
யாருக்கு... ஏன்?
கருத்தரிக்காத பெண்களுக்கும், மாதந்தோறும் சீராக மாதவிடாய் வராத பெண்கள் பலருக்கும் இன்று `ஒவேரியன் டிரில்லிங்’ (Ovarian Drilling) சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
அதன் சாதக, பாதகங்கள் பற்றியும், யாரெல்லாம் அதைச் செய்துகொள்ளலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

ஒவேரியன் டிரில்லிங் சிகிச்சை யாருக்கெல்லாம் தேவைப்படும்?
Laparoscopic Electrocoagulation of the Ovarian Surface - LEOS எனும் ஒவேரியன் டிரில்லிங் சிகிச்சை, உடல் பருத்த பெண்களுக்கும், சினைப்பை வீங்கி வாத்து முட்டைபோல இருக்கும் (பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்-PCOS) பெண்களுக்கும், மாதவிடாய் சீராக வராத பெண்களுக்கும் அளிக்கப்படுகிறது.
ஒவேரியன் டிரில்லிங் சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
லேப்ராஸ்கோப்பி முறையில் இரண்டு சினைப்பைகளிலும் கரன்ட் மூலம், அதற்கான பிரத்யேக ஊசியினால் 5 முதல் 10 துளைகள் இட்டு அவற்றிலுள்ள கெட்ட நீரை வெளியில் எடுப்பதே ஒவேரியன் டிரில்லிங் சிகிச்சை. சினைப்பைகளின் அளவைப் பொறுத்து எத்தனை துளையிடுவது என்று முடிவு செய்யப்படும்.

சாதக பாதங்கள் என்னென்ன?
கெட்ட நீருடன்கூடிய கெட்டுப்போன கருமுட்டையையும் வெளியேற்றுவதால், மாதந்தோறும் கருமுட்டை சீராக வெளியேறி கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் மாதவிடாய் சுழற்சி சீராக ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தச் சிகிச்சையின் பாதகம் என்றால், இதைச் செய்வதனால் ஒரு சிலருக்கு ‘பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்’ (PID) எனப்படும் பாதிப்பு ஏற்படக்கூடும். அதாவது கர்ப்பப்பையுடன் சினைப்பை, கரு இணைக்குழாய் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு சிலருக்கு ‘ப்ரீமெச்சூர் ஒவேரியன் ஃபெயிலியர்’ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது கருமுட்டை விரைவில் காலியாகிவிடுவது போன்ற நிலை.சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூடியவர்கள்...
திருமணமான பெண்கள் மட்டுமே.
அதிக எடையுள்ள பெண்கள் (Obese women).
சினைப்பைகள் பெருத்து, வாத்து முட்டைபோல இருப்பவர்கள் (3x3 செ.மீ).
முகத்தில் மட்டும், அதாவது தாடையில் ரோம வளர்ச்சி இருப்பவர்கள்.
31 வயதுக்குள் இருக்கும், சீராக மாதவிடாய் வராத பெண்கள். பிசிஓஎஸ் பிரச்னை உள்ளவர்கள்.
சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாதவர்கள்...
திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் சீராக மாதவிடாய் வரும் பெண்கள் இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இந்தச் சிகிச்சையை ஏற்கெனவே மேற்கொண்டிருப்பவர்கள் மீண்டும் செய்யக் கூடாது.