Published:Updated:

`ஹெச்.ஐ.வி-யைவிடவும் ஆபத்தான வைரஸ்!' ஹெப்படைட்டிஸ் சி ஆராய்ச்சி ஏன் கொண்டாடப்படுகிறது?

Nobel laureate Harvey J. Alter
News
Nobel laureate Harvey J. Alter ( National Institutes of Health History & Stetten Museum via AP )

ஹெப்படைடிஸ்-சி என்ற இந்த வைரஸ் மனித குலத்துக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் அதிகம்.

சாதாரணமாக ஏதாவது ஒரு கொள்ளை நோய் ஏற்பட்டு, அது கொத்துக்கொத்தாக மனிதர்களைக் கொல்லும்போது, அதைக் குணப்படுத்தும் ஒரு மருந்தைக் கண்டுபிடித்தாலோ, வராமல் தடுக்கும் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தாலோ பரிசுகள் வழங்குவது நியாயமான செயல்... ஆனால், இந்த முறை அதுபோல எதுவுமில்லாமல், ஒரு வைரஸ் நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டுபிடித்ததற்கே விருது கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நோபல் பரிசு. அப்படி என்றால், இந்த ஹெப்படைடிஸ்-சி எவ்வளவு கொடிய வைரஸ் என்பதையும் அதனால் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவு இருந்திருக்கக் கூடும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா..?

ஆம், ஹெப்படைடிஸ்-சி என்ற இந்த வைரஸ் மனித குலத்துக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் அதிகம்தான்.

ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாட்டின் கதை இது... அதிக மக்கள்தொகையும், சுகாதாரக் குறைபாடும் நிறைந்த அந்த நாட்டின் ஏழை மக்களின் இருண்ட வரலாறு இது...

நைல் நதிக்கரையோரம் வசித்து வந்த ஏழை விவசாயிகளில் பெரும்பான்மையினரை சிஸ்ட்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற நத்தைக் காய்ச்சல் தாக்க, அவர்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு, கொத்து கொத்தாக இறந்து விழ ஆரம்பித்தனர்... நத்தைகளால்தான் இது ஏற்படுகிறது எனச் சொல்லி, அவற்றை அழிக்க அப்போதைய எகிப்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, பல ஆண்டுகளாக அவர்களிடையே உழன்று பெருகிய நத்தைக் காய்ச்சல், மக்களுக்கு கல்லீரலுடன் சிறுநீரகத்தையும் பாதிக்கத் தொடங்கியது.

நோய் தாக்கிய ஆண், பெண் என இருபாலினரும் ரத்தம் கலந்த சிறுநீரைக் கழித்தனர் என்றும், பதினெட்டாம் நூற்றாண்டில் எகிப்தின் மீது படையெடுத்து வந்த நெப்போலியன் பொனபார்டின் படையினர் இதைப் பார்த்து, ``மாதவிடாயால் அவதிப்படும் எகிப்திய ஆண்கள்!" என்று தங்களது பயணக் குறிப்பில் குறிப்பிட்டதாகவும் தெரிய வருகிறது. அவ்வளவு கொடூரமாகப் பரவியிருந்த இருந்த இந்த நத்தைக் காய்ச்சலுக்கு ஒருவழியாக 1950-களில் `டார்டார் எமிடிக்' எனும் ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட, ஏற்கெனவே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அம்மக்கள், மருத்துவருக்குக் காத்திராமல் அதை வாங்கித் தாங்களாகவே தங்களின் நரம்புகளில் செலுத்திக் கொள்ளவும் ஆரம்பித்தனர். மருந்தும் உண்மையிலேயே நன்கு வேலை செய்ய, நத்தைக் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. ஆனால், அவர்கள் பயன்படுத்திய பாதுகாப்பற்ற சுத்திகரிப்பு செய்யப்படாத ஊசிகள் மூலமாக இன்னொரு பெரிய ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அங்கு நிலவிய அதீத ஏழ்மையின் காரணமாக நைல் நதி மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாகக் குடிபெயர ஆரம்பித்தனர். அப்படிக் குடிபெயர்ந்த எகிப்தியர்களில் பெரும்பான்மையினருக்கு புதுவித வைரஸ் நோய் ஒன்று பிறகு கண்டறியப்பட்டது. அதுவரை கல்லீரலைத் தாக்கும் வைரஸ்கள் ஹெப்படைடிஸ் ஏ மற்றும் பி என்று மட்டுமே இருக்க, `ஏ பி' இரண்டுமல்லாத ஒரு புதிய வைரஸ் அவர்களிடம் இனம் காணப்பட்டது. அது அச்சமயம் அவர்களுடன் பணிபுரிந்து வந்த இந்தோனேசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க அடிமை மக்களிடையேயும் அது பரவ ஆரம்பிக்க அடிமை வர்த்தகம் நிறைந்த அனைத்து இடங்களிலும் புதியதொரு நோய் விஸ்வரூபம் எடுத்தது. அதிலும் போதை ஊசிகளைச் செலுத்திக் கொள்பவர்களிடையே இந்தப் புதிய வைரஸ் வேகமாகப் பரவ, கூடவே ரத்த தானம் செய்பவர்கள் மூலமாகவும் இது பரவுவது பெரிய ஆபத்தாகத் தோன்ற ஆரம்பித்தது.

