Published:Updated:

பயங்கரவாத அச்சம், சுகாதாரப் பணியாளர்களின் தியாகம்... ஆப்பிரிக்கா போலியோவை வென்றது எப்படி?

Health officials administer polio vaccine to children
Health officials administer polio vaccine to children ( AP / Sunday Alamba )

ஆப்பிரிக்கா போலியோவை வென்றது எளிதான காரியமல்ல. மிகவும் பின்தங்கிய கண்டமாகக் கருதப்படும் ஆப்பிரிக்கா, போலியோவுக்கு எதிராக முழு மூச்சில் போராடியுள்ளது.

உலகின் கொடூரமான நோயாகக் கருதப்பட்ட சின்னம்மை இன்று உலகம் முழுவதிலும் இருந்து விரட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணம், தீவிர தடுப்பூசிகள் வழங்கப்பட்டதே. அதற்கு அடுத்ததாகப் பல குழந்தைகளின் வாழ்வை பாதித்த போலியோ, இன்று பல நாடுகளில் இல்லை. இவ்வாறு ஒவ்வொரு நாடாக போலியோ இல்லாத நாடாக மாறி வரும் சூழலில், ஆப்பிரிக்கா கண்டம் மொத்தமும், தற்போது வைல்ட் போலியோ வைரஸால் ஏற்படும் போலியோ நோய் இல்லாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கும் போலியோ, முடக்குவாதத்தை ஏற்படுத்துகிறது. தண்ணீர் மூலம் பரவக்கூடிய போலியோ வைரஸ், நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் முடக்குவாதம் ஏற்படுகிறது. போலியோ வைரஸால் சுவாசத் தசைகள் செயலிழந்து இறப்புவரை ஏற்படலாம்.

போலியோ வைரஸில் மூன்று ஸ்ட்ரெய்ன்கள் உள்ளன. அதில் இரண்டு ஸ்ட்ரெய்ன்கள் உலகில் இப்போது இல்லை. மீதமுள்ள அந்த ஒரு வைல்ட் ஸ்ட்ரெய்ன், தற்போது ஆப்பிரிக்காவிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது. போலியோவுக்குத் தடுப்பு மருந்தே சிறந்த மருந்து. 95 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்களுக்குத் தடுப்பு மருந்தால் நோய் எதிர்ப்புசக்தி ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா போலியோவை வென்றது எளிதான காரியமல்ல. மிகவும் பின்தங்கிய கண்டமாகக் கருதப்படும் ஆப்பிரிக்கா, போலியோவுக்கு எதிராக முழு மூச்சில் போராடியுள்ளது. 10 ஆண்டுகளாக உலகில் அறியப்படும் போலியோ நோயாளிகளில் பாதி பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் அங்கு போலியோ தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டன. தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை உள்ள பதற்றமான இடங்களில்கூட தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் பல சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் தன்னலமற்ற உயிர் தியாகத்துக்குப் பரிசாக போலியோ இல்லாத நாடாக ஆப்பிரிக்கா உருவெடுத்துள்ளது.

`ஈசலை கீச்சான் இப்படியும் சாப்பிடுமா?!' பறவை நோக்கலில் கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவங்கள்

1966-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 75,000 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் நெல்சன் மண்டேலா, `போலியோவை ஆப்பிரிக்காவில் இருந்து ஒழிப்போம்' என்ற திட்டத்தை உருவாக்கி, அதில் பல மில்லியன் சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்தினார். கிராமம் கிராமமாகத் தடுப்பு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. இன்றைய போலியோ இல்லாத ஆப்பிரிக்காவுக்கான அடிக்கல் அன்றே நாட்டப்பட்டது.

2014-ம் ஆண்டு சோமாலியா, புன்லேண்ட் பகுதியில் வைல்ட் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு போலியோ நோயாளி இருப்பது தெரிய வந்தது. அதற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு போலியோ பாதிக்கப்பட்ட யாரும் கண்டறியப்படவில்லை. ஆனால், 2016-ம் ஆண்டு ஆப்பிரிக்க, நைஜீரியாவில் ஒரு நோயாளி போலியோவால் தாக்கப்பட்டார். இது ஆப்பிரிக்காவுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.

In this Sunday, Aug. 28, 2016 file photo, a health official administers a polio vaccine to a child at a camp for people displaced by Islamist Extremists, in Maiduguri, Nigeria. Health authorities on Tuesday, Aug. 25, 2020 are expected to declare the African continent free of the wild poliovirus after decades of effort, though cases of vaccine-derived polio are still sparking outbreaks of the paralyzing disease in more than a dozen countries.
In this Sunday, Aug. 28, 2016 file photo, a health official administers a polio vaccine to a child at a camp for people displaced by Islamist Extremists, in Maiduguri, Nigeria. Health authorities on Tuesday, Aug. 25, 2020 are expected to declare the African continent free of the wild poliovirus after decades of effort, though cases of vaccine-derived polio are still sparking outbreaks of the paralyzing disease in more than a dozen countries.
AP / Sunday Alamba

நைஜீரியாவில் உள்ள போர்னோ பகுதி இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு சென்று தடுப்பு மருந்து அளிப்பது சவாலான காரியமாக இருந்தது. ஆனாலும் சுகாதாரப் பணியாளர்கள் படகு வழியாகச் சென்று தங்கள் பணியை மேற்கொண்டனர். சுகாதாரப் பணியாளர்களில் 95 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, தடுப்பு மருந்து பற்றிய தவறான தகவல்களும் புரளிகளும் தடுப்பு மருந்துக்குப் பெரிய தடையாக அமைந்தன. 2003-ம் ஆண்டு சில இஸ்லாமியத் தலைவர்கள், தடுப்பு மருந்தில் இனப்பெருக்கத்தை தடை செய்யக்கூடிய மருந்து இருப்பதாகவும், இஸ்லாமியப் பெண்களுக்கு குழந்தையின்மையை ஏற்படுத்த இது அமெரிக்காவின் சதித் திட்டம் என்றும் பரப்பிய வதந்தியால் கனோ மற்றும் சில வடக்கு மாநிலங்களில் தடுப்பு மருந்துக்கு மறுப்பு எழுந்தது. நைஜீரியன் ஆராய்ச்சியாளர்கள் இது பொய்யான தகவல் எனத் தெரிவித்தும் வதந்திகள் வந்த வண்ணமிருந்தன.

2013-ம் ஆண்டு போக்கோ ஹராம் பிரிவினர், கானோ சுகாதார மையத்தில் தடுப்பூசி அளிக்க வந்த 9 பெண் சுகாதாரப் பணியாளர்களைச் சுட்டுத் தள்ளினர். இவ்வாறு பல இன்னல்களைக் கடந்து, நெல்சன் மண்டேலாவின் கனவு இன்று நனவாகியுள்ளது. இதைச் சாத்தியமாக்கியது... போலியோவுடன் வாழும் நோயாளிகள், மதத்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியே.

போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவரான மிஸ்பாகு லாவான்திடீ, ``போலியோ தடுப்பு மருந்துக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் அவர்களிடம் சென்று பேசுவோம். எங்களைப்போல் உங்கள் குழந்தைகள் கஷ்டப்படாமல் இருப்பதைத் தடுப்பது உங்கள் கடமை என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவோம்" என்கிறார்.

vaccine
vaccine

ஒரு நாடு போலியோ அற்ற நாடாக மாறினாலும், மற்ற நாடுகளின் மூலம் உள்ளே நோய்த்தொற்று ஏற்படலாம் என்பதால் உலக அளவில் போலியோ நோய் அழியும்வரை கண்காணிப்பு அவசியம் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. தற்போது போலியோ தொற்று இருக்கும் இரு நாடுகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு