Election bannerElection banner
Published:Updated:

வீணடிக்கப்பட்ட 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... முதலிடத்தில் தமிழ்நாடு!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இதுவரை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 23 % வீணடிக்கப்பட்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு தரவு சொல்கிறது. அதாவது ஏப்ரல் 11-ம் தேதி நிலவரப்படி, 44.78 லட்சம் தடுப்பூசிகளை வீணடிக்கப்பட்டிருகிறது.

ரயில்கள் ஓடாது, பள்ளிகள் திறக்காது, உணவகங்கள் கிடையாது, அலுவலகங்கள் இயங்காது இப்படியெல்லாம் யாரவது 2020 மார்ச் மாதம் தொடக்கத்தில் சொல்லியிருந்தால், நல்ல கற்பனை எனச் சிரித்திருப்போம். ஆனால் அது நிகழ்ந்தது. ஒரு சின்ன வைரஸ் உலகத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. கடந்த ஆண்டு லாக்டெளனால் முடங்கியிருந்த உலகின் கண் முன் புலப்பட்ட ஒரே தீர்வு வாக்சின். தடுப்பூசிகள் மட்டுமே உலகைக் காக்கும் என எல்லா நாடுகளும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டன. முதல் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோது கூட இனி கவலையில்லை என பெருமூச்சு விட்டது நினைவிருக்கிறது.

லாக்டௌன்
லாக்டௌன்

பெருநிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு தடுப்பூசி தயாரிப்பில் முழுமூச்சில் இறங்கின. எத்தனை சந்தேகங்கள் இருந்தபோதும், சர்ச்சைகள் கிளம்பியபோதும் தடுப்பூசிகள் மீதிருந்த நம்பிக்கையைப் பலர் இழக்கவில்லை. முன்கள பணியாளர்களுக்கென முதலில் வழங்கப்பட்ட தடுப்பூசிகள், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மே 1-ம் தேதிக்குப் பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதாக அறிவித்திருக்கிறது அரசு. மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துவதற்காகத் தடுப்பூசி திருவிழாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இருந்தபோதும், இந்தியாவில் சுமார் 1 சதவிகிதம் பேர் மட்டுமே கொரோனா வைரசிற்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு முழுமையாகத் தடுப்பூசி (Fully Vaccinated) பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி வெளியிட்ட ஆய்வறிக்கை. இதுவரை ஒரு தடுப்பூசியாவது போட்டுக்கொண்டிருப்பவர்கள் 7 % பேர் மட்டுமே.

covid vaccine
covid vaccine

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பையோடெக் என இரு நிறுவனங்கள் மட்டுமே இப்போதுவரை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் 2021 ஏப்ரல் மாத நிலவரப்படி ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரித்திருக்கின்றன. மத்திய அரசு தற்போது ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிக்க மேலும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் இந்தியாவில் வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 7 கோடி தடுப்பூசிகளும், செப்டம்பர் மாதத்தில் 10 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்க இயலும். இந்தியா கணிசமான அளவு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதும், உலக சுகாதார நிறுவனத்தின் covax திட்டத்திற்கு வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை மத்திய அரசு, 144 மில்லியன் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்கியிருப்பதாகத் தரவுகள் சொல்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக ஏப்ரல் முதல் வாரத்தில் 22.6 மில்லியன் மக்கள் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 12,69,56,032 பேர் தடுப்பூசி போட்டுகொண்டாண்டதாக தரவுகள் சொல்கிறது. தற்போதிருக்கும் வேகத்தில் இந்தியாவில் தடுப்பூசிகளைப் போடப்பட்டால், இந்த ஆண்டு இறுதியில் தான் மொத்த மக்கள் தொகையில் 70 % பேருக்காவது தடுப்பூசி போட முடியும்.

இரண்டாவது அலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகவும் அதனால் தான் குறைவான அளவு மக்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது என்றும் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இறந்த மகனுடன் பேசும் தாய், மரணித்த தந்தையை விசாரிக்கும் மகள்... #SilentPandemic எனும் துயரம்!

இந்நிலையில், இதுவரை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 23 % வீணடிக்கப்பட்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு தரவு சொல்கிறது. அதாவது ஏப்ரல் 11-ம் தேதி நிலவரப்படி, 44.78 லட்சம் தடுப்பூசிகளை வீணடிக்கப்பட்டிருகிறது. இதில் அதிகபட்சமாகத் தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தான் அதிகம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், கேரளா, மேற்கு வங்காளம், ஹிமாச்சல், மிசோரம், கோவா, டாமன் அண்ட் டையூ , அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் ஒரு தடுப்பூசி கூட வீணடிக்கப்படவில்லை என்றும் தரவுகள் சொல்கிறது.

பல மாநிலங்கள் கடும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசிடம் முறையிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசும் உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பும் தடுப்பூசிகள் அளவை குறைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், லட்சக்கணக்கான தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவது, பல ஆயிரம் உயிர்களைத் தெரிந்தே பலி கொடுப்பதற்குச் சமம். அரசு பொறுப்பாகச் செயலாற்றுவது ஒன்றே தீர்வு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு