Published:Updated:

160 பேர், 6 மாதம் கண்காணிப்பு... தமிழகத்தில் எப்படி நடக்கவிருக்கிறது கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை?

Covishield
Covishield

18 வயதுக்கு மேற்பட்ட, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத நபர்களுக்குத் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர உலகம் முழுவதிலும் `தடுப்பூசி' தயாரிப்புக்கான பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள `கோவாக்ஸின் (COVAXIN)' கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் தொடங்கியது.

கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் இந்த இறுதிக்கட்ட பரிசோதனையை நடத்த பீகார், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரிக்கு கோவாக்ஸை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு இம்மருந்தைச் செலுத்தி சோதனையையும் நடத்தி வருகின்றனர் இக்கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள்.

தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள `கோவிஷீல்டு (Covishield)' என்ற தடுப்பு மருந்தின் முதல் கட்ட ஆராய்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் இந்த ட்ரையல் பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) சென்னையைத் தேர்வு செய்துள்ளன.

covid-19 vaccine
covid-19 vaccine

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையும் இந்த ட்ரையல் பரிசோதனைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெறும் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் மனித ட்ரையல் பரிசோதனைக்கு முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகத்திடம் பேசினோம்.

தமிழ்நாட்டில் தொடங்கிய கோவாக்ஸின் பரிசோதனை எப்படி நடத்தப்படுகிறது? - நிபுணர் விளக்கம்

``ஏதேனும் ஒரு நுண்ணுயிரியால் ஏற்படும் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டறியப்படும்போது மேற்கொள்ளும் பரிசோதனைகளில், மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் ட்ரையல் ஒரு முக்கியமான கட்டம். ஒரு நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால், அம்மருந்தைப் பல்வேறு வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே, அதற்கான காப்புரிமை தருவார்கள். இந்தக் காப்புரிமை பெறுவதற்கான இறுதிக்கட்ட பரிசோதனைதான், கண்டறியப்பட்ட மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி நடத்தப்படும் சோதனை.

தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள `கோவிஷீல்டு', ஆய்வகப் பரிசோதனையைக் கடந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு வந்துள்ளது. தடுப்பு மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி நடத்தப்படும் இந்த 2-ம் கட்ட பரிசோதனை பேஸ்-1 (Phase-1), பேஸ்-2 (Phase-2) மற்றும் பேஸ்-3 (Phase-3) என்று மூன்று நிலைகளாக நடைபெறும்.

File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.
File photo shows a patient receiving a flu vaccination in Mesquite, Texas.
LM Otero

இந்த 2-ம் கட்ட பரிசோதனையில் பேஸ்-1 டெஸ்ட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தலா 160 பேருக்குத் தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத நபர்களுக்குத் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சில நாள்களிலேயே 2–வது டோஸ் செலுத்தப்படும். தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறதா என 6 மாதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பேஸ்-1 டெஸ்ட் முடிந்த பிறகு பேஸ்-2, பேஸ்-3 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்களில் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இந்த ட்ரையல் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்" என்றார் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் செல்வ விநாயகம்.

அடுத்த கட்டுரைக்கு