The 2020 Nobel laureates in Physiology or Medicine are announced during a news conference at the Karolinska Institute in Stockholm, Sweden, Monday Oct. 5, 2020. The prize has been awarded jointly to Harvey J. Alter, left on screen, Michael Houghton, center, and Charles M. Rice for the discovery of the Hepatitis C virus.
The 2020 Nobel laureates in Physiology or Medicine are announced during a news conference at the Karolinska Institute in Stockholm, Sweden, Monday Oct. 5, 2020. The prize has been awarded jointly to Harvey J. Alter, left on screen, Michael Houghton, center, and Charles M. Rice for the discovery of the Hepatitis C virus.
Claudio Bresciani/TT via AP

சாதாரணமாகக் கல்லீரல் வீக்கத்தையும் காமாலையையும் ஏற்படுத்தும் இந்த ஹெப்படைடிஸ் வகை வைரஸ்கள் உணவு மற்றும் நீரின் மூலமாகப் பரவும்போது ஹெப்படைடிஸ்-ஏ என்றும், ரத்தத்தின் மூலமாகப் பரவும்போது ஹெப்படைடிஸ்-பி என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால், இவை இரண்டுமல்லாத புதியதொரு வைரஸை (Non-A Non-B) ஹார்வி அல்டர் என்ற அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி, 1970-ம் ஆண்டு முதன்முதலாகக் கண்டறிந்தபோது அதற்கு ஹெப்படைடிஸ்-சி எனப் பெயரிட்டு, அதன் மரபியல் தொடர்புகளை ஆராய்ச்சி செய்தார். அதேநேரத்தில் சார்லஸ் ரைஸ் மற்றும் மைக்கேல் ஹூட்டன் என்ற இரு வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் தனித்தனியாக ஆராய்ந்து ஹெப்படைடிஸ்-சி வைரஸின் குணங்களை அறுதியிட்டனர். இந்தப் பணிகளுக்காக 2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இந்த மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக பாலியல் ரீதியாகவும், ஊசிகள் மற்றும் ரத்தத்தின் மூலமாகவும் பரவும் நோய்கள் என்றவுடன் நமது நினைவுக்கு உடனடியாக வருவது எய்ட்ஸ் மற்றும் ஹெப்படைடிஸ்-பி நோய்கள்தான். ஆனால், எய்ட்ஸ் நோய்க்குக் காரணியான ஹெச்ஐவியைக் காட்டிலும் கொடூரமானது இந்த ஹெப்படைடிஸ்-சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்றால் இதன் வீரியத்தை நிச்சயம் உணர முடிகிறதல்லவா...?

ரத்தத்தின் மூலமாகப் பரவும் இந்த நோய், ஆரம்ப நாள்களில் எகிப்தியர்களுக்கு நிகழ்ந்தது போல சுத்திகரிக்கப்படாத ஊசிகள் மூலமாகத்தான் பரவி வந்தது. ஆனால், டிஸ்போசபிள் ஊசிகள் உலகமயமாக்கப்பட்ட பின்பும், போதைக்கு அடிமையானவர்களிடையேயும், பரிசோதனை செய்யப்படாத ரத்த தானத்திலும், டயாலிசிஸின் போதும் பரவியதுதான் சோகம். போதை ஊசிகளைப் பகிர்ந்து கொள்பவர்கள், சுத்திகரிக்கப்படாத ஊசிகள் கொண்டு பச்சை மற்றும் அலகு குத்திக் கொள்பவர்கள், ஷேவிங் ரேசர்களை பரிமாறிக் கொள்பவர்கள், ஹீமோபிலீயா, தலசீமியா போன்ற ரத்தக் குறைபாடு நோயினால் அடிக்கடி குருதியேற்றிக் கொள்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள் ஆகியோரிடம் இந்த நோய் அதிகம் பரவி வந்திருக்கிறது. இதுபோக இந்த ஹெப்படைடிஸ்-சி நோய்த்தொற்று பாலியல் ரீதியாகவும், பிரசவத்தின்போது தாயிடமிருந்து சேய்க்கும், உறுப்பு தானத்தின்போது பயனாளிக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொஞ்சம் குறைந்த அளவில் பரவியிருக்கிறது என்கிறது சிடிசி (CDC).

