Published:Updated:

பேப்பர் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்? வயிற்றுக்குள் பிளாஸ்டிக் செல்லலாம்! - ஐ.ஐ.டி ஆய்வு

இந்த ஆய்வில், ஒரு நாளில் மூன்று முறை பேப்பர் கப்பில் டீ அருந்தும் நபருக்கு 75,000 மிகச்சிறிய நுண் பிளாஸ்டிக் பொருள்கள் உடலுக்குள் செல்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த மழைக்காலத்தில் டீ, காபி நமக்குக் கதகதப்பு அளிப்பதாக இருப்பதால், அடிக்கடி நாம் அதை அருந்துகிறோம். மேலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் காபி, டீ இல்லையென்றால் வேலை நடக்காது என்று அடிக்கடி கேன்டீன், டீ கடைக்குச் சென்று வருபவர்கள் பலர்.

அலுவலக இடைவேளையில் டீ, காபி குடிக்கச் செல்லும்போது அவற்றை பேப்பர் கப்பில் அருந்துவதே பலரின் வழக்கம். மேலும், வெளியில் எங்கு சென்றாலும் பேப்பர் கப்பிலேயே டீ, காபி பரிமாறப்படுகிறது. இந்நிலையில் அந்த காகித கப் பாதுகாப்பானதல்ல என்று ஐ.ஐ.டி காரக்பூர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

paper cups
paper cups

இந்த ஆய்வில், ஒரு நாளில் மூன்று முறை பேப்பர் கப்பில் டீ அருந்தும் நபருக்கு 75,000 மிகச்சிறிய நுண் பிளாஸ்டிக் பொருள்கள் உடலுக்குள் செல்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்கு வழிகாட்டிய ஐ.ஐ.டி காரக்பூரின் இணைப் பேராசிரியர் சுதா கோயல் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், ``காகித கப்பில் உள் பூச்சு பெரும்பாலும் நெகிழிப் பொருள்களால் ஆனது. எங்கள் ஆய்வில், இந்தக் காகித கப்பில் வழங்கப்படும் சூடான பானங்களுடன், காகித கப்பின் உள் பூச்சிலுள்ள நெகிழிப் பொருள்கள் கலந்துவிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூடான திரவம் பட்ட 15 நிமிடங்களில் நெகிழிப்பூச்சு சிதைந்து பானத்தில் கலந்துவிடுகின்றது.

எங்கள் ஆய்வின்படி, சூடான பானம், பேப்பர் கப்பில் 15 நிமிடங்கள் இருக்கும்போது, 25,000 மைக்ரான் அளவு நுண் நெகிழிப் பொருள்கள் 100 மிலி அளவுள்ள சூடான பானத்தில் கலந்துவிடுகின்றன. சாதாரணமாக ஒருவர் பேப்பர் கப்பில் மூன்று முறை ஒரு நாளைக்கு டீ அல்லது காபி அருந்தினால் 75,000 கண்ணுக்குத் தெரியாத நுண் நெகிழிப் பொருள்களும் அவர் வாய்க்குள் செல்கின்றன.

ஆராய்ச்சியின்போது முதலில் 85 முதல் 90 டிகிரி செல்சியஸில் உள்ள சுடுதண்ணீரை காகித கப்பில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் அந்தத் தண்ணீரில் நெகிழிகள் இருக்கின்றனவா என்ற ஆராய்ந்தோம்.

பேப்பர் கப் (மாதிரி படம்)
பேப்பர் கப் (மாதிரி படம்)

பின்னர் காகித கப்பில் வெதுவெதுப்பான நிலையிலிருக்கும் தண்ணீர் (30-40 டிகிரி) ஊற்றி ஆராய்ந்தோம்.

பின்னர் சுடுதண்ணீர் ஊற்றப்பட்ட கப்பில் இருந்த நீர் வெறுக்கும் லேயரை (ஹைடிரோபோபிக் லேயர்) எடுத்து நெகிழியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஆராய்ந்தோம். சுடுநீர் ஊற்றப்படுவதற்கு முன்பு இருந்த நெகிழிப் பூச்சையும் ஆராய்ந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நுண்நெகிழிகள் மூலம் பலேடியம், குரோமியம், காட்மியம் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களும் உடலுக்குள் செல்லலாம் என்று கண்டறிந்தோம்'' என்கிறார் பேராசிரியர்.

பேப்பர் கப்
பேப்பர் கப்

சுதா கோயலுடன் இந்த ஆராய்ச்சியில் வேத் பிரகாஷ் ராஜ், அனுஜா ஜோசப் ஆகிய ஆராய்ச்சி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி காரக்பூர் இயக்குநர் விரேந்திர கே.திவாரி, ``சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு பொருளை வேறு பொருளாக மாற்றும்போது அதை தீர ஆராய வேண்டும் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. நாம் பிளாஸ்டிக் கப்பில் இருந்து காகித கப்புக்கு வேகமாக மாறினோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்துவது இன்றைய அவசியம். நிலையான வாழ்க்கை முறைக்கு நாம் பாரம்பர்யத்திலிருந்து தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு