ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியின் 18 மாத ஆண் குழந்தை, கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, டேபிள் மீது இருந்த பெரிய டி.வி தவறி குழந்தையின் தலைமீது விழுந்தது. இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பெற்றோர், குழந்தையை மீட்டு அங்கிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானதால், மேல் சிகிச்சைக்காக ஜனவரி 2-ம் தேதி, குழந்தையை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், துரதிருஷ்டவசமாக குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, சூழலை உணர்ந்து ஏற்றுக்கொண்ட பெற்றோர், தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து பிறரை வாழவைக்க, தங்களது மீளா துயரிலும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி, குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களும் தானமாகப் பெறப்பட்டன. கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 4 மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டன.
இதன் மூலம் ‘தமிழகத்திலேயே மிகக் குறைந்த வயதுடைய உறுப்புக் கொடையாளர்’ என்ற பெருமையை, அந்த 18 மாத ஆண் குழந்தை பெற்றிருக்கிறான்.
``தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) தரவுகளின்படி, தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கி 2023 ஜனவரி மாதம் 6-ம் தேதி வரை 18 வயதுக்கு உட்பட்ட 52 குழந்தைகளின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில், மிகக் குறைவான வயதுடையதும், முதல் இடத்தைப் பிடித்திருப்பதும் இந்த 18 மாத குழந்தை தான்’’ என்ற தகவலை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் டீன் தேரணிராஜன் நம்மிடம் தெரிவித்தார்.