கனடாவில், மனித இதயத்தின் ஒரு பகுதியை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி, விஞ்ஞானிகள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். நுரையீரல், சிறுநீரகங்கள் வரிசையில், மனித இதயத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை, இதய திசுக்களின் தட்டையான தாள்களுக்கு மாற்றாக, வென்ட்ரிக்கிளின் உண்மையான 3டி மாதிரியை உருவாக்க ஒரு சில முயற்சிகள் மட்டுமே நடந்துள்ள நிலையில், துடிக்கக்கூடிய செயற்கை இதயத்தின் ஒரு பகுதி, கனடாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகம் மற்றும் மான்ட்ரீல் பல்கலைக்கழகதின் பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சியாளர்கள், மனித இதயத்தின் முக்கிய அறையான இடது பக்க வென்ட்ரிக்கிளின் சிறிய அளவிலான மாதிரியை ஆய்வகத்தில் வளர்த்துள்ளனர். விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட, மில்லிமீட்டர் நீளமுள்ள நாளம், ரத்த நாளங்களைப் போலவே துடிக்கிறது.
இந்த உறுப்பானது, செயற்கை மற்றும் உயிரியல் பொருள்களின் கலவையைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இளம் எலிகளின் இதய திசுக்களில் இருந்து செல்களை எடுத்து, சிந்தெடிக் மற்றும் உயிரி பொருள்களைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து டொரன்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்கோல் ஓகோவாடியன் கூறும்போது, ``இந்த மாதிரியைக் கொண்டு, ஒவ்வொரு முறை வென்ட்ரிக்கிள் சுருங்கும்போது எவ்வளவு திரவம் வெளியே தள்ளப்படுகிறது என்பதை அளவிடலாம். அந்த திரவத்தின் அழுத்தத்தையும் அளவிட முடியும்" என்றார்.

தற்போதுள்ள முறையில், நோயுற்ற அல்லது ஆரோக்கியமான இதயத்தை ஆராய, வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளே உள்ளன. ஆனால், இந்தப் புதிய மாதிரியைப் பயன்படுத்தி, இதயம் சார்ந்த நோய்கள் குறித்து மேலும் ஆய்வு செய்யலாம்; அறுவை சிகிச்சையின்றி பரிசோதிக்க முடியும். அத்துடன், இதயப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.