல் இருக்கத்தான் செய்கிறது.

`சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்.’

இன்னா நாற்பது இனியவை நாற்பது

- இது ஔவையாரின் மிக முக்கியமான தனிப்பாடல். நாம் பள்ளியில் படிக்கிற காலத்தில், இந்த வரிகளை மேலோட்டமாக, ‘ஒழுங்கா படிடா; முயற்சி செய்து மனப்பாடம் செய்தேன்னா எல்லாம் சாத்தியம்’ எனத் தட்டையாக வீட்டிலோ அல்லது பள்ளியிலோ சொல்லிக் கேட்டு நகர்ந்திருப்போம். ஆனால் அந்த தனிப்பாடலில் ‘கைப்பழக்கம் - மனப்பழக்கம் - பிறவிப்பழக்கம்’ என்கிற மூன்று படி நிலைகளில், ஔவையார் மனதின் ஆற்றலை விவரித்தது சாதாரண விஷயமல்ல. 1900களில் சிக்மண்ட் ஃபிராய்டு மனம் குறித்த முதல் கருதுகோளை எழுதியிருப்பதைப் படிக்கும்போது, ஔவையின் அந்த அட்டகாசமான வரிகள், கீழடியின் காலக் கரித்துண்டு கள்போல் நம்மை அப்படியே உறையவைக்கின்றன.

நம் மனதை Conscious, Subconscious, Unconscious என மூன்று படிமங்களாகச் சொல்லியுள்ளார் சிக்மண்ட் ஃபிராய்டு. நம் மனமானது, நமது ஒவ்வொரு முனைப்பிலும், நடத்தையிலும் 10% கான்ஷியஸ் நிலையிலும், 50 - 60% சப்கான்ஷியஸ் நிலையிலும், 30% அன்கான்ஷியஸ் ஆகவும் இயங்குகிறதாம். இதை சிக்மண்ட் ஃபிராய்டு தனது Psychopathologies கருதுகோளாகத் தெரிவித்ததுதான் மருத்துவ உலகைப் புரட்டிப் போட்ட மிக முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்பு. கான்ஷியஸ் மைண்டை ஔவை சொன்ன சித்திரமும் கைப்பழக்க நிலையாகவும், சப்கான்ஷியஸ் மைண்டை செந்தமிழும் கல்வியும் தரும் நாப்பழக்கம், மனப்பழக்கமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஔவை சொன்ன கொடையும் தயையும் நட்பும் தரும் பிறவிப்பழக்கம் அன்கான்ஷியஸ் மைண்ட் என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

சிக்மண்ட் ஃபிராய்டின் உளவியல் அறிவியல், மேலோட்டமான தயார்நிலை மனதை கான்ஷியஸ் மைண்டின் பணி என்றும், படித்தும் பார்த்தும் மனதில் பதிவிட்ட அடையாளங்களை நினைவுபடுத்தி யோசிக்கும் சில மைக்ரோ விநாடிகளில் மனம் எடுக்கும் நிலை சப்கான்ஷியஸ் மைண்டின் பணி என்றும் சொல்கிறார். மேலும், நம் அப்பா - தாத்தா வரிசையிலிருந்து ஆரம்பித்து, நம் தலைமுறையின் மூத்த முதல் குரங்கின் குணம் வரை உள்ள பதிவுகளின் அடிப்படையில் நடந்துகொள்ளும் நிலையை அன்கான்ஷியஸ் மைண்டின் பணி என்கிறார் அவர். ஔவையார் நிச்சயம் சிக்மண்ட் ஃபிராய்டு மாதிரி ஒரு நரம்பியல் மருத்துவராக இருந்திருக்கவில்லை. ஆனால் அவரது தமிழும், சிந்தனையும், அச்சமூகப் பண்பாட்டு மரபும் சிக்மண்ட் ஃபிராய்டின் சிந்தனை ஓட்டத்தை வைத்திருந்ததை மறுக்க இயலாது.

மனித மனம், மூளையின் இந்த மூன்று படிமங்களையும் கொண்டே ஒவ்வொரு கணமும் இயங்குகிறதாம். கான்ஷியஸ் 10% ஆகவும், சப்கான்ஷியஸில் 60% - 70% ஆகவும், இந்தப் பிறவிப்பழக்கம் 30%-ஐயும் கொண்டுதான் மனம் பணியாற்றுமாம். எந்தக் குரங்கில் இருந்து நாம் புறப்பட்டோமா, வழியில் எந்தப் புலி, சிங்கம், புல்லுருவி, புயலையெல்லாம் பார்த்து அதிலிருந்தெல்லாம் நம்மைக் காத்துக் கொண்டோமோ, அதன் பதிவுகள் அத்தனையும் நம் மூளையின் ஆழ்மன அன்கான்ஷியஸ் மைண்ட் பதிவில் இருக்கும் என்கிறார் ஃபிராய்டு. ‘சட்னியில் ஏன் உப்பில்லை?’, ‘பக்கத்து வீட்டு ஆன்ட்டிகிட்ட ஏன் இவர் பல்லைக் காட்டுறார்?’ என அத்தனை விஷயங்களிலும் மூளை தான் படித்த எம்.எஸ்ஸி., பிஎச்.டி அறிவை வைத்து மட்டும் யோசிப்பதில்லை. தன் மரபில் மூத்த தலைமுறையான மனிதக் குரங்கின் அத்தனை அனுபவத்தையும், சமயோசிதத்தையும் சேர்த்தே, இப்போது இந்த சட்னி சங்கடப் பிரச்னையிலும் யோசிக்கிறது என்கிறது ஃபிராய்டின் மனம் குறித்த ஆய்வு.

பிறவிப்பழக்கம் என்பதை சாதி, மதப் பழக்கம் எனச் சுருக்கிப் பார்த்திடக் கூடாது. இந்தப் பிரிவினைகள் எல்லாம் வந்து வெறும் 1500 - 2000 வருடங்கள்தான் ஆகின்றன. ஆனால், மனிதன் இப்பூவுலகிற்கு மனிதக் குரங்கிலிருந்து புரொமோஷனாகி வந்து ஒன்றரை மில்லியன் வருடங்கள் ஆகின்றன. இத்தனை இத்தனை தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட பதிவுகள் எல்லாம் மனிதனின் வலது மூளையில் உட்கார்ந்திருக்கலாம்; அவை இப்போதும் நம் ஒவ்வொரு செயலிலும், சண்டையிலும் துளியூண்டு துளியூண்டு வெளிப்படும் என மூளை அறிஞர்கள் சொல்கிறார்கள்.

கூர்மையான மூக்கு, முன் நெற்றி வழுக்கை மட்டும் மரபாய் வருவதில்லை. ‘அட! இருக்கட்டும்...’ என அன்பைத் தெளித்து அரவணைத்து, அடுத்தபக்க அகங்காரத்தை வெல்வதும் இன்னொரு ‘சமர்த்துக்’ குரங்கின் பிறவிப் பழக்கம்தான். ‘சார், மேடம் எல்லாம் எந்த டைப் குரங்கு?’ என்பதுதான், வீட்டில் கட்டிப்பிடி சண்டையா, கட்டிப்பிடி வைத்தியமா என்பதைத் தீர்மானிக்கிறது. கற்ற கல்வியும், உற்றமும் சுற்றமும் அரவணைத்துச் சொல்லித்தந்த பண்பு மட்டும்தான், அந்த முதல் குரங்கிலிருந்து வந்த 30% பிறவிப்பழக்க ஒதுக்கீட்டைக் கொஞ்சம் அழுத்திக் குறைக்கிறது என்கிறது, மரபு மூளை மனம் குறித்த அறிவியல்.

பிறவிப்பழக்கமாய் இப்படிப் பல விஷயங்கள் குரங்கெனத் தொடர்வது ஒருபக்கம் இருக்கட்டும். அதைத் தாண்டி, இப்பிறவியிலேயே நாம் சில பழக்கங்களை, துரித வாழ்வியல் ஓட்டத்தில் நம் மனதில் பதியவிட்டுக்கொண்டே இருக்கிறோம். பழைய ஆழ்மனக் குரங்கும், புதுசாய் இப்போது ம(ன)ரத்தில் நாம் ஏற்றிவிட்ட குரங்குகளும் சேர்ந்து உருவாக்குவதுதான், Agitated mind. இன்றைய மருத்துவ உலகம் வாழ்வியல் நோய்களுக்கான காரணிகளில், அநேகமாக எல்லா நோய்களுக்கும் காரணமாகச் சொல்வது இந்தப் பரபரப்பான மனதைத்தான். குறிப்பாய் நாற்பதுகளில் குடியேறும் ரத்த சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய், மாதவிடாய் முடிவில் ஏற்படும் நலமின்மை, மாரடைப்பு இவை அனைத்திற்கும் இந்தப் பரபரப்பான, சற்றுக் கோபம் தூக்கலான மனம் ஒரு மிக முக்கிய காரணம். இந்த மனநிலையில் அன்றாடம் நடக்கும் சண்டைகள், காலையிலிருந்து எடுத்த மருந்து மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தின் பயன்களையும் சிதைக்கத் தொடங்கும். இன்றைய நவீனத் தலைமுறையில் இந்த Agitated mind மிக அதிகம். ஏன்?

அன்றைய தலைமுறை, சாதாரணமானவர்கள் நிறைந்த உலகம். மாதச் சம்பளக்காரர்கள். சிறு விவசாயிகள். ஒரு போகம் மழை பொய்த்துப் போய்விட்டதென்றால், குலதெய்வத்துக்கு நேர்ந்துகொண்டு வானம் பார்த்துக் காத்திருந்தவர்கள். அப்படியான சாதாரணமானவர்களுக்கு எல்லாம், ‘தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும், தவறாய் நடந்தால் போலீஸ் பிடித்துக்கொள்ளும்’ என்பதான பயங்களே இருந்தன. 35 வருடங்களுக்கு முன், ‘கணக்கு வரலையால... அப்ப நீ கடை வெச்சுப் பொழைச்சுக்கோ’ எனச் சொல்லி ஃபெயிலாக்கி அனுப்பப்பட்ட என் வகுப்புத்தோழன் ஆறுமுகம், அன்றைய தலைமுறைக்காரர்களில் மிச்சசொச்சம் உள்ளவர்களில் ஒருவன். ரொம்ப சாதாரணமானவன்.

இந்த அறக்கப்பறக்க மனம் கொண்டு சாதிக்கத் துடிக்கும் நகரத்துச் சாதனையாளர்களுக்கு எல்லாம் தினசரி சவால் ஒன்று உண்டு.

ஆறுமுகம் இப்போது ஊரில் கொஞ்சம் பெரிய கடை வைத்திருக்கிறான். போன வாரம் போனில் கூப்பிட்டு, ‘ஏ மக்கா நீ இந்தவாட்டியாவது தசராவுக்கு வாயேம்ல, தெக்கு பசார்ல அத்தனை சாமி சப்பரமும் ஒண்ணா நிக்கும்; ஆயிரத்தம்மன் கோயில் சப்பரம் தேர் மாதிரி இந்தவாட்டி அழகா கட்டியிருக்கானுவ. வாயேம்ல’ எனச் சொன்னான். அந்த ஆறுமுகத்துக்கு அன்றைக்குக் கணக்கு வரலை. இன்றைக்கும் பெரிய கணக்கு, அரசியல் கணக்கு எதுவும் வராது. ‘ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி ஏன் விழுந்துடுச்சு?’ என்று கேட்க மாட்டான். ‘எக்கனாமிக் ரெசஷனுக்கு என்ன காரணம்?’, ‘காஷ்மீர்ல ஏன் 370-ஐ தூக்கிட்டாங்க?’ என எதுவும் கேட்கத் தெரியாது. இந்த சாதாரணமானவன் கொஞ்சம் சந்தோஷமாகவும், இந்த Agitated mind இல்லாமலும் இருக்கிறான். அவன் வீட்டம்மாவுடனான சண்டையிலும்கூட, மூக்குச் சிந்தலும் முனகலும் தாண்டி, அந்த சப்கான்ஷியஸ் மைண்ட், அன்கான்ஷியஸ் மைண்ட், அதிலுள்ள மரபின் கடைசிக் குரங்கு வரை உசுப்பேற்றும் சண்டைகள் எதுவும் நடப்பதில்லை.

