Published:Updated:

`2025-க்குள் புகைப்பழக்கம் இல்லாத நாட்டை உருவாக்குவோம்!' - உலகுக்கு முன்னோடியாகும் நியூஸிலாந்து

புகைப்பழக்கம்
News
புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் மானுட எதிரி எனச் சொல்லித் தெரிய தேவையில்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

Published:Updated:

`2025-க்குள் புகைப்பழக்கம் இல்லாத நாட்டை உருவாக்குவோம்!' - உலகுக்கு முன்னோடியாகும் நியூஸிலாந்து

புகைப்பழக்கம் மானுட எதிரி எனச் சொல்லித் தெரிய தேவையில்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

புகைப்பழக்கம்
News
புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் மானுட எதிரி எனச் சொல்லித் தெரிய தேவையில்லை. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 34.6% பேர் புகைப்பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். அதாவது, தினமும் நாம் கடந்து செல்லும் மூன்று பேரில் ஒருவர் புகைப்பழக்கம் உள்ளவர். உலகில் உள்ள எல்லா நாடுகளும் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த திணறிவரும் சூழலில், முற்றிலும் புகை இல்லாத நாடாக உருவாகும் முயற்சியில் திறம்பட செயல்பட்டு வருகிறது நியூசிலாந்து.

2025-ம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத நியூசிலாந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து அரசு, புகைப்பழக்கம் புதிதாக யாருக்கும் ஏற்படாத வண்ணம் புதிய சட்டங்களைப் பிறப்பிக்க உள்ளது.

புகைப்பழக்கம்
புகைப்பழக்கம்
pixabay

புதிய சட்டம் பற்றிப் பேசிய நியூசிலாந்து உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெர்ரால், 'வியாபார பாதிப்பு குறித்து சிந்திக்காமல் புதிய வழிமுறையைப் பின்பற்றி புகைப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். புகையிலை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், புகையிலை விற்பனை செய்யும் கடைகளைக் குறைக்கவும், ஃபில்டர்களை தடை செய்யவும், உற்பத்தியைக் குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது நியூசிலாந்து அரசு.

புதிதாக வரவிருக்கும் சட்டங்கள் மட்டுமன்றி, புகையிலையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் நியூசிலாந்தில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை 37 நியூசிலாந்து டாலர்கள்; இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2,000 ரூபாய். மேலும் சிகரெட் புகைப்பதை நிறுத்த விரும்புபவர்கள் e-cigarette மூலம் வாப்பிங் (Vaping) செய்யலாம். அதாவது, பேட்டரி உள்ள ஒரு மின் பொருளில் திரவ நிலையில் இருக்கும் நிகோடினை வெப்பமேற்றி அதை சுவாசிப்பது.

இதனால் ஏற்படும் தீங்கு சிகரெட்டைவிடக் குறைவு. ஆனாலும், வாபிங் செய்வது புதிய கலாசாரமாக மாறிவிடாத வண்ணம் புகைப்பழக்கத்தை நிறுத்துபவர்கள் மட்டுமே வாப்பிங் செய்யலாம் எனவும், சிறுவர்கள் மற்றும் புதிதாக யாரும் வாப்பிங் செய்ய வேண்டாம் எனவும் விளம்பரம் செய்து வருகிறது நியூசிலாந்து அரசு.

நியூசிலாந்தில் 18 வயதுக்கு மேலானவர்கள் வாப்பிங் செய்யலாம். 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே கடைகளில் சிகரெட் வாங்க முடியும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிகரெட் வாங்க முடியாது. வேலை இடங்களில், உணவகங்களில், பார்களில் என எந்தப் பொது இடத்திலும் புகைப்பதற்கு அனுமதி கிடையாது. மேலும், பாக்கெட்டாக இல்லாமல் உதிரியாக சிகரெட் வாங்க முடியாது. பள்ளிகளுக்கு அருகில், மைதானத்தில் என மாணவர்கள் கூடும் இடங்களில் புகைக்கத் தடை.

அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெர்ரால்
அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெர்ரால்
Twitter Image

நியூசிலாந்து அரசு தன் நாட்டில் புகைப்பழக்கம் இல்லாத இளம் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் புகையிலை வாங்க அனுமதி மறுக்கும் சட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற உள்ளது. அதன்படி, 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த யாருக்கும் புகையிலை வாங்கும் உரிமை இருக்காது. அவர்கள் புகைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். நியூசிலாந்தில் தற்போது பள்ளிகளுக்கு அருகில் உள்ள புகையிலைக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான புகையிலைக் கடைகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களால் நடத்தப்படுகின்றன. அதோடு வறுமையில் இருப்பவர்களே அதிகம் புகைப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு திட்டங்களை வகுத்து வருகிறது நியூசிலாந்து அரசு.

நியூசிலாந்து அரசின் புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் புற்றுநோய் சங்கத்தினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வலதுசாரி எதிர்க்கட்சியான ஏசிடி, இந்த நடவடிக்கைகள் வறுமையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என விமர்சித்துள்ளது. மேலும், ஏற்கெனவே புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்கள் மிகவும் மோசமான நிலையை அடைவர் எனவும் ஏசிடி கூறியுள்ளது.

புகையிலையைக் கட்டுப்படுத்தும் திட்டம் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது எனக் கூறியுள்ள வழக்கறிஞர் ஷேன் கவனடா ப்ரட்ப்ரூக், 'நியூசிலாந்தில் மௌரி மற்றும் பசிஃபிகா மக்களே அதிகம் புகைக்கின்றனர். புகையிலை நிறுவனங்கள் மக்களை அடிமையாக்கியுள்ளன' எனவும் கூறியுள்ளார்.

புகைபிடிப்பவருக்கு அருகில் இருப்பவர் பாதிக்கப்படாமல் இருக்கவும், புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புகைபிடிப்பதன் தீய விளைவுகளை மக்களிடம் சேர்க்கவும், புகைப்பழக்கம் இல்லாத வாழ்கை முறையை ஊக்குவிக்கவும் முற்படுகிறது. புகைப்பழக்கத்தை கைவிட விரும்புபவர்களுக்கு ஆலோசனை வழங்க ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் புகைப்பழக்கத்தைக் கொண்டு வருமானம் ஈட்டும் நாடுகளின் அரசுகள் மற்றும் அரசியல்வாதிகள் படிப்பினை பெறும்வகையில் நியூசிலாந்து செயல்படுவது பாராட்டுக்குரியது.

 புகைப்பழக்கம்
புகைப்பழக்கம்

இந்தியா, நியூசிலாந்துடன் ஒப்பிட முடியாத அளவு மிகப்பெரிய நிலபரப்பையும், மக்கள் தொகையையும், பல வகையான மக்கள் இனத்தையும் கொண்டிருப்பதால் காலம் காலமாக இங்கு தொடரும் புகைப்பழக்கத்தை நிறுத்துவது கடினமே! ஆனாலும், சமூக வலைதளங்களில் சிறுவர்கள் கையில் பீடி, சிகரெட்டுடன் இருக்கும் காட்சிகள் வருத்தமளிக்கின்றன. சிகரெட்டுக்கு ஆதரவான பேச்சுகள் குறைக்கப்பட்டு விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் சிகரெட்டுக்கு எதிரான முழக்கங்களை சிகரெட் அட்டையில் மட்டுமே காண முடிவது சாபம். அரசாங்கமோ தன்னார்வலர்களோ முன்வந்து சிகரெட் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்துவது, புகைப்பழக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் இருப்பதற்கான வழியாக அமையும்.