விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இருக்கிறது பாம்பூண்டி கிராமம். இங்குள்ள ஏரியில், நேற்றைய தினம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100-நாள் வேலை) நடைபெற்றிருக்கிறது. அதில், 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த புதர் பகுதி ஒன்றை சுத்தம் செய்ய முயன்றபோது, புதரிலிருந்த தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் பறக்கத் தொடங்கியதோடு, அங்கு பணிபுரிந்து வந்தவர்களைக் கொட்டத் தொடங்கின. சுமார் 50-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின. இதனால், பாதிப்படைந்த சிலர் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டபடி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும், ஒரு சில பெண்களை அதிக அளவில் தேனீக்கள் கொட்டியதால், அவர்கள் மயக்கமடைந்து விழுந்தனர். அதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை மயிலம் ஒன்றியத் தலைவர் யோகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.