கட்டுரைகள்
Published:Updated:

கொரோனா: வெல்ல முடியாத வியாதி அல்ல!

வெல்ல முடியாத வியாதி அல்ல
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்ல முடியாத வியாதி அல்ல

அந்த நம்பிக்கையே என்னை முழுமையாக குணமடையச் செய்தது’’ என்கிறார் அந்த நம்பிக்கை சற்றும் குறையாமல்.

உலகமே இந்த ஒற்றை வார்த்தைக்கு பயந்து முடங்கியிருக்கிறது... கொரோனாவை குணப்படுத்தவோ, வராமல் தடுக்கவோ இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லைதான்.

ஆனால், கொரோனா என்ன, அதையும் தாண்டிய கொடூர நோய் தாக்கினாலும் மீண்டு வருவதற்கு நம் எல்லோரிடமும் ஒரு மருந்து இருக்கிறது. அதன் பெயர் நம்பிக்கை. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைப்போலவே, அதிலிருந்து மீண்டு குணமாகிறவர்களின் எண்ணிக்கையும் ஆறுதலளிக்கிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, அதிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெற்றவர்கள் சிலரின் நம்பிக்கை அனுபவங்கள் இங்கே...

``தன்னம்பிக்கையே என்னை குணமாக்கியது.’’

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், 14 நாள்களிலேயே முழுமையாக குணமடைந்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த 28 வயது இளைஞர், சென்னை ஃபீனிக்ஸ் மாலில் பணியிலிருந்தபோது, சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அவரிடமிருந்து இந்த இளைஞருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த இளைஞர் 14 நாள்களில் கொரோனாத் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். அவரை 11-ம் தேதி அன்று வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர் மருத்துவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த இளைஞர் “சென்னை ஃபீனிக்ஸ் மாலில் பணியில் இருந்தபோது என்னுடன் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருப்பதாகத் தகவல் வந்தது. அப்போது எனக்கும் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகித்து, உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்யச் சொன்னார்கள். அவர்களே அரசுக்கும் தகவல் கொடுத்தார்கள். உடனே மருத்துவக்குழு எனக்கு போன் செய்து நான் இருக்கும் இடத்தை விசாரித்து, வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வெல்ல முடியாத வியாதி அல்ல
வெல்ல முடியாத வியாதி அல்ல

பரிசோதனை செய்ததில் எனக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. உடனே என்னை முழுப் பாதுகாப்போடு தனிமைப் படுத்தினர். அந்தச் சூழலில் நான் இறந்துவிடுவேனோ என்ற பயம் அதிகமானது. நான் பயப்படுவதைப் பார்த்த மருத்துவர்களும், செவிலியர்களும் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தனர். மருத்துவர்கள் காலை, இரவு என்று இரண்டு வேளைகள் ஊசி போட்டார்கள். தினமும் காலையில் இட்லி, சப்பாத்தி, பூரி. மதியம் சாதம், முட்டை, பொரியல், அப்பளம். இரவு இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளைக் கொடுத்தார்கள். மருத்துவர்களும், செவிலியர்களும் கொடுத்த நம்பிக்கைதான் எனக்கு ஆறுதல் தந்தது. அந்த நம்பிக்கையே என்னை முழுமையாக குணமடையச் செய்தது’’ என்கிறார் அந்த நம்பிக்கை சற்றும் குறையாமல்.

‘`மீண்டும் கொரோனா வார்டில் வேலை பார்க்க விரும்புகிறேன்’’

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கேரளா வந்த மூன்று மாணவர்களுக்கு முதன்முதலாக கொரோனா பாதித்தது. அவர்கள் மூன்றுபேரையும் முழுமையாகக் கண்காணித்து சிகிச்சை அளித்ததால் நோய் குணமானது. இந்த நிலையில் இத்தாலியில் இருந்து வந்த பத்தணம்திட்டாவைச் சேர்ந்த மூன்றுபேர் கொரோனா சோதனையில் இருந்து மிஸ் ஆனதால் அவர்கள் மூலம் அவர்களின் குடும்பதைச் சேர்ந்த 93 வயதான நபர், அவரின் 88 வயது மனைவி ஆகியோருக்குக் கொரோனாத் தொற்று பாதித்தது. அவர்களுக்குச் சிகிச்சை அளித்து குணமடைய வைத்து மருத்துவ உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது கேரளம். கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த முதிய தம்பதியினருக்கு சிகிச்சை அளித்த நர்ஸுக்கும் கொரோனா பாதித்ததுதான் சோகம். ஆனால் 13 நாள்கள் சிகிச்சையில் கொரோனா குணமடைந்ததும் வீட்டுக்குப் புறப்பட்ட நர்ஸ், ‘மீண்டும் அதே கொரோனா வார்டில் பணிபுரிய வருவேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றது அவர் மீதான மதிப்பை மேலும் அதிகரித்தது.

நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த அவரிடம் பேசினோம்,“நான் திருவனந்தபுரம் நெடுமங்காட்டில் பி.எஸ்ஸி நர்ஸிங் முடித்திருந்ததால் 2017-ல் கோட்டயம் மெடிக்கல் காலேஜில் நர்ஸ் பணி கிடைத்தது. எர்ணாகுளத்தில் இருந்து கோட்டயம் மெடிக்கல் காலேஜ் போவதற்கு இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்ததில் இருந்து நான் கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியிலேயே தங்கி வேலைபார்த்தேன். வீட்டுக்குப் போகவில்லை. பத்தணம்திட்டாவைச் சேர்ந்த முதிய தம்பதியினரை கவனித்ததுதான் எனது முதல் பணியாக இருந்தது. அவர்கள் இருவரும் ஐ.சி.யு-வில் இருந்தனர். அதில் 93 வயதான முதியவருக்கு இதயப் பிரச்னை இருந்தது. அவரின் மனைவிக்கும் சில பிரச்னைகள் இருந்தன. இருவருக்கும் முதலில் தனித்தனி அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததால் மிகவும் சங்கடப்பட்டனர். அந்தம்மாவுக்குக் காது கேட்பதில் குறைபாடு இருந்தது. அதனால் அவரின் அருகில் சென்றுதான் பேச வேண்டும். முதியவரோ கிராமப்புற உணவுகளான கிழங்கு, கஞ்சி, மீன் சாப்பிடுவது வழக்கம். கிழங்கு கிடைக்கவில்லை, ஆனால் கஞ்சியும், மீனும் ஏற்பாடு செய்துகொடுக்கப் பட்டது. கவச உடை அணிந்திருந்ததால் நான்கு மணி நேரம் மட்டுமே பணியில் நிற்க முடியும். அந்த உடையில் இருக்கும் அந்த நான்கு மணி நேரமும் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டோம்.

கொரோனா வார்டில் மொத்தம் 12 நாள்கள் பணி செய்தேன். அதாவது மார்ச் 22-ம் தேதி வரை வேலை செய்தேன். முதலில் எனக்கு ஜலதோஷம் ஏற்பட்டது. 23-ம் தேதி காலை பணிக்குச் சென்றபோது என் குரலில் மாற்றம் ஏற்பட்டது, உடல் சோர்வானது, தலைவலி, உடல்வலி ஏற்பட்டதால் எங்கள் தலைமை நர்ஸை அழைத்து விவரம் தெரிவித்தேன். உடனடியாகக் காய்ச்சல் வார்டுக்குச் சென்றேன். பிறகு என்னை டெஸ்ட் செய்து கொரோனா அறிகுறி இருந்ததால் தனி வார்டில் சேர்த்தார்கள். என்னால் வேறு யாருக்கேனும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான் உடனடியாக நான் என் உடல்நிலை குறித்து ரிப்போர்ட் செய்தேன். தனி வார்டில் சக நர்ஸுகள் என்னை மிகவும் கனிவுடன் கவனித்துக்கொண்டார்கள். எங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் என்னை போனில் தொடர்புகொண்டு ‘நீங்கள் கவலைப்பட வேண்டாம். சுகாதாரத்துறை உங்களுக்கு முழு உறுதுணையாக இருக்கும்’ என உற்சாகம் அளித்தார். தனி வார்டில் 13 நாள்கள் சிகிச்சை எடுத்த பிறகு குணமடைந்து, ஏப்ரல் 3-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். அதன் பின்னும் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் என் வீட்டில் நான் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். 14 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் இணைவேன்.

நான் மீண்டும் கொரோனா வார்டில் பணி செய்ய விருப்பம் தெரிவித்ததும் முதலில் என் கணவர்தான் முழு ஆதரவைத் தெரிவித்தார். உற்சாகப்படுத்தினார். என் பெற்றோரும் சப்போர்ட் செய்தார்கள். பெரிய கொடும்நோய் பரவும் காலத்தில் என்னாலான சிறிய உதவியைச் செய்ய முடிந்த ஆத்ம திருப்தி மட்டுமே எனக்கு இருக்கிறது” என்றார்.

“கொரோனாவிலிருந்து மீளலாம்... அச்சப்படத் தேவையில்லை’’

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அவர். ஏப்ரல் 10-ம் தேதி, மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பிய அந்த இளைஞரை மருத்துவர்களும் செவிலியர்களும் கைதட்டிக் கரவோசையுடன் வழியனுப்பி வைத்தனர்.

‘‘கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலம் ஊர் திரும்பினேன். அருகில் பயணம் செய்தவரிடமிருந்து எனக்குக் கொரோனா தொற்றியது. விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது பரிசோதனை செய்தனர். அப்போது, உடல்நலம் பாதிக்கப்படவில்லை. இரண்டு நாள்கள் கழித்தே சளி, இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் என்னை அனுமதித்தனர்.

கொரோனாத் தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாள்கள் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சம் இருந்தது. ‘கொரோனாவிலிருந்து மீளலாம். அச்சப்படத் தேவையில்லை’ என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொடுத்த பிறகே சகஜ நிலைக்குத் திரும்பினேன். என் குடும்பத்தினரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களுக்குத் தொற்று இல்லை. அடுத்த 28 நாள்களுக்கு வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்கிறார் அன்புடன்.

“புதிய வாழ்க்கைக்குத் திரும்புகிறேன்’’

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 42 வயது நபர் 18 நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். கொரோனாவை வென்ற அந்த நபரின் கதை இது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்து இளைஞரான இவர், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் இருந்தார். பிப்ரவரி மாதம் கேரளாவில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்று துபாய் திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அங்கு சென்ற பின்னர், அவருக்குக் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. கொரோனாத் தொற்று குறித்த அச்சம் உலகம் முழுவதும் பரவிய அந்த நிலையில், தன் உடல்நிலை பற்றிக் கவலைப்பட்ட இந்த நபர், நெல்லைக்கு வந்துவிட்டார். தனக்கு ஏற்பட்டிருப்பது கொரோனா பாதிப்பாக இருக்கலாம் எனச் சந்தேகம் அடைந்த அவர், தன் குழந்தை மற்றும் மனைவியின் மீதுள்ள அக்கறையால் லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார்.

நான்கு நாள்கள் தனிமையில் தங்கி, அறிமுகமான மருத்துவரிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை பெற்று வந்த நிலையிலும் அவருக்குக் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் அதிகரித்ததால் மார்ச் 21-ம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். மறுநாளே அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து 18 நாள்கள் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கடந்த 8-ம் தேதி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.

‘`சிகிச்சைக்காகத் தனிமையில் இருந்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது. மருத்துவர்கள் மிகுந்த அக்கறையுடன் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். என்னை 14 நாள்கள் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மீண்டும் எனக்குக் கொரோனாப் பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் வழக்கமான பணிகளை கவனிக்கலாம் என அறிவுறுத்தியிருப்பதால் தனிமையில் இருக்கிறேன். மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் புதிய வாழ்க்கை கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.