Published:Updated:

மகாராஷ்டிராவில் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 15ம் தேதி வரை இக்கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. தினமும் 30,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. ஏற்கெனவே மாநிலத்தின் பல பகுதிகளில் பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் கொரோனாவின் தீவிரம் குறையவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் 28-ம் தேதியிலிருந்து இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனை டீன்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து உத்தவ் தாக்கரே கலந்தாலோசித்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

கூட்டத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், `` 28-ம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன. கோயில்கள், பீச், பார்க் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களும் இரவு 8 மணிக்கு மூடப்படும். அந்த நேரத்தில் ஷாப்பிங் மால்கள் கட்டாயம் அடைக்கப்பட்டிருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாடுகள் இருக்கும் நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. அப்படி விதிகளை மீறி கூடினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் இல்லாமல் வெளியில் சுற்றினால் 500 ரூபாயும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் இரவு 8 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது. இக்கட்டுப்பாடுகள் ஏப்ரல் 15ம் தேதி வரை அமல்பில் இருக்கும். அதன் பிறகு நிலைமையை ஆய்வு செய்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவில்லையெனில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே நாளில் 36,902 பேருக்கு கொரோனா பாதித்துஏற்பட்டிருக்கிறது. பொதுமுடக்கத்துக்குப் பிறகு இந்த அளவுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை. கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் தீயணைப்புச் சாதனங்கள் இருக்கின்றனவா என்பதை தீயணைப்புத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த விரும்பவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருத்துவ சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தேவையான மருந்து மற்றும் படுக்கைகள் இருப்பதை மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். இது தவிர கடைகள், தியேட்டர்கள், கோயில்கள் போன்றவை திறந்திருக்கும் நேரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்யப்படுகிறது.

கொரோனா 2வது அலை... எதிர்கொள்ள கைகொடுக்கும் இயற்கை... மீண்டும் இந்த வழிகளைக் கையிலெடுப்போமா?

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அதிக அளவு கொரோனா தாக்கம் இருக்கும் மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா விதிகளின்படி பணி நேரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக சோதனைகள் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. அதை இன்னும் விரைவுப்படுத்த வேண்டும். கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். செயற்கை சுவாசம், படுக்கைகள், சோதனை சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு