Published:Updated:

கட்டாய அரசு மருத்துவமனைப் பணி... மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு ஏன் சரி?

Govt Hospital
Govt Hospital ( Photo: Vikatan )

ஏழை எளிய மக்கள் நாடி வருவது அரசு மருத்துவமனைகளைத்தான். அப்போது அவர்களுக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் சிகிச்சையளிக்க, தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் இந்த 2 ஆண்டுக்காலப் பணி ஒப்பந்த முறை, மாநிலத்தின் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பில் முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாகிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், படிப்பை முடித்தவுடன் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பது நிபந்தனை. அந்த இரண்டாண்டுப் பணி முடிந்த பின்னரே, அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும். தமிழக அரசின் அரசாணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இதை எதிர்த்து 276 மருத்துவ மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிபந்தனை சட்டவிரோதமானது எனவும், அகில இந்திய மருத்துவப் படிப்புக் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இது குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மாணவர்கள் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ``மருத்துவ மாணவர்கள் இரண்டாண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய அவசியமில்லை, அவர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ``தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, இரண்டாண்டு ஒப்பந்தம் சரியே" என சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, சமுதாயத்தில் பெரும்பான்மையாக விளங்கும் ஏழை எளியோர் மருத்துவப் பயன்பெறுவதை எவ்வாறு உறுதிசெய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்களின் படிப்பை முடித்ததும் அரசு நிர்ணயிக்கும் இடங்களில் இரண்டு வருடங்கள் பணிபுரிய வேண்டும் என்ற அரசின் ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு (MD/MS/Diploma) பயிலும் அரசுப்பணியில் இல்லாத (Non service candidates) மாணவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

அரசுப் பணியிலிருக்கும் மருத்துவர்கள் அனைவரும், பட்ட மேற்படிப்பு பயின்ற பின்னர், தங்களின் பணிமூப்புக் காலம்வரை அரசுப் பணியில் பணிபுரிய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பணிபுரிய விருப்பம் இல்லாதவர்கள், அதற்குரிய ஈட்டுத்தொகையான டிப்ளோமா படிப்புகளுக்கு ரூபாய் 20 லட்சமும், MD/MS படிப்புகளுக்கு ரூபாய் 40 லட்சமும் அரசுக்கு செலுத்தி இந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும்.

Govt Hospital
Govt Hospital
Photo: Vikatan

இந்நிலையில் அரசுப்பணியில் இல்லாமல் பட்டமேற்படிப்பு மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் (Non service candidates) 276 பேர், தங்களை அரசு இரண்டு வருடங்கள் பணிபுரியக் கட்டாயப்படுத்துவது தவறு என்றும், அந்த ஒப்பந்தத்தை நீக்குமாறும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், ``தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த இரண்டு ஆண்டுக்கால ஒப்பந்த முறை சரியே. இருப்பினும் அரசால் அந்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கு அரசுப்பணி வழங்க இயலாவிட்டால் அவர்களது சான்றிதழ்களை முறையாக மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் இரண்டு ஆண்டுக்கால ஒப்பந்த முறையை நீதிமன்றம் ஆதரித்திருக்கிறது. ஏன் தமிழக அரசு, அரசுப்பணியில் இல்லாத பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இந்த ஒப்பந்தை முறையை நடைமுறைப்படுத்துகிறது?

இதற்கான விளக்கத்தை அரசே வழங்கியிருக்கிறது.

தனது ஆளுமைக்குக் கீழ் உள்ள மாநிலத்தில் வாழும் மக்களின் வரிப் பணத்தைக்கொண்டே அதிக பொருள்செலவில் மருத்துவக்கல்லூரிகளை அரசு அமைத்து அவற்றை இன்னும் அதிகப் பொருள்செலவில் நிர்வகித்து வருவதாகவும், இவற்றின் கீழ் பயிலும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஏழை மக்களுக்கு இரண்டு வருடங்களாவது சேவை செய்வது என்பது மாநில அரசு கோரும் நியாயமான ஒப்பந்தம் என்பதுவும் அரசின் பிரகடனமாக இருக்கிறது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

இத்தகைய முறையின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சரி, அரசு பொது மருத்துவமனைகளிலும் சரி... சிறப்பு நிலை மருத்துவர்களுக்கு (Specialist Doctors) பற்றாக்குறை ஏற்படாத நிலை உண்டாகும். தொடர்ந்து சிறப்பு மருத்துவர்கள் இரண்டு வருடங்கள் பணியில் மாறி மாறி இருப்பார்கள். எனவே, அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை எளிய மக்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள். இந்த இரண்டு ஆண்டு ஒப்பந்தப் பணிக் காலத்தில் அரசுப்பணி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியமும் சலுகைகளும் இவர்களுக்கும் வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளின் பயமுறுத்தும் கட்டணங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத, சமுதாயத்தில் பெரும்பான்மையாக வாழும் ஏழை எளிய மக்கள் நாடி வருவது அரசு மருத்துவமனைகளைத்தான். அப்போது அவர்களுக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் சிகிச்சையளிக்க தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் இந்த இரண்டு ஆண்டுக்காலப் பணி ஒப்பந்த முறை, மாநிலத்தின் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பில் முக்கியத்துவத்துவம் வாய்ந்ததாகிறது. அதற்கு நீதித்துறையும் தனது முழு ஆதரவை வழங்கியிருப்பது சிறப்பு.

அடுத்த கட்டுரைக்கு