வேலைக்குச் செல்லும் பெண்கள், மூன்றாவது முறை கர்ப்பமானால் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வேலைகளிலும் கூட மகப்பேறு விடுமுறை மறுக்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு வழக்கில், தமிழ்நாட்டில் ஒரு பெண் முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவர், இரண்டாவது முறை கர்ப்பமானபோது, அது மூன்றாவது குழந்தை என்று கூறி, அவருக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பின், அவருக்கு ஓராண்டுக் காலம் மகப்பேறு விடுமுறையை வழங்கியுள்ளனர். அதனால் அரசாங்கமே இனி அரசு வேலையில் இருக்கும் பெண்களுக்கு இரண்டு பிரசவங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டது.

இதே போல, டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் ஏற்கெனவே இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின், அந்த வேலையில் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த பின், மூன்றாவது குழந்தையுடன் அவர் கர்ப்பமான போது, அந்த குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது குழந்தை பெயரிலேயே ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, ”இது என்னுடைய மூன்றாவது குழந்தையாகவே இருந்தாலும், நான் வேலைக்குச் சேர்ந்த பின் எடுக்கும் முதல் மகப்பேறு விடுமுறை இதுதான். என் மகன், மூன்றாவது குழந்தை என்ற ஒரே காரணத்தால், அவனுக்குத் தாயின் பராமரிப்பைத் தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார். இந்த வழக்கின் தீர்பு இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர், அஞ்சனா தேவி கருணா ஹரிராமிடன் பேசினேன். “2017க்கு பின், இந்திய மகப்பேறு சலுகை சட்டத்தின்படி, பெண்களுக்கு 26 வாரம்/6 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமுறும் சமயத்தில் 12 வாரங்கள்/மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரை, 12 மாதங்கள் (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு வழக்கில், முதல் திருமணத்தில் ஏற்கெனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண், குழந்தைகளை வளர்க்கும் உரிமையை முன்னாள் கணவரிடம் இழந்துவிட்டால், அவருக்கு இரண்டாம் திருமணத்தில் பிறக்கும் குழந்தையே முதல் குழந்தையாகக் கருதப்படும் என்கிறது சட்டம். அதனால், மூன்றாவது முறை அந்த பெண் கர்ப்பமானாலுமே அது இரண்டாம் திருமணத்தில் பெறப்போகும் முதல் குழந்தை என்பதால், சட்டப்படி அது முதல் பிரசவமாகப் பார்க்கப்பட்டு அதற்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
2018ல் வெளியான அரசாணைப்படி, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்று இரண்டாவது முறை மகப்பேறு விடுப்பு கோருபவர்களுக்கு சட்டப்படி விடுமுறை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பார்க்காமல், பிரசவத்தின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு விடுமுறை வழங்கச்சொல்லி அரசாணை கூறுகிறது. இது தவிர, குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்களுக்கும், 12 வாரங்கள் மகப்பேறு விடுமுறை உண்டு. தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது மூன்று மாதங்களுக்குள் இருக்க வேண்டும். வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் தாய்களுக்கும் மகப்பேறு விடுமுறை உண்டு. அதே சமயம் வாடகைத்தாயாக வேறு ஒரு பெண்ணிற்காகக் குழந்தையைச் சுமந்து கொடுக்கும் பெண்ணிற்கு எந்த மாதிரியான சலுகைகள் இருக்கின்றன என்பது குறித்து சட்டத்தில் தெளிவு இல்லை.

ஒரு நிறுவனம், ஊழியர்களுக்கு வழங்கும் மகப்பேறு விடுமுறை, சலுகைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றிய முழு விவரங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். நிச்சயம் இந்தத் தகவல்களை மனிதவள மேம்பாட்டு விதிமுறைகளில் குறிப்பிட வேண்டியது நிறுவனத்தின் கடமையாகும். அதே போல, கர்ப்பமாக இருக்கும் பெண், வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற சூழ்நிலை இருக்கும்போது அவரை நிச்சயம் அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இன்று பல தனியார் நிறுவனங்களில், முதல் குழந்தைக்குக் கூட மகப்பேறு விடுப்பு வழங்க யோசிக்கிறார்கள். அதிலும் இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்யும் வழக்கம் அறிமுகமானதில், பெண்கள் மகப்பேறு விடுமுறையிலிருந்தாலுமே அவர்கள் தங்கள் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு புறம் குழந்தையைப் பராமரித்தபடியே அலுவலக வேலையையும் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் மகப்பேறு விடுப்பு என்பது கலெக்டரில் தொடங்கி சுரங்கத்தில் வேலை செய்யும் பெண் வரை எல்லோருக்குமே அடிப்படை உரிமை என்பதைப் பெண்கள் அனைவரும் உணர வேண்டும். சட்டத்தில் வெறும் இரண்டு குழந்தைகள் வரைதான் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்று எங்குமே குறிப்பிடவில்லை. அதனால், மூன்றாவது முறை கர்ப்பம் தரிக்கும் பெண்களும் நிச்சயம் தங்களுக்கான மகப்பேறு விடுப்பைக் கோரலாம். உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்" என்கிறார் வழக்கறிஞர் அஞ்சனா.