கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சென்னையைச் சேர்ந்த ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியானது. அந்த ஆய்வு முடிவின்படி கோவிட்-19 தொற்று பாதித்து சிகிச்சை பெற்ற பின் ஐந்தில் ஒரு நபருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் கிட்டத்தட்ட 18% மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 தமிழகத்தில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவிட்-19 சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 500 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான 500 கோவிட் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. 500 பேரில் 92 பேருக்கு சர்க்கரைநோய் ஏற்பட்டுள்ளது. இவர்களின் சராசரி ரத்தச் சர்க்கரையின் அளவு 239 mg/dl ஆக இருந்திருக்கிறது.
ஆய்வு குறித்து ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜெயந்தியிடம் பேசியபோது, ``ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருட காலமாகவே கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையம் (Post covid care centre) இயங்கி வருகிறது. இதுவரை 3,500 பேருக்கு மேல் இந்த மையத்தால் பயனடைந்துள்ளனர். என்னுடைய தலைமையில் மூன்று பயிற்சி மாணவர்களை வைத்து இங்கு ஓர் ஆய்வு மேற்கொண்டோம். கோவிட் 19 தொற்று ஏற்பட்டு மூன்று மாத காலத்துக்குப் பிறகு, அவர்களைப் பரிசோதிக்கத் தொடங்கினோம்.

ஆய்வுக்கு உட்படுத்திய 500 பேருக்கு கோவிட் தொற்று ஏற்படும் முன் அவர்களுக்கு சர்க்கரைநோய் இல்லை என்பதையும் உறுதிசெய்து கொண்டோம். 20 வயதில் தொடங்கி 80 வயது வரை உள்ள பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில் 18.4 % நபர்களுக்கு அதாவது 92 பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நோய் கண்டறியப்பட்டவர்களில் 55.4% பேர் 40 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த ஆய்வு தொடர்ந்து நடக்கும். 500 பேர் என்பது மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கை. அதனால் இதை இத்துடன் நிறுத்திவிடாமல் தொடர முடிவு செய்துள்ளோம்.
கோவிட் பாதிப்புக்குப் பிறகு சர்க்கரைநோய் ஏன்?
இதே போன்ற ஆய்வுகள் இன்னும் பல மருத்துவக் கல்லூரிகளிலும் நடத்தப்பட்டுள்ளன. உலக அளவில்கூட கோவிட் தொற்று ஏற்பட்ட பின் குறிப்பிட்ட விகிதத்தில் சர்க்கரைநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களாகப் பல அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது, கொரோனா வைரஸ் அழற்சியை ஏற்படுத்தும் தன்மையுள்ள (Pro inflammatory) வைரஸ். அது திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்தும் திறன்மிக்கது.

நுரையீரல், ரத்தநாளங்கள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்துவதைப் போல கணையத்திலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். இதனால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரைநோய் வரலாம். இன்சுலின் சரியாகச் சுரந்தாலும் அதன் செயல்பாடுகளில் பிரச்னை ஏற்படலாம். இரண்டாவது, கோவிட் தொற்று சிகிச்சைகளில் ஸ்டீராய்டு ஊசி வடிவிலும் மாத்திரை வடிவிலும் பயன்படுத்தப்படும். இந்த ஸ்டீராய்டுகளாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரலாம்.
ஸ்டீராய்டு மருந்துகளின் மூலம் சர்க்கரைநோய் ஏற்பட்டிருந்தால், அந்த மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டாலே சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். மூன்றாவது கோவிட் சூழலால் பல வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இவைகூட சர்க்கரைநோய் ஏற்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம். இவை அனைத்துமே பல்முனைக் காரணிகள். இன்னும் ஆய்வுகள் தொடர்வதோடு,பல நபர்களிடம் ஆய்வு செய்யும்போது எது பிரதான காரணமாக இருக்கக்கூடும் என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.

6 மாத இடைவெளியில் மாஸ்டர் ஹெல்த் செக் அப்!
கோவிட்-19 குணமான பின் ஆறு மாத இடைவெளியில் அனைவருமே முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்அப்) செய்துகொள்ள வேண்டும். இது ஒரு புதிய நோய் என்பதால் இதன் பின் விளைவுகள் பற்றி இன்னும் நமக்கு சரிவரத் தெரியாது. அதனால் சீரான இடைவெளியில் முழு உடலையும் பரிசோதனை செய்வது அவசியம். கோவிட் தொற்றுக்குப் பிறகான நல்வாழ்வு மருத்துவ மையங்கள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் அங்கு சென்று பயன்பெறலாம்.
அத்துடன் வருமுன் காப்பது போல தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கோவிட் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதோடு பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்" என்றார்.
மீண்டும் பொது மருத்துவமனையான ஓமந்தூரார் மருத்துவமனை!
2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட 3 மாதங்களிலேயே கோவிட் சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் முதல் பிரத்யேக கோவிட் மருத்துவமனையும் இதுதான். மூன்றாம் அலைக்குப் பிறகு நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அந்த மருத்துவனை மீண்டும் பொது மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மருத்துவர் ஜெயந்தி கூறுகையில், ``இன்றைய தேதியில் வெறும் 2 நபர்கள் மட்டுமே கோவிட் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேறு நோய்களுக்கான சிகிச்சையில் 390 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த மருத்துவமனை எலும்பியல், மகப்பேறு மருத்துவம், அறுவைசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடன் பொது மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது'' என்றார்.