Published:Updated:

தனிமைக்காலத்துக்கான தயாரிப்புகள்!

டாக்டர் ருத்ரன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் ருத்ரன்

தனிமைத் தடுப்புக் காப்புக்கு முதலில் இது மூன்று வாரங்களுக்கும் மேலாகப் போகலாம் என மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனிமைக்காலத்துக்கான தயாரிப்புகள்!

தனிமைத் தடுப்புக் காப்புக்கு முதலில் இது மூன்று வாரங்களுக்கும் மேலாகப் போகலாம் என மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Published:Updated:
டாக்டர் ருத்ரன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் ருத்ரன்
“என் மனைவியின் தங்கையும் அவரின் 13 வயது மகனும் ஜெர்மனியிலிருந்து இம்மாதம் 12-ம் தேதி இரவு இந்தியா வந்தார்கள்.

தனிமைத் தடுப்புக் காப்பு இருக்கும் என்று தெரிந்தே வந்தார்கள் என்பதால் அதற்கும் தயாராகவே வந்தார்கள். ஆரம்பத்தில் கூறியிருந்தபடி 14 நாள்கள் அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்தும் வாங்கி வைத்திருந்தோம். என் மனைவி அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்ததால் அவளும் அவர்களுடனேயே அந்த 14 நாள்களைக் கழிக்கத் தயாரானார்.

தனிமைக்காலத்துக்கான தயாரிப்புகள்!

எங்கள் வீட்டின் முதல் மாடி முழுவதையும் தனிமைத் தடுப்புக் காப்புக்கான இடமாக்கி வைத்திருந்தோம். கதவுக்கு உள்ளேயே கிருமிநாசினி, சாதாரண நோய்களுக்கான மருந்து, நொறுக்குத் தின்பண்டம் எல்லாமும் சேகரித்திருந்தோம். அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளிவரவில்லை. என் க்ளினிக் பணியாளர்களும் அவர்களிடம் நெருங்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொலைக்காட்சி, கணினி, கணினியில் விளையாடும் உபகரணங்கள், படுக்க, சமைக்க, தூங்க, குளிக்க என எதற்கும் அவர்கள் வெளிவர வேண்டிய அவசியமில்லாமல் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

அந்தச் சிறுவனுக்கும் சலிப்பு வரவில்லை. செல்பேசியில் என்னுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களது உடல்நிலை குறித்தும் மனநிலை குறித்தும் அருகில் செல்லாமலேயே என்னால் மேற்பார்வையிட முடிந்தது. தனிமையில் அந்த வயதுக்கே உரிய கணினி விளையாட்டும், திரைப்படங் களும், நண்பர்களோடு செல்பேசி அரட்டையுமாக அவன் 14 நாள்களை எளிதில் கடந்துவிட்டான். தொலைக்காட்சியிலோ செல்பேசியிலோ ஏதேனும் கொரோனா புரளி/செய்தி வந்தால் அதைப் பற்றி என்னுடன் பேசி, சமாதானம் அடைவான். அவன் அம்மாவும் என் மனைவியும் அவனுடனேயே இருந்ததால் தனிமையாகவும் அவன் உணரவில்லை.

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

அவர்களைவிடவும் எனக்குத்தான் இந்தத் தனிமைத் தடுப்புக் காப்பு இருந்தது! முதல்மாடி முழுக்க அவர்கள் வசம் என்பதால் தரைத்தளத்தில் இருந்த என் க்ளினிக், மற்றும் இரண்டாம் மாடியிலிருந்த என் பிரத்யேக நூலகம், ஓவிய/கணினி அறையிலேயே என் வாழ்க்கை நகர்ந்தது! அவர்களை நேரில் பார்க்கவும் பேசவும் முடியாதது தவிர பெரிய அசௌகர்யம் எனக்கு இல்லை. என் நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டதால், என் க்ளினிக்கில் என்னைப் பார்ப்பவர் தவிர இயல்பான அரட்டை, கலை/இலக்கிய உரையாடல்கள் எதுவும் இல்லை என்றாலும் அது கடுமையாகவோ தொல்லையாகவோ இருக்கவில்லை.

தனிமைக்காலத்துக்கான தயாரிப்புகள்!

கடந்த 5 நாள்களாக க்ளினிக் வருபவர்கள் மூன்றில் ஒரு பங்குதான் என்பதால் எனக்கு என்னுடன் எனக்காகச் செலவிடும் நேரம் கொஞ்சம் அதிகம் கிடைத்தது. படிக்க, எழுத, படம் வரைய என்று திட்டமிட்ட பலவும் முழுமையடையவில்லை. என் பணியாளர்கள் முதல்மாடி போகாமல் நேராக என்னிடம் வரும் வசதி இருந்ததால் எனக்கு வேண்டியவற்றை அவர்கள் வாங்கித் தந்துகொண்டிருந்தார்கள். மீதமுள்ள நாள்களில் படிக்க நினைத்த பட்டியலை ஓரளவு முடிக்க முடியும் என்றாலும் வரைவது, எழுதுவது என்பதற்கு இன்னும் மனநிலை தயாராகவில்லை. மனம் சோர்வடை யாமல் நிதானமாகச் சிந்திக்கவும் செயல்படவும் இசை எனக்கு உதவியதால் மன அழுத்தம் வரவில்லை, எல்லாமும் தயார் நிலையில் இருந்ததால் பதற்றமும் வரவில்லை. ஒவ்வொரு காலையும் கிளிக்க்கூச்சலோடு ஆரம்பித்து, இரவு நட்சத்திரங்க்ளோடு முடியும் நாளின் ஒவ்வொரு நாழிகையும் சுகமாகவே கழிகிறது. நாடு பற்றி, மக்கள் பற்றி யோசிக்கும்போதும் செய்திகள் அறியும் போதும்தான் வருத்தமும் கோபமும்! எந்த உணர்ச்சியையும் இப்போதெல்லாம் என்னை பாதிக்க விடுவதில்லை எனும் பழக்கத்தால் இதிலிருந்தும் அவ்வப்போது மீண்டு இயல்பு நிலைக்கு எளிதாக விரைவாக வர முடிகிறது. இது எல்லார்க்கும் பயிற்சியின் மூலம் சாத்தியம்.’’

டாக்டர் ருத்ரன், தனிமைத் தடுப்புக் காப்பு பற்றிய பொதுவான சில சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார்.

ஒரு சாமானியன் தன் வீட்டில் தனித்திருக்க (க்வாரன்டீன்) வேண்டுமானால் என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?

‘எல்லார் வீட்டிலும் அந்த ஓரிருவரை மட்டும் தனிமைப்படுத்துவது இடநெருக்கடியில் சாத்தியம் இல்லை. அந்த மொத்த வீட்டினருமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். தனிமைத் தடுப்புக் காப்புக்கு முதலில் இது மூன்று வாரங்களுக்கும் மேலாகப் போகலாம் என மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு மட்டுமல்லாமல் சிலருக்கு சிகரெட்டும் மதுவும் தேவையானதாக இருக்கும். திடீரென்று அவற்றை விடும்போது எரிச்சல், கோபம், தூக்கமின்மை ஆகியவை வரலாம். அதற்கும் குடும்பம் தயாராக இருக்கவேண்டும். இந்நேரம் தினமும் மனதுக்கு நெருக்கமானவரோடு செல்பேசியில் தொடர்பு கொள்வது தனிமைப்பட்டிருப்பதை ஓரளவு சமாளிக்க உதவும். படிக்கப் புத்தகங்கள், கேட்க இசை, பார்க்கப் படங்கள் என்று பட்டியலிட்டு அவற்றுடன் காலம் கழிக்க வேண்டும். முதல் வாரத்திலேயே பிடித்த எல்லாவற்றையும் செய்துவிட்டால் சலிப்பு வந்துவிடும்.

தனிமைக்காலத்துக்கான தயாரிப்புகள்!

தனிமைப்பாதுகாப்பில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர், வெளியே வேலை செய்ய முடியாமல் முடங்கிக்கிடப்பவர் ஆகியோரும் உண்டு. கணவன் மனைவி இருவருமே வீட்டிலிருந்து பணிபுரியும் பலகுடும்பங்களில் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால் இறுக்கம் அதிகம். அப்போது குழந்தைகளை விளையாடப் போகுமுன்பும் வந்தவுடனும் கைகளையும் முகத்தையும் நன்றாகக் கழுவும் பழக்கத்தை வலியுறுத்த வேண்டும் அக்கம் பக்கம், மொட்டைமாடி போய் விளையாட விடலாம்.

ஊரடங்கு நாள்களில் வீட்டிலேயே இருப்பவர்கள் உடல், மன ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம்?

முதல் வாரம் சமாளிப்பது சற்று எளிது. இரண்டாம் வாரம் தான் எரிச்சலும் சலிப்பும் வரும். மூன்றாம் வாரத்தில் மனம் சோர்வடையலாம். முதல் வாரத்திலிருந்தே தினசரி இதை இந்நேரம்தான் செய்வேன் (படம் பார்ப்பது, படிப்பது, பணிசெய்வது…) என்று ஓர் அட்டவணை உருவாக்கி அதைக் கடைப்பிடித்தால் சலிப்பும் சோர்வும் சீக்கிரம் வராது. எந்த வேலை செய்தாலும் பின்னணியில் இசை ஒலித்துக் கொண்டிருந்தால் பதற்றம் வராது. செல்பேசியில் அவ்வப்போது நெருக்கமானவரோடு தொடர்பு கொண்டால் தனிமையின் பாரம் தெரியாது.

தனிமைக்காலத்துக்கான தயாரிப்புகள்!

ஊரடங்கு நாள்களில் குடும்பத்தினரோடு இணக்கத்தை எப்படி அதிகரித்துக்கொள்வது?

உறவுகள் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் மெருகேறும். இருவர் இருந்தால் கருத்து வேறுபாடு வருவது இயற்கை. அதை ஒரு சண்டையாக்காமல் இருக்க அடுத்தவரைப் பேசவிட வேண்டும், அதைக் கவனிக்க வேண்டும். எதிரே ஆவேசமாகப் பேசினால் அவர்கள் அடங்கும் வரை காத்திருந்து பதில் தர வேண்டும். நம் கோபம் அவர்களிடம் எதிரொலிக்கும் என்பதால் நம் ஆத்திரத்தை முதலில் அடக்க வேண்டும்; அதற்கு நம் செயல்களை, பேச்சை நாம் நிதானமாகப் பரிசீலித்துத் திருத்த வேண்டும். நிறைய பேச வேண்டும். சேர்ந்தே காரியங்களில் ஈடுபட வேண்டும். அடுத்தவர் தவறாகச் சொன்னாலும் அதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்று யோசிக்கப் பழகவேண்டும். பகிர்தல் - புரிந்துணர்வு இவையே உறவுகளை பலப்படுத்தும்.