Published:Updated:

``பிரணாயாமத்தால் இசிஜி-யில் ஏற்பட்ட முன்னேற்றம்!" - இயற்கை மருத்துவர் தீபாவின் கொரோனா வார்டு அனுபவம்

தீபா
தீபா

``நமக்கெல்லாம் நம் மண்ணின் மருத்துவமான இயற்கை மருத்துவத்தின் மீதான நம்பிக்கை, இந்த பேண்டமிக் நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.'' - தீபா

``முதலில் என்95 மாஸ்க், அதன் மேலே ப்ளெயின் மாஸ்க், ஒரு கிளவுஸ் போட்டால் கிழிந்துவிடுகிறது என்பதால், ஒரு கைக்கு இரண்டு கிளவுஸ்கள். மேலும், தலையையும் பாதங்களையும் உறைகளால் மூட வேண்டும். பேன்ட் ஸ்டைலில் அல்லது ரெயின் கோட் ஸ்டைலில் உடல் முழுக்க மறைக்கிறபடி பிபிஇ போட்டுக் கொள்ள வேண்டும். கடைசியாக, கண்களை மறைக்கிற கண்ணாடி. இத்தனையையும் அணிந்துகொண்டு, இரண்டு தளம் முழுக்க இருக்கிற கொரோனா தொற்றாளர்களைச் சந்தித்து, மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் சொல்லிக்கொடுத்து முடிக்கும்போது உடலில் இருந்த அத்தனை சத்துகளும் வியர்வையாக வெளியேறிவிட்டிருக்கும்.

இரண்டு மாஸ்க்குக்குள் இருந்து நான் பேசுவதால் உண்டாகிற மூச்சுக்காற்று, கண்ணாடியைப் புகைமூட்டமாக மறைத்துவிட்டிருக்கும். எதிரில் இருப்பவர் பேசுவது காதில் விழுமே தவிர, உருவம் குத்துமதிப்பாகத்தான் தெரியும். நான் விட்ட மூச்சுக்காற்றையே திரும்பத்திரும்ப சுவாசித்துக்கொண்டிருப்பதால், ஏறக்குறைய மயக்கத்தை எட்டிப் பிடித்திருப்பேன்.

இயற்கை மருத்துவர் தீபா பிபிஇ-ல்
இயற்கை மருத்துவர் தீபா பிபிஇ-ல்

ஆனால் இத்தனை கஷ்டங்களும், `டாக்டர் இப்போ என்னால நல்லா மூச்சுவிட முடியுது' என்று கொரோனா தொற்றாளர்கள் சொல்லும்போது மறந்தேபோய்விடுகிறது'' என்று முகம் மலர்ந்து சிரிக்கிறார், யோ. தீபா. யெஸ், இயற்கை மருத்துவராக நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான யோ. தீபாவேதான். தன் கொரோனா வார்டுப் பணி அனுபவங்களையும், தன் குடும்பம் தன் வேலைக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் செய்துகொண்டிருக்கிறது என்பது பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``தற்போது, மொத்த உலகமும் சிரிப்பையும் நிம்மதியையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறது. காரணம், கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மரண பயம். கொரோனாவால் பாதிக்கப்படுவதைவிட இது மோசமானது. இந்தப் பயத்தால் மன அழுத்தம் வரும். மன அழுத்தம் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது குறைந்தால், கொரோனாவுக்கு நம்மை அட்டாக் செய்வது எளிதாகிவிடும். கொரோனா பிரச்னையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் ரோல், மன அழுத்தத்தைக் குறைப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும்தான். கொரோனா தொற்றாளர்களின் குடும்பங்களுக்கும்கூட இந்த இரண்டு விஷயங்களுக்கான வழிகாட்டலை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.

கொரோனா தொற்றாளர்கள் யோகா பயிற்சியில்...
கொரோனா தொற்றாளர்கள் யோகா பயிற்சியில்...

