Published:Updated:

பயமுறுத்தும் பருவகால ஜுரம்!

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ், பன்றிகளைத் தாக்கி அவற்றுக்கு நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமி.

பயமுறுத்தும் பருவகால ஜுரம்!

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ், பன்றிகளைத் தாக்கி அவற்றுக்கு நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமி.

Published:Updated:
H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்

சாதாரண சீசனல் ஜுரம் கொரோனாவைவிட அதிக அச்சம் பரப்பியிருக்கிறது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்கள். தமிழகத்திலும் இதுகுறித்த அச்சம் நிலவிவருகிறது.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பருவ கால ஜுரம் அதிகமாகப் பரவுகிறது. இதை ‘சீசனல் ஃபீவர்' அல்லது ‘சீசனல் ஃப்ளூ' என்கிறோம். இன்ஃப்ளூயன்சா குடும்பத்தைச் சேர்ந்த ஏ, பி, சி ஆகிய வைரஸ்கள், பாரா இன்ஃப்ளூயன்சா, ரெஸ்பிரேட்டரி சின்சிட்டியல் வைரஸ், ரைனோ வைரஸ், ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ், ஹியூமன் கொரோனா வைரஸ் போன்றவை பருவநிலை மாற்றத்தின்போது வருடாவருடம் இதே பருவங்களில் வேகமெடுத்துப் பரவுவது வழக்கமே.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, மூக்கொழுகுதல் போன்றவை ஏற்படும். முறையான சிகிச்சை எடுத்தால், இவை எந்தத் தீவிரப் பிரச்னையும் ஏற்படுத்தாமல் குணமாகிவிடும்.

பயமுறுத்தும் பருவகால ஜுரம்!

இருப்பினும் இத்தகைய சாதாரண கொரோனா வைரஸுடன் H1N1 எனும் பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸும் சேர்ந்து பரவிடக்கூடும். தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக உள்ளது. எனினும் ஸ்வைன் ஃப்ளூ எனும் பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ், பன்றிகளைத் தாக்கி அவற்றுக்கு நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமி. பன்றி வளர்ப்போர், கால்நடை ஊழியர்கள் போன்றவர்களுக்கு பன்றிகளின் மூலம் இந்த நோய் முதலில் பரவியது. பிறகு மனிதர்களுக்கு இடையே பரவும் நிலையை அடைந்து, 2009-ல் பெருந்தொற்றாக உருவெடுத்தது பன்றிக்காய்ச்சல்.

இந்த வைரஸுக்கு ஒரு முக்கிய சக்தி இருக்கிறது. அது என்னவென்றால், இதைப் போன்ற மற்றொரு வைரஸுடன் இது சேர்ந்து மூன்றாவது புதிய வைரஸாக உருமாறும் தன்மை பெறும். இதை antigenic shift என்கிறோம். மனிதனிடமிருந்து மீண்டும் பன்றிகளுக்கு இந்த வைரஸ் செல்லும்போது reassortment எனும் மறுதகவமைப்புக்கு உள்ளாகிப் புது வைரஸைத் தோற்றுவிக்கிறது. இப்படிப் புதிதாக உருவான வைரஸ்கள் H1N1, H3N2, H2N1, H2N3, H1N2, H3N1 என்று விஸ்வரூபம் எடுக்கின்றன.

90% பேருக்கு இது சாதாரண சீசனல் ஜுரமாக வந்து எந்தப் பிரச்னையும் தராமல் சென்று விடும். இந்த நோய்க்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இரண்டாம் நிலையில் கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி இருக்கும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயது தாண்டிய முதியோர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்; இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சார்ந்த இணைநோயுடன் வாழ்பவர்கள்; நீரிழிவு நோயாளிகள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள், எதிர்ப்பு சக்தியைக் குன்றச்செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள்; அதீத உடல்பருமன் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து பன்றிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

மூன்றாம் நிலையில் மேலே சொன்ன எல்லா அறிகுறிகளுடனும் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் குறைவது, தலைசுற்றல், மயக்கம், மந்தநிலை, கை கால்கள் நீல நிறமாகுதல், குழந்தைகள் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல், பல்ஸ் ஆக்சிமீட்டரில் ஆக்சிஜன் அளவுகள் 90%க்குக் குறைவாகச் செல்லுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல் போன்ற அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இந்த நிலையை அடைபவர்கள் வெறும் 1%க்கும் குறைவானவர்களே என்பதால் தேவையற்ற பயம் வேண்டாம்.

இவர்களுக்கு மட்டும் தொண்டை/நாசிப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் தடவலைச் சோதித்து வைரஸ் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். இதை throat/nasal swab என்கிறோம்.

தீவிர பாதிப்பு இருக்கும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க ‘ஒசல்டாமிவிர்' (oselatamivir) எனும் மாத்திரை இருக்கிறது. இது பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியைச் சிறப்பாக அழிக்கிறது. மேலும், இந்த இன்ஃப்ளூயன்சா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியும் நம்மிடம் இருக்கிறது. இந்தத் தடுப்பூசி வருடம் ஒருமுறை high risk group என்று சொல்லப்படும் மருத்துவத்துறை ஊழியர்கள், மருத்துவப் பரிந்துரையின் பேரில் முதியோர்கள், குழந்தைகளுக்குப் போடப்படுகிறது. இந்த வைரஸ் ஆண்டிஜெனிக் ஷிஃப்ட் மூலம் மாறி மாறி புதிய அவதாரம் எடுப்பதால், வருடா வருடம் புதிய வைரஸுக்கு உகந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

பயமுறுத்தும் பருவகால ஜுரம்!

நோயின் பரவலைத் தடுக்க சில வழிகள்:

* தினமும் மலம் கழித்தபின்பும், உணவு உண்ணும் முன்பும் சோப் போட்டு முறையாகக் கை கழுவ வேண்டும். சானிடைசர்களை அவ்வப்போது உபயோகிப்பது சிறந்தது.

* சளி, இருமல் இருப்பவர்கள் இருமும்போது கைக்குட்டை கொண்டு வாயை மூடிக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது சிறப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீசனல் ஜுரம் அதிகம் தாக்காமல் தடுத்தது முகக்கவசம்தான்.

* வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.

* சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக வைத்துப் பராமரிக்கலாம். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்குப் பரவக்கூடும்.

* காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.