தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வாங்க பழகலாம்... பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்! #PandemicEtiquettes

பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்

கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், விருந்தினர் நம்மையோ, நாம் விருந்தினரையோ கைகளை, தோளைத் தொட்டு வரவேற்பது தெரியும்.

இந்த நிமிடம் வரைக்கும், கொரோனா அலை ஓயவில்லை உலகம் முழுவதும்... கொரோனா வைரஸ் நம்முடன் தொடர்ந்து இருக்கப் போகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நிலையில் உலகம் முழுக்க பின்பற்ற ஆரம்பித்திருக்கும் பெருந்தொற்றுக் கால நாகரிகம் (Pandemic Etiquette) பற்றி விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் பிரியா.

பிரியா
பிரியா

‘வாடி செல்லம்’, ‘வாடா தங்கம்’ போதும்!

‘`வயதில் மூத்த விருந்தினர்களை, வணக்கம் சொல்லி வரவேற்பது நம் வழக்கம். கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், விருந்தினர் நம்மையோ, நாம் விருந்தினரையோ கைகளை, தோளைத் தொட்டு வரவேற்பது தெரியும். இளைய தலைமுறையினர் ‘ஜென்டில் ஹக்’ கொடுத்து நட்பையும் அன்பையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இன்னும் சில வருடங்களுக்கு இந்தத் தொடுதலையும் அணைப்பையும் தவிர்த்துவிட்டு, பெரியவர்களை ‘ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க’; ‘உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா’ என்று சொன்னபடி வரவேற்கலாம். சிறியவர்களிடம் ‘வாடி செல்லம்’, ‘வாடா தங்கம்’ என்ற வார்த்தைகளில் மட்டும் அன்பை வெளிப்படுத்தலாம்.

`கொரோனா பரப்பப் போறது யாரு?’

கொரோனா எண்ணிக்கை குறைகிற நேரத்தில் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கச் செல்வோம். வெகுநாள் கழித்து நேருக்கு நேர் பார்க்கிற மகிழ்ச்சியில் உடனே முகக்கவசத்தை நீக்கிவிடுகிறோம். அப்படி நீக்காவிட்டால், ‘என்கிட்ட இருந்து உனக்கு கொரோனா வந்துடும்னு பயப்படுறியா இல்ல உன்கிட்ட இருந்து எனக்கு வந்துடும்னு பயப்படுறியா’ என்று கேலி செய்து முகக்கவசத்தை நீக்க வைக்கிறோம். இந்த இரண்டையும் தவிருங்கள்.

இதுவல்ல விருந்தோம்பல்!

நீரிழிவாளர்கள் விருந்தாளிகளாக வீட்டுக்கு வரும்போது, ‘இன்னிக்கு ஒருநாள் ஒரேயொரு லட்டு சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடாது’ என்று கட்டாயப்படுத்தி அவர்களை இனிப்பு சாப்பிட வைக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. நீரிழிவு போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள்தாம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இதைத் தவிருங்கள்.

பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்
பெருந்தொற்றுக் கால நாகரிகங்கள்

ஆன்லைனிலும் அட்சதை போடலாம்!

மணவறையில் தாத்தா, பாட்டி அருகில் அமர, தாய்மாமன் சீர் செய்ய, அத்தை தாலி எடுத்துத் தர என்று உறவினர்கள் சூழ திருமணம் செய்வதுதான் நம் கலாசாரம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ‘எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தே ஆக வேண்டும்’ என்கிற அழுத்தம் ஒருபக்கம், ‘அழைத்தவர்கள் எல்லோரும் வந்துவிட்டால் என்ன செய்வது’ என்கிற பயம் மறுபக்கம் எனத்

திருமண வீட்டார் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இ-இன்வி டேஷனையே பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளலாம். தாய்மாமன், அத்தை போன்ற நெருங்கிய உறவினர்கள்கூட தாங்களாகவே முன்வந்து ‘நாங்கள் ஆன்லைனிலேயே அட்சதை போட்டு ஆசீர்வதிக்கிறோம்’ என்று சொல்லலாம்.

புது அம்மாக்களைத் தொல்லை செய்யாதீர்கள்!

பெருந்தொற்றுக் காலம் முடிகிற வரைக்கும் ‘குழந்தைப்பெத்த பொண்ணை நேர்ல போய்தான் பார்க்கணும்’ என்கிற ‘முறை’யைத் தள்ளிவையுங்கள். உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் வாட்ஸ்அப் செய்திகளாக அனுப்புங்கள் போதும்.

குழந்தைகளைக் கொஞ்ச வேண்டாம்!

சின்ன குழந்தைகளைத் தொட்டுக் கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

மரண வீட்டுக்குச் சென்றே ஆக வேண்டுமா?

‘நல்லதுக்குப் போகலைன்னாலும் கெட்டதுக்குக் கட்டாயம் போயிடணும்’ என்பது நம் வழக்கம். இறப்பு நிகழ்ந்த வீட்டில் ஒரே ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் துக்க வீட்டுக்கு வந்த அனைவருக்குமே பரவிவிடும். எனவே இந்தக் காலகட்டத்தில் இதையும் தவிர்ப்பதே சரி. வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அதில் இறந்தவரின் நல்ல இயல்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம். ஆறுதலாகவும் இருக்கும். மொத்தத்தில் அன்பு மாறாமல் நம்முடைய வழக்கங்களை மட்டும் மாற்றிக்கொள்வோம். இதுதான் பெருந்தொற்றுக் கால நாகரிகம்’’ என்கிறார் டாக்டர் பிரியா.