இந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் ஒரு பாசிட்டிவ்வான தகவலை சொல்ல விரும்புகிறேன். `கொரோனா பேஷன்ட்டால யோகா எல்லாம் செய்ய முடியுதா?' என்று சில டாக்டர்களும் ஸ்டாஃப் நர்ஸ்களும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நமக்கெல்லாம், நம் மண்ணின் மருத்துவமான இயற்கை மருத்துவத்தின் மீதான நம்பிக்கை இந்த பேண்டமிக் நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். வென்டிலேட்டரில் இருந்த சிலர்கூட, `எனக்கு மூச்சுப்பயிற்சி சொல்லிக் கொடுங்க டாக்டர்' என்று கேட்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படிக் கேட்டவர்கள் குணமாகி வீட்டுக்குப் போனதையும் கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது மட்டுமல்ல, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு, `இறந்துவிடுவோமோ' என்று பயத்தில் இருந்தவர்களுக்குக்கூட, `யோக நித்திரா' என்கிற பயிற்சியில் அவர்களுடைய ஆழ்மனதில் இருக்கிற பயத்தைப் போக்கியிருக்கிறேன்'' என்றவர், கொரோனாவிலிருந்து மீண்டெழுந்த சிலரின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

கொரோனா தொற்றாளர்கள்
கொரோனா தொற்றாளர்கள்

``மூச்சு விடுவதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அதன் தொடர்ச்சியாக இ.சி.ஜி-யிலும் லேசான பிரச்னை இருந்தது. அவர், தொடர்ந்து ஒரு வாரம் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க, அடுத்து எடுத்த இ.சி.ஜி-யில் நல்ல முன்னேற்றம் தெரிந்திருக்கிறது. மருத்துவரே ஆச்சர்யப்பட்டதாக என்னிடம் சொன்னார். இன்னுமொரு பெண், அவர் வென்டிலேட்டரில் இருந்தவர். இயற்கை அழைப்புக்குக்கூட மற்றவரின் உதவியை எதிர்பார்த்தவர். அவரும் பிரணாயாமம் செய்து மீண்டிருக்கிறார்'' என்றவரிடம், கொஞ்சம் பர்சனலும் பகிருங்கள் டாக்டர் என்றோம்.

``நான் கொரோனா வார்டில் பணி செய்யப்போகிறேன் என்பது முடிவானதுமே, என் அம்மாவையும் அப்பாவையும் ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டேன். கொரோனா வயதானவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதும், என்னால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். இதைவிட அதிமுக்கியமான காரணம், நான் கொரோனா வார்டில் வேலைபார்க்கப்போகிறேன் என்பது தெரிந்ததுமே அவர்கள் பயந்துவிட்டார்கள். அதற்காக, இயற்கை மருத்துவத்தை நிரூபிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.

மருத்துவர் தீபா குடும்பத்தினருடன்
மருத்துவர் தீபா குடும்பத்தினருடன்
`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!' - விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு

அடுத்து, என் குழந்தைகள். இரண்டு பேருமே, நான் என்ன கஷாயம் கொடுத்தாலும் `அம்மா எது கொடுத்தாலும் நம்ம நல்லதுக்குத்தான்' என்று நம்பி குடித்துவிடுவார்கள். டயட் விஷயத்திலும் அப்படித்தான். என் மூலமாக என் குழந்தைகளுக்கு கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு உணவின் மூலமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வருகிறேன்'' என்றவர், தன் கணவர் பற்றிச் சொல்லும்போது,

``என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியே அவர்தாங்க'' என்று சிரிப்புடன் தொடர்ந்தார். ``கொரோனா வார்ட்டில் நாளொன்றுக்கு எனக்கு மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் வேலையிருக்கும். அதன் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போன் கவுன்சலிங் டியூட்டி இருக்கும். இதெல்லாம் முடிய சாயங்காலம் ஆகிவிடும். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது என்பதால், அவர்தான் பிக்கப், டிராப் இரண்டுமே. பல நாள்கள் என் வேலை தாமதமாகத்தான் முடிந்திருக்கிறது. அப்போதெல்லாம், அவருடைய போன் அல்லது லேப்டாப்பில் வேலைபார்த்தபடியே எனக்காகக் காத்திருப்பார்'' என்கிறார், கண்களில் லேசாகக் கண்ணீர் திரையிட டாக்டர் தீபா சரவணன்.

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை பலன் அளிக்குமா?
அடுத்த கட்டுரைக்கு