Published:Updated:

கொரோனாவைப் போலவே உலகை அச்சுறுத்தும் பிறழ்தகவல் பெருந்தொற்று! - அபாய எச்சரிக்கை #Infodemic

Infodemic
Infodemic

``நாம், நோய்த் தொற்றோடு மட்டும் போராடவில்லை, பொய்யான தகவல்கள் பரவும் பிறழ்தகவல் தொற்றுடனும் போராடுகிறோம்" - உலக சுகாதார நிறுவனம்.

we're not just fighting an epidemic, we're also fighting an infodemic
WHO

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வாட்ஸ்அப்பில் குறைந்தது 1000 தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஷேரிங்கில் இருக்கின்றன. அதைப் படிக்கும் பத்தில் ஐந்து பேராவது அதை உண்மையென நம்புகிறார்கள். கொரோனா பிரச்னை கூட முடியலாம். ஆனால் அதைப் பரிசோதனை செய்து சிக்கலில் மாட்டும் நபர்களின் எண்ணிக்கை குறையப் போவதில்லை என்பதே இன்றைய சிக்கல். `misinformation',`disinformation' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் போலியான தகவல்களால் பல உயிர்கள் பலியாவதாக அச்சம் தெரிவித்திருக்கிறது யுனெஸ்கோ நிறுவனம்.

Covid -19
Covid -19

இது குறித்து பேசி இருக்கும் யுனெஸ்கோ அதிகாரி கய் பெர்கர் ``கொரோனாவுக்கான தீர்வுகள், அரசாங்கத்தின் அறிவிப்புகள், பெரு நிறுவன முடிவுகள், நட்சத்திரங்களின் கருத்துகள், பொருளாதார நிலைகள் என இந்தப் போலித் தகவல்கள் உலவாத இடமே கிடையாது, எல்லாவற்றிலும், எல்லாத் துறையிலும் போலியான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன" என்று வருந்துகிறார்.

ஆல்கஹால் அருந்தினால் கொரோனா வைரஸ் சாகும் என்பது தொடங்கி, வெயில் காலம் வந்தால் விடிவு வரும் என்பது வரை நாம் கடந்து வந்ததில் போலிச் தகவல்கள்களே ஏராளம். சர்வதேச அளவில் இந்தப் போலிச் தகவல்களைக் கண்டறியவும், அதற்கெதிராகப் போராடவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது யுனெஸ்கோ. இன்று பத்திரிகை ஊடகங்கள் கூட `myth busters', `Fact Check', என உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அப்படி பூம் என்ற ஒரு நிறுவனம் மட்டும், கடந்த ஐந்து மாதங்களில் வெளியிட்ட fact check தகவல்களின் எண்ணிக்கை 178.

Vikatan Factcheck
Vikatan Factcheck

ஈரானில் `ஆல்கஹால் பாய்சனிங்' அதாவது, கொரோனாவுக்கு மருந்து என ஆல்கஹால் கலந்த வேதிப் பொருள் பருகி நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில், கொரோனா வைரஸ் என்பதே மக்களை திசை திருப்பும் ஒரு பொய்யான தகவல், எனும் கான்ஸபிரசி (Conspiracy) தகவல்களை நம்பி, எச்சரிக்கையுடன் நடக்காத பலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். ஆல்கஹால் குணப்படுத்தும் என நம்பி ஐந்து வயதுச் சிறுவனுக்குப் பெற்றோர் கள்ளச் சந்தையில் பெற்ற மதுவை அளித்ததில், அந்தச் சிறுவனுக்குப் பார்வை பறிபோயிருக்கிறது. கிருமிநாசினி உட்கொள்ள சொன்ன டிரம்ப்பின் ட்வீட் பார்த்து, கன்சாஸ் மாகாணத்தில் ஒருவர் கிருமிநாசினி சோப்பு உட்கொண்டிருக்கிறார். பலர் கிருமிநாசினி குடித்ததாகவும் தகவல்கள் வருகின்றன. பொய்யான தகவல் பரப்பியதாக இந்தியாவில் கூட பல பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனிநபர்கள் மட்டும் அல்ல, இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டவை எனும் உண்மைத் தன்மை அற்ற கருத்துகளால் சீனா போன்ற பெரும் வல்லரசுகள் கூட பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாகவே, சர்வதேச அளவில், நோய்த்தொற்றுக்குச் சமமான, மற்றொரு பிறழ்தகவல் பெருந்தொற்றாக, இந்தப் போலிச் தகவல்கள் ஆபத்து விளைவிப்பதாகக் கருதுகிறார்கள். infodemic of misinformation, அதாவது தவறான தகவல்களின் படையெடுப்பால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தீர்வு காண இயலாமல் போகும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதே அவர்கள் கருத்து.

WHO
WHO

நம் நாட்டில், `The Bureau of Police Research and Development (BPRD) எனும் காவல் துறையின் சிறப்பு ஆய்வுப் பிரிவு, காவல்துறையினர் இந்தப் போலித் தகவல்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து விளக்கமான கையேடு வெளியிட்டுருக்கிறது. தனிநபர் நலனுக்கு எதிரானதாக மட்டும் இல்லாமல் இன, மத, சாதிய, மொழி பாகுபாடுகளை உருவாக்குபவையாகவும் போலித் தகவல்கள் இருக்கின்றன. வன்முறையைத் தூண்டும் இத்தகைய சில செய்திகள், காவல் துறையினருக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் பல ஆயிரம் மக்களால் பின்தொடரப்படும் சில பெரும் நட்சத்திரங்கள், முக்கிய தலைவர்கள் கூட ஒரு தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அதைப் பகிர்வது நடக்கிறது. உதாரணத்துக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா தீர கிருமிநாசினியைப் பருகலாம் என்பது போல பதிவிட்ட கருத்துக்கு உலகம் முழுவதும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், கொரோனாவுக்கு எதிராக பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பும் பிரதமரின் அழைப்பைப் பாராட்டி, இதனால் வைரஸ் அழிந்துவிடும் என்பது போல பதிவிட்டிருந்தார். இப்படி பல தவறான செய்திகளை அவர் பரப்புவதாக அவருக்கு சமீபத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பின.

Fake news
Fake news

சமீபத்தில், மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த ஒரு செமினாரில் `Fake News and Misinformation' என்ற தலைப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் அவர்கள் கலந்துகொண்டு உரையாடினார். ``கொஞ்சமும் யோசிக்காமல், உண்மைத்தன்மையை ஆராயாமல் பகிரப்படும் ஃபார்வர்டுகள்தான் ஃபேக் நியூஸ்களின் ஊற்றுக்கண். அதுவும் இது போன்ற தவறான ஃபார்வர்டுகளில் இன மற்றும் மத ரீதியான விஷயங்கள் கொஞ்சம் ஓவராகவே இருக்கின்றன" என்றார் சஞ்சய் கிஷன்.

உங்கள் மொபைலை இப்போது எடுத்துப் பாருங்கள். அவற்றில் டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட மெசேஜ் எத்தனை சதவிகிதம்? ஃபார்வர்டு எத்தனை சதவிகிதம்? அந்த ஃபார்வர்டுகளில் எத்தனை மெசேஜ் உங்களுக்கே தவறென எளிதில் தெரிகிறது? அந்த ஃபேக் மெசேஜ்களில் எத்தனை மத மற்றும் இன ரீதியான பிரச்னைகளை உண்டாக்கக் கூடியவை? 15 நிமிட ஆராய்ச்சியிலே நீதிபதி சஞ்சய் அவர்கள் சொல்வது உண்மையென நாமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால், இவற்றுக்கு என்ன தீர்வு?

``போலித் தகவல்களைப் பரப்புகிறவர்களை, அது போன்ற செய்திகளை ஃபார்வர்டு செய்பவர்களைத் தண்டிக்கலாமா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?" என்பது பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெறுவதுண்டு.

இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசிய நீதிபதி சஞ்சய், ``வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தால் அது பேச்சுரிமை மீது நெகட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சுரிமையைப் பாதிக்காமல் சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகளை உருவாக்குவதுதான் போராட்டமான விஷயமாக இருக்கிறது. இதில் தனி நபர்களுக்கும் பொறுப்புண்டு. அவரவர் பகிரும் தகவல்களின் உண்மைத்தன்மை உறுதிபடுத்திக்கொண்டே அவற்றைப் பகிரவேண்டும்" என்றார்.

