Published:Updated:

`தடுப்பூசி காரணமாக உயிரிழந்தாரா விழுப்புரம் பெண்?' - ஆய்வு முடிவுக்காகக் காத்திருக்கும் அதிகாரிகள்

சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் மறுதினமே உயிரிழந்ததால், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது மகாதேவி மங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி விஜயா (37). கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர் இவர்கள். 01.09.2021அன்று அதே ஊரில் நடைபெற்ற நூறு நாள் வேலையை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) செய்துகொண்டிருந்திருக்கிறார் விஜயா. அப்போது அங்கு வந்த மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்கள், நூறு நாள் வேலை செய்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அப்போது விஜயாவுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவருக்கு திடீரென அன்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அடுத்த நாள் (02.09.2021) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே விஜயா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறியும், அவரின் குடும்பதந்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் பேசினோம்.

``அவங்களுக்கு நிலபலம் என எதுவும் இல்லங்க. விஜயா கணவர் சண்முகம், கட்டட மேஸ்திரி வேலைக்குப் போவாரு. இவங்க கூலி வேலைக்குத்தான் போவாங்க. போன 1-ம் தேதி, எங்க ஊர்ல இருக்கிற ஏரி நீர்வரத்து வாய்க்கால்ல நடந்த நூறு நாள் வேலையில விஜயாவும் வேலை செஞ்சிருக்காங்க. அப்போ, மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அங்க வந்து, `கொரோனா தடுப்பூசி போட்டுகிட்டாதான் வேலை'னு சொல்லி நூறுநாள் வேலை அட்டையை மொத்தமா வாங்கி வெச்சிகிட்டிருக்காங்க.

வேலை செய்ததை அட்டையில குறிக்காமல் விட்டால் கூலி வராதுனு நிறைய பேர் தடுப்பூசியைப் போட்டுக்கிட்டிருக்காங்க. தடுப்பூசி போட்டுக்கிட்டவங்ககிட்ட அவங்களோட உடல்நலம் பத்தி எல்லாம் கேட்காமலேயே அந்த சுகாதார ஊழியர்கள் தடுப்பூசியைப் போட்டிருக்காங்க.

விஜயா தடுப்பூசி போடப் போகும்போது, `எனக்கு பிரசர் இருக்குது'னு சொல்லியிருக்காங்க. அதைக் கண்டுக்காம சுகாதார ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்காங்க. அன்னைக்கு ராத்திரி வரைக்கும் நல்லாதான் விஜயா இருந்திருக்காங்க. வழக்கமா சாப்பிடுறதைப்போல அன்னைக்கு இரவும் சரியாதான் சாப்பிட்டதாகச் சொல்லுறாங்க.

ராத்திரி 12 மணி (02.09.2021) வாக்குல விஜயாவுக்கு உடம்பு சரியில்லாமப் போயிருக்கு. அப்புறம் கொஞ்சம் பரவாயில்லாம இருக்குற மாதிரி இருந்திருக்கு. ஆனா, மறுபடியும் உடம்பு சரியில்லாம போக, காலங்காத்தால 5 மணிக்கு ஆட்டோ மூலமா செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க.

விஜயா
விஜயா

குளுக்கோஸ் எல்லாம் போட்டு பார்த்திருக்காங்க. அப்புறமா, ஒரு 9 மணி போல அங்க முடியாதுனு சொல்லி முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அங்கேயும் சிகிச்சை கொடுத்திருக்காங்க. அப்படி இருந்தும், சுமாா் 10.30 மணி போல விஜயா இறந்திருக்காங்க.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கேரளாவில் 40,000 பேருக்கு கோவிட்; ICMR கூறும் காரணம் என்ன?

கொரோனா தடுப்பூசி போட்டதுக்கு அப்புறமாதான் அவங்க உடம்பு சரியில்லாம போயி இறந்ததால, அந்தக் குடும்பத்துக்கு நீதி மற்றும் நிவாரணம் கேட்டு, உறவினர் மற்றும் ஊர்க்காரங்க சேர்ந்து வளத்தி - செஞ்சி சாலையில அன்று மதியம் 12 மணிக்கு சாலை மறியல் போராட்டத்துல ஈடுபட்டோம். அப்போ, டி.எஸ்.பி இளங்கோவன் சார், வல்லம் பி.டி.ஓ, தாசில்தார் வந்து எங்ககிட்ட பேசினாங்க. விஜயா குடும்பத்துக்கு இழப்பீடு வாங்கித் தருவதாவும், அந்தக் குடும்பத்துல ஒருத்தருக்கு படிப்புக்கு ஏத்தமாதிரி அரசாங்க வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாவும் சொன்னாங்க. அதுக்கு அப்புறமாதான் நாங்க கலைந்து வந்தோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக, வளத்தி காவல்நிலையத்தில் தொடர்புகொண்டு பேசினோம். ``174 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தே உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உடலை அனுப்பினோம். முடிவு இன்னும் வரவில்லை" என்றனர்.

மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்க, விழுப்புரம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்கொடியை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். `மீட்டிங்கில் உள்ளேன்' எனக் கூறிய அவரை சில மணிநேரம் கழித்து மீண்டும் தொலைபேசி மூலம் அழைத்தோம். ``உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, மாதிரிகளை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளோம். அதன் முடிவுகள் வந்த உடன் இறப்புக்கு என்ன காரணம் என மாவட்ட, மாநில மருத்துவக்குழுவின் கமிட்டி மூலம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவை சொல்ல முடியும்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
Covid Questions: தொற்றிலிருந்து மீண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டேன்; எனக்கு ஆன்டிபாடி டெஸ்ட் தேவையா?

பரிசோதனை முடிவை மத்திய மருத்துவக்குழு கமிட்டிக்கும் அனுப்பி வைப்போம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போட்டபின் அடுத்தபடியாக, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கே அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடப்பட்டது. விஜயாவுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது எனச் சொல்லியிருந்தார்கள் என்றால், அதற்கான மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டார்களா, அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனை போன்றவற்றில் அவர் இதற்காக சிகிச்சை பெற்றது பதிவாகியுள்ளதா எனப் பார்க்க வேண்டும். உடனடி இறப்பை ஏற்படுத்தக் கூடிய அரிட்மியா போன்ற இதயநோய் பாதிப்பு ஏதாவது அவருக்கு இருந்ததா என்றும் பார்க்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும், விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை முடிவில் கமிட்டியுடன் ஆலோசித்த பின்னரே தெரிய வரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு