Published:Updated:

2K Kids: அந்தரங்க சுகாதாரம்... அலர்ட் லேடீஸ்!

அலர்ட் லேடீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ட் லேடீஸ்

சாய் சஹானா.அ.மு.

சானிட்டரி நாப்கினை மறைத்து எடுத்துப் போன தலைமுறையிலிருந்து பெண்கள் `ஹேப்பி பீரியட்ஸ்' என்று மாதவிடாயை நார்மலைஸ் செய்யும் மனநிலைக்கு மாறி வருகிறார்கள். என்றாலும், பெண்களின் உடல் சார்ந்து உடைத்துப் பேச வேண்டிய விஷயங்கள் இன்னும் பல. அவற்றில் ஒன்று, அந்தரங்க சுகாதாரம் (Intimate Hygiene).

``பெண் உறுப்பின் அருகில் சிறுநீர்ப்பாதை, கர்ப்பப்பை வாய், மலக்குடல் என அமைந்திருப்பதால், அதைக் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தும் மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வந்தனா, இன்டிமேட் ஹைஜீன் பேணத் தரும் அறிவுரைகள் இங்கே.

2K Kids: அந்தரங்க சுகாதாரம்... அலர்ட் லேடீஸ்!

ஈரத்துக்கு நோ!

குளித்த பின்னர் ஈரம் போக நன்கு துடைத்த பின்னரே உள்ளாடை அணிய வேண்டும். உள்ளாடை ஈரப்பதத்துடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, ஒவ்வொரு முறை சிறுநீர், மலம் கழித்த பின்னரும் வஜைனல் வைப்ஸ், டிஷ்யூ பேப்பர் கொண்டு ஈரம் உலர சுத்தம் செய்வது அவசியம். அப்போது முன்னிருந்து பின்பக்கமாகத் துடைக்க வேண்டும். இதனால் ஆசனவாயிலிருக்கும் கிருமிகள் ஜனன உறுப்பில் பரவாது தவிர்க்கலாம். அரிப்பு, எரிச்சல் என்று பெண் உறுப்பில் ஏதேனும் மாறுபாட்டை உணர்ந்தால் மிதமான வெந்நீரால் சுத்தம் செய்வது நலம்.

சானிட்டரி பேட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்!

மாதவிடாய் நாள்களில் பெண் உறுப்பு சுத்தமாகவும் உலர்வாகவும் இருக்க வேண்டும். அதற்கு 4 - 5 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி பேடை மாற்ற வேண்டியது அவசியம். ரத்தப்போக்கு அதிகமாக உள்ளபோது 2 - 3 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றலாம்.

நறுமணப் பொருள்கள் வேண்டாம்!

அதிகளவு கெமிக்கல்கள், நறுமணப் பொருள்கள் கலந்த சோப், வாஷ்களைப் பிறப்புறுப்பில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது pH பேலன்ஸை பாதிக்கும். இன்டிமேட் வாஷ் பயன்படுத்தலாமா என்ற கேள்வி இன்று பல பெண்களுக்கும் உள்ளது. சில இன்டிமேட் வாஷ்கள், பெண் உறுப்பில் இருக்கும் நல்ல பாக்டீரியாவையும் அழித்துவிட வாய்ப்புள்ளது என்பதால் அவை பரிந்துரைக்கத் தக்கவையல்ல.

உறவுக்குப் பின்...

உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பது மற்றும் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது, பாலியல் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவும். உறவின்போது ஆணுறை பயன்படுத்துவதும் இவ்வகை தொற்றுக்கு எளிய தீர்வாக அமையும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஷேவிங், ட்ரிம்மிங்...

அந்தரங்கப் பகுதி ரோமம், பாக்டீரியாத் தொற்றிலிருந்து பாது காக்கும் இயற்கையின் தகவமைப்பு. எனவே, அதை முற்றிலுமாக ஷேவ் செய்வதைவிட, ட்ரிம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. ரேஸர், சிசர்ஸ் என அவரவர் விருப்பப்படி பயன்படுத்தலாம். ரசாயனங்களாலான ஹேர் ரிமூவல் க்ரீமை அந்தரங்கப் பகுதியில் பயன் படுத்துவதைத் தவிர்க்கவும்.

2K Kids: அந்தரங்க சுகாதாரம்... அலர்ட் லேடீஸ்!

பருத்தி உள்ளாடை!

பருத்தி உள்ளாடைகள் சருமத்துக்குப் பாதுகாப்பானவை. இரவு நேரங்களில் பேன்டி தவிர்த்து ட்ரவுசர்ஸ், பாக்ஸர்ஸ் என அணியலாம்.

துர்நாற்றம் தவிர்க்க...

தினமும் இரண்டு முறை குளிக்கவும்.

இறுக்கமான உள்ளாடைகளால் அந்தரங்க உறுப்புகளில் சேரும் வியர்வை துர்நாற்றம், அரிப்பு ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்க வேண்டும்.

வியர்வை வாடை பிரச்னை உள்ளவர்கள் வாசனை திரவியங்கள் பயன்படுத்தலாம். அதிக துர்நாற்ற பிரச்னை உள்ளவர்கள் வியர்வை சுரப்பியை நாள் முழுக்கக் கட்டுப்படுத்தும் ஆன்டி பெர்ஸ் பிரன்ட்ஸ் பயன்படுத்தலாம்.

வெள்ளைப்படுகிறதா..?

மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில நாள்களில் வெள்ளைப்படுவது (white discharge) இயல்பானது. அதுவே மஞ்சள், பச்சை என்று நிறம் மாறியோ, துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சந்தையில் கிடைக்கும் பேன்டி லைனர்கள் (panty liners), நாப்கின்போல் தடிமனாக இல்லாமல், மெலிதாக இருக்கும். இதை, மாதவிடாயின் இறுதி நாள்களில் ஏற்படும் லேசான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றை உறிஞ்சி உள்ளாடையை உலர்வாக வைப்பதற்காக பெண்கள் பயன்படுத்துகிறார்கள். என்றாலும், நாப்கின்போலவே இதுவும் கெமிக்கல் களால் தயாரிக்கப்பட்டதுதான்.

எனவே, உள்ளாடையில் கறை ஏற்படாமல் தடுக்கும் எண்ணத்தில் மாதவிடாயின் இறுதி நாள்கள், வெள்ளைப்படுதல் நாள்கள் என்று மாதத்தில் பல நாள்களுக்கு இதைப் பயன்படுத்துவது நல்லதல்ல. இதன் அடிப்பகுதி பிளாஸ்டிக்கால் ஆனது என்பதால், சருமத்தால் சுவாசிக்க இயலாமல்போகும் என்பதுதான் பிரச்னையே.