நீதிபதி சஞ்சய்
நீதிபதி சஞ்சய்
thewire.in

நீதிபதி சஞ்சய் சொல்வதும் உண்மைதான். எல்லா விஷயங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நன்மையும் தீமையும் கலந்தே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. தீயவற்றைக் கண்டு விலக்க முடியாமல், நன்மையையும் சேர்த்து மூடிவிடுவது சரியான பாதையாகாது. போலித்தகவல் விஷயத்திலும் அதுதான். சென்னை வெள்ளத்தின் போது பல்லாயிரக்கணக்கானோருக்கு உதவியதும் வாட்ஸ் அப்தான். சில நூறு பேரின் மொபைல் எண்களைத் தவறாகப் பயன்படுத்தச் செய்ததும் வாட்ஸ் அப்தான். போலித்தகவல்களை ஃபார்வர்டு செய்பவர்கள் அதைத் தெரிந்தே செய்கிறார்கள் என 100% சொல்ல முடியாது. ஆனால், அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களை இந்த ஃபேக் ஃபார்வர்டுகள் கச்சிதமாகச் செய்கின்றன. உணர்ச்சியின் வேகத்தில் அதை எல்லோரும் ஷேர் செய்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் எதோ சாதித்த மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

`அறிகுறிகள் இல்லாதவர்களுக்குக் கொரோனா பரிசோதனை அவசியமா?' #ExpertOpinion

உதாரணமாக, ரத்தம் தேவை என்ற செய்தியை எடுத்துக் கொள்வோம். இது போன்ற ஃபார்வர்டுகளில் பெரும்பாலும் தேதி இருக்காது. ஒரு குழந்தையின் மருத்துவப் பிரச்னையை உருக்கமாகச் சொல்லியிருப்பார்கள். கீழே நம்மை நம்பவைக்க ஒரு தொலைபேசி எண் தந்திருப்பார்கள். எந்தத் தேதியும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். இதைப் பார்க்கும் ஒருவருக்குக் குழந்தைக்கு எப்படியாவது ரத்தம் கிடைக்க வேண்டுமென்ற பரிதாப உணர்ச்சி எழும். ஆனால், அவர் போக மாட்டார். நண்பர்களிடம் பேசி ஏற்பாடு செய்யவும் மனம் வராது. ஆனால், அவரது பரிதாப உணர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டுமே. 10 வாட்ஸ் அப் க்ரூப்களுக்கு அதை ஃபார்வர்டு செய்துவிடுவார். அவ்வளவுதான். அவர் கடமை முடிந்தது. ஆறுதலும் கிடைத்துவிட்டது.

Fake forwards
Fake forwards

அந்த மெசேஜ் ஓராண்டுக்கு முன்பு பகிரப்பட்டதாக இருக்கலாம். அந்தக் குழந்தை இறந்திருக்கலாம். அல்லது பிழைத்து நல்ல படியாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். இப்போது அந்த எண்ணுக்கு யாராவது அழைத்து ரத்தம் கொடுக்கிறோம் என்றால் அவர்கள் மனநிலை எப்படியிருக்கும்..? இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாமல் ஃபார்வர்டு செய்வது எவ்வளவு பெரிய குற்றம்..? ஆனால், அதை ஃபார்வர்டு செய்தவர் நல்ல எண்ணத்தில் தானே செய்தார்..? இது பரிதாப உணர்ச்சிக்கான உதாரணம். இன்னும் தேசபக்தியில் தொடங்கி பயம் வரை நம்முடைய ஒவ்வோர் உணர்வையும் தட்டியெழுப்பக்கூடிய ஃபார்வர்டுகள் ஆயிரக்கணக்கில் இங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன.

நம்மை ஆசுவாசுப்படுத்த நாம் தட்டும் ஒவ்வொரு ஃபார்வர்டும் எங்கோ யாரையோ பிரச்னையில் தள்ளிக்கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வு எப்போது என்பது தெரியவில்லை. இப்போதைக்கும், அந்தத் தீர்வு நம் விரல்களில்தான் இருக்கிறது. அதைத்தான் நீதிபதி சஞ்சய் ``அவரவர் பகிரும் செய்திகளின் உண்மைத்தன்மை உறுதிபடுத்திக்கொண்டே அவற்றைப் பகிரவேண்டும்" எனச் சொல்லியிருக்கிறார்.

உண்மையா எனத் தெரியாத தகவல் ஒன்றை நாம் பகிராமல் விடுவதால் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், பகிர்வதால் நிச்சயம் நஷ்டம்தான். ஆனால் அது யாருக்கோ. மிக எளிமையான விஷயமாகத் தெரிந்தாலும் மானுடகுலத்தில் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய அடிப்படை விஷயம் ஃபேக் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்யாமல் இருப்பதுதான்.

அடுத்த கட்டுரைக்கு