A vaccine volunteer receives an injection Johannesburg
A vaccine volunteer receives an injection Johannesburg
AP / Siphiwe Sibeko

ஹெப்படைடிஸ்-சி தொற்று ஏற்பட்ட பெரும்பான்மையினருக்கு காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மயக்கம், காமாலை போன்ற ஆரம்ப அறிகுறிகள் மட்டும் வந்துவிட்டு இரண்டிலிருந்து நான்கு வாரங்களுக்குள் மறைந்துவிடுகிறது. ஆனால், உண்மையில் மறைவது நோய் அறிகுறிகள் மட்டுமே. நோய் அல்ல என்பதுதான் சோகம். உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவிகிதத்தினரிடம், இந்த ஹெப்படைடிஸ் சி வைரஸ் சத்தமில்லாமல், அவர்களது கல்லீரலில் தங்கி, நாட்பட்ட கல்லீரல் நோய்களையும் அதன் மூலமாகப் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இவற்றுள் முக்கியமாக cirrhosis என்ற கல்லீரல் சுருக்கம், அசைட்டிஸ் என்ற வயிற்றுக்குள் நீர்த்தேக்கம், கல்லீரல் செயலிழப்பு, மூளை பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றை நாள்கள் அல்லது வருடங்கள் கழித்து ஏற்படுத்துவதுடன் மரணம் வரையில் அழைத்துச் செல்கிறது கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்வைரஸ். இதனால்தான் ஹெச்ஐவியைக் காட்டிலும் கொடிய சைலன்ட் கில்லர் இந்த ஹெப்படைடிஸ்-சி என்கின்றனர் மருத்துவர்கள். கல்லீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக விளங்கும் இந்த சி வைரஸ் நோய், மதுப்பிரியர்களைச் சற்று அதிகமாகவே பாதிக்கும் என்பது ஒரு எச்சரிக்கைச் செய்தி.

சுருங்கச் சொன்னால்...

தீ சுடும் அல்லது விஷம் கொல்லும் என்பதை அறிந்து அதைத் தொடக்கூட பயப்படும் நாம், தீக்காயத்தைப் போல, சிகரெட் உடனடி வலியையோ, விஷத்தைப் போல மது உடனடி மரணத்தையோ ஏற்படுத்துவதில்லை என்பதால் தெரிந்தே சிகரெட் புகைப்பதையும், மதுவை அருந்துவதையும் தொடர்ந்து எடுத்துவருகிறோம். அப்படித்தான் ஹெப்படைடிஸ்-சியும் கொரோனா போல உடனடி பாதிப்புகளைக் காட்டாவிட்டாலும், உலகளவில் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, மெதுவாக வருடத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் மக்களை சத்தமில்லாமல், நம் கவனத்தைக் கவராமல் கொன்று குவித்து வந்திருக்கிறது.

நமது நாட்டில் மட்டும் சென்ற ஆண்டில் பத்து லட்சத்துக்கும் அதிகமான பேரிடையே ஹெப்படைடிஸ்-சி கண்டறியப்பட்டுள்ளது என்றால் புரிகிறதல்லவா?

File photo shows a patient receiving a flu vaccination
File photo shows a patient receiving a flu vaccination
Photo: AP/ LM Otero

நின்று நிதானமாகக் கொல்லும் இந்த ஹெப்படைடிஸ்-சி-க்கு இதுவரை தனிப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது கொடுந்துயரம். என்றாலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஹெப்படைடிஸ்-ஏ மற்றும் பி தடுப்பூசிகளைப் பரிந்துரைகளின் படி ஏற்பது இதற்கும் ஓரளவு நல்ல பலன்களையே அளித்து வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், இந்த ஹெப்படைடிஸ்-சி பரவாமல் தடுக்க போதைப் பழக்கம், பச்சைக் குத்துதல், பாதுகாப்பற்ற பாலியல் உறவு போன்ற தெரிந்த சில விஷ முட்களைத் தவிர்ப்பதுதான் நமக்கான முக்கிய முன்னெச்சரிக்கை வழிமுறைகளாகும்.

ஆரம்ப அறிகுறிகள் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை என்பதால், இதற்கென தனிப் பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதும், அறுவைசிகிச்சைக்கு முன்பாகவும், கர்ப்ப காலத்திலும், மாஸ்டர் ஹெல்த் செக்கப்களிலும், சாதாரணமாக மேற்கொள்ளப்படும் ஸ்கிரீனிங் ரத்தப் பரிசோதனைகளிலும் ஒரு விபத்துபோலத்தான் ஹெப்படைடிஸ்-சி பெரும்பாலும் தெரிய வருகிறது என்பதுதான் இதில் கூடுதல் துயரம்.