ஆனால் இங்கே நகரத்தில் சாதாரண மானவர்களை அதிகம் காணோம். சாதாரணமானவனாய் இருப்பது ‘ஜெனட்டிக் நோயாக இருக்குமோ?’ எனப் பார்க்கப்படுகிறது. மந்தமாக இருந்தால் அவன் மாஸ்டர் செக்கப்புக்குப் போயே ஆக வேண்டும். இவன் அடையாளம் வேண்டியும், ஜெயிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சம்பளம் தவிர தக்க சமயம் பார்த்து மியூச்சுவல் ஃபண்டில் சேமித்து, ஆன்லைனில் பங்குகளை வர்த்தகம் செய்து, வங்கி இருப்பைக் கூட்டிக்கொள்ளும் புத்திசாலியாய் இருக்க வேண்டும். தன் பிள்ளைகளை மூணாம் வகுப்பிலேயே நீட், ஐஐடியின் ஜேஈஈ- போன்ற நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில்தான் Agitated mind அதிகம் தென்படுகிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இந்தக் கூட்டத்தில் சிலர், டென்ஷன் தலைக்கேறும்போதெல்லாம், நம்மாழ்வார் படத்தைத் தன் வாட்ஸ் அப் டிபியில் போட்டுவிட்டு, ‘ஷப்பா... பேசாம நானும் ஊருக்குப் போய் உடனே செட்டில் ஆகி, விவசாயம் பண்ணப்போறேன்’ என்று வசனம் பேசிவிட்டு, மறு வாரம் புதிய ஃபிளாட்டுக்கு இஎம்ஐ கட்டத் தொடங்குவார்கள்.

இந்த அறக்கப்பறக்க மனம் கொண்டு சாதிக்கத் துடிக்கும் நகரத்துச் சாதனையாளர்களுக்கு எல்லாம் தினசரி சவால் ஒன்று உண்டு. தினசரி தப்பிப்பது. காலையில் கொலைவெறித் தாக்குதலுடன் சாலையில் ஆக்ரோஷமாகப் பயணிக்கும் வாகனங்களிலிருந்தும், சாலையோர கொலைகார பேனர்களிலிருந்தும் தப்பித்து ஆபீஸுக்கும் வீட்டுக்கும் போக வேண்டும். நிரந்தரமில்லாத பணியை தினமும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தன் பணியின் கீழேயும் மேலேயும் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் தப்பிக்க வேண்டும். மூச்சு முட்ட ஓடிக் கொண்டிருக்கையில், ஆசுவாசமாக, பழைய பள்ளித் தோழியின் டிபியை யதேச்சையாய் வாட்ஸ் அப்பில் பார்த்து, கொஞ்சமாய் வழிந்து வறுத்து முடிக்கையில், ‘மிஸ் யூ டா’ என எழுதியதை, பதமாய்ச் சுவடில்லாமல் அழித்துவிட்டு, பிக்பாஸிடமிருந்து தப்பிக்க வேண்டும்.

தினம் தினம் இப்படித் தப்பிக்கும் பரபரக்கும் மனம், சப்பரம் பார்க்கப்போகும் சாதாரண ஆறுமுகத்துக்கு சத்தியமாய் இல்லை. அவனுக்கு வசதியும் வருமானமும் சற்றுக் குறைவுதான். அதுபோலவே நோயும், சாதிக்கும் நகரத்தானைவிடக் குறைவுதான். சாதனையாளனா, சாதாரணமானவனா? எது உங்கள் சாய்ஸ்?

- இனியவை தொடரும்...