Summary of the discoveries awarded by this year’s Nobel prize
Summary of the discoveries awarded by this year’s Nobel prize
Photo: Nobelprize.Org

ஆனால் ஸ்கிரீனிங் பரிசோதனையில் ஹெப்படைடிஸ்-சி கண்டறியப்பட்டவுடன் ஆர்என்ஏ வைரல் லோட், ஜீனோம் டெஸ்ட், கல்லீரல் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேனிங் ஆகிய டெஸ்ட்கள் மூலம் இந்த நோயை உறுதிசெய்யவும், அதற்கான சிகிச்சை முறைகளை உடனடியாக மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றனர் குடல் நோய் நீக்கு நிபுணர்கள். ஹெச்ஐவி அல்லது ஹெப்படைடிஸ் பி போன்ற நாட்பட்ட கிருமித்தொற்றை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பது நமக்குத் தெரியும் என்றாலும், ஹெப்படைடிஸ்-சி-க்கு நேரடித் தடுப்பு மருந்து இல்லாதபோதும், இப்போதிருக்கும் DAA (Directly Acting Antiviral Drugs) மருந்துகளின் மூலமாகவே இதை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதும், அதைவிட பிற்காலத்தில் ஏற்படும் புற்றுநோய் உட்பட பல்வேறு பெரிய பாதிப்புகளையும் இவற்றால் முற்றிலும் தவிர்க்க முடியும் என்பதுமே இன்றைய நிலையில் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

ஆரம்ப நாள்களில் இருந்த ஒரு தனிமனிதரின் ஹெப்படைடிஸ்-சி-க்கான மருத்துவச் செலவுகளை இப்போதைய தொடர் ஆய்வுகளும், அவற்றின் மூலமாக வந்துள்ள மருந்துகளும் வெகுவாகக் குறைத்திருக்கின்றன என்பதும் உண்மை. அனைத்துக்கும் மேலாக, முறையான பரிசோதனைகள் மூலமாக உலகெங்கிலும் உள்ள ரத்த வங்கிகளின் செயல்பாடு சீரமைக்கப்பட்டு, அங்கு பயனாளர்களுக்கு ஹெப்படைடிஸ் சி தொற்று அறவே தடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இன்னும் பல காரணங்களால்தான் இன்றைய சூழ்நிலையில் ஹெப்படைடிஸ்-சி-யை அடையாளம் கண்டுபிடித்ததற்கே இது இவ்வளவு கொண்டாடப்படுகிறது.

எகிப்து நாட்டின் மீது போர்தொடுத்து வென்றபோது அந்த வெற்றிக்கு முன்னின்று உதவிய படைத்தலைவர்களைக் காட்டிலும், அங்கு கைப்பற்றிய ரோஸட்டா பாறையை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அங்கேயே மீண்டும் கொண்டு சேர்த்த ஃப்ரான்சிஸ் சேவியர் என்ற படைத்தலைவரைத்தான் வெற்றியாளர்களைவிடப் பெரிதும் மெச்சினாராம் நெப்போலியன் பொனபார்ட். இன்றும் அந்த ரோஸட்டா பாறைதான் பண்டைய கிரேக்க, எகிப்திய வரலாற்று குறியீடாகக் கொண்டாடப்படுகிறது. அதைப் போல, பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்போகும் பல்வேறு மருந்துகளைவிட அதைக் கண்டுபிடிக்கத் தூண்டிய ஆரம்பப்புள்ளியான ஹெப்படைடிஸ்-சி வைரஸை அடையாளம் கண்டதற்கு நோபல் பரிசு என்பதும் நியாயம்தானே..?!

Nobel Prize medal
Nobel Prize medal
AP Photo/Fernando Vergara, File

தவறான வாழ்வியல் வழிமுறைகள் உள்ள வரையில், இந்த வைரஸ் வாழும் என்றாலும் மருத்துவத் துறையில் ஏற்படும் சிறியதொரு முன்னேற்றமும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தைக் காக்கக் கூடும் என்பது உண்மைதானே..?

இந்த வருடம் ஹெப்படைடிஸ்-சி-யை அடையாளம் கண்டுபிடித்தற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது போலவே, விரைவில் கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடித்து நம்மை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்யும் விஞ்ஞானிகளுக்கும் வரும் ஆண்டுகளில் நோபல் பரிசுகள் கிடைக்கலாம். அந்த நம்பிக்கை வெளிச்சத்துக்காகக் காத்திருப்போம்.