Published:Updated:

ஊட்டச்சத்துக் குறைபாடுகள், ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை திடம்... கர்ப்பகால முன்னேற்பாடுகள்! - இப்படிக்குத் தாய்மை 12

குழந்தை
News
குழந்தை

வைட்டமின் குறைபாடுகள், ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை திடம்... தவறவிடக் கூடாத கர்ப்பகால முன்னேற்பாடுகள்!

Published:Updated:

ஊட்டச்சத்துக் குறைபாடுகள், ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை திடம்... கர்ப்பகால முன்னேற்பாடுகள்! - இப்படிக்குத் தாய்மை 12

வைட்டமின் குறைபாடுகள், ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பப்பை திடம்... தவறவிடக் கூடாத கர்ப்பகால முன்னேற்பாடுகள்!

குழந்தை
News
குழந்தை

குழந்தைகளை நாம் அறிவாளிகளாக ஆக்க வேண்டாம். ஏனெனில், அவர்கள் பிறக்கும்போதே நம்மைவிடப் பெரிய அறிவாளிகள்தான். அதை அடையாளம் கண்டு அங்கீகரித்து அந்த அறிவுத்திறன் குறையாமல் பார்த்துக்கொண்டாலே போதும். அதற்கு முன்னதாக, குழந்தை நல்லபடியாகப் பிறக்க முதலில் வழிவகை செய்ய வேண்டும்.

குழந்தை
குழந்தை

குழந்தைகளின் மூளை வளர்ச்சியின் வேகத்தையும் அதன் செயல்பாட்டையும் முந்தைய அத்தியாயங்களில் பல்வேறு உதாரணங்கள் மூலமாகப் புரிந்துகொள்ள முயன்றோம். மூளை வளர்ச்சியின் ஆரம்பம் சரியாக இல்லாவிட்டால், பின்னர் அந்தக் கட்டமைப்பை சரிசெய்வது சற்று சிரமமான காரியம் என்பதையெல்லாம் ஆராய்ந்தோம். குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய சில நியூரோசைக்காலஜிஸ்ட்கள் சொல்லும் வாசகம் என்னவென்றால், குழந்தையின் முதல் 3 வயதில் நடக்கும் மூளை மாற்றங்கள் மனிதனின் வாழ்நாளில் பின் எப்போதும் நடைபெறுவது இல்லை.

இப்போது நம் கதையில் வரும் ரிஷப்பை பொறுத்தவரை, அவன் சற்று வித்தியாசமான, துறுதுறு குழந்தை. அவன் சிறப்புக்குழந்தை அல்ல. என்றாலும் மதுமிதாவுக்கு, தன் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற பயம் அதிகம். மற்ற குழந்தைகளைக்காட்டிலும் ரிஷப்புக்கு சற்று பரபரப்பும் கொஞ்சம் குறும்பும் ஜாஸ்தி அவ்வளவுதான். 'ஆனால் அவனுக்கு மற்ற குழந்தைகளைப்போல அமைதியும் புரிந்துணர்வும் இல்லையே' என்ற கவலையே மதுவுக்கு.

குழந்தை
குழந்தை

எதிர்வீட்டுக் குழந்தை சாதனா மாதிரி ரிஷப்புக்கு வரையத் தெரியவில்லை என்று வருத்தப்பட்டு, அவனைப் பிடிவாதமாக ஓவியப் பயிற்சிக்கு அனுப்பும்போதோ, பக்கத்து வீட்டு கவின்போல் இவன் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆதங்கப்பட்டு அவனை அழுக அழுக டான்ஸ் கிளாஸ் அனுப்பியபோதோ மதுவுக்குத் தெரியாது... இவற்றின் பின் விளைவுகள் என்னவாக இருக்குமென்று. எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே நம் சிறு பிரச்னைகூட பெரிதாகவே தெரிவது இயல்பு.

சரி, இன்றைய சூழலில் குழந்தைகளை வளர்க்க என்ன தேவை. பெற்றோருக்கு எத்தகைய மனோபாவம் வேண்டும். அடிக்கலாமா, கண்டிக்கலாமா, அதட்டினால் போதுமா அல்லது அன்பை மட்டும்தான் பொழிய வேண்டுமா. பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படிச் சரிசெய்வது? செல்லம் கொடுத்தால் கெட்டுவிடுவார்களா?

இப்படி ஆயிரம் கேள்விகள் தற்போதைய பெற்றோர்களுக்கு. இவற்றுக்கெல்லாம் விடை சொல்வதற்கு முன், இந்தக் கேள்வி இன்னும் முன்னதாக, அதாவது கருவுறுதலுக்கு முன்னரே கேட்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதை உணர்வோம்.

குழந்தை
குழந்தை

ஆம்... நல்ல முறையில் முழு ஆரோக்கியத்தோடு பிறக்கும் குழந்தைகள் அநாவசியமாக அழுவதோ, தேவையில்லாமல் பிடிவாதம் பிடிப்பதோ இல்லாமல் வளர்வார்கள். அவர்களால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள முடியும். பதற்றம் இல்லாமலும், ஆராவாரம் இல்லாமலும் இயல்பாய், பக்குவமாய், இடத்துக்கு ஏற்றாற்போல் இருக்க அவர்களால் முடியும்.

அப்படியென்றால் தவறு எங்கே நடக்கிறது?

ஆக, மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை, அதைவிட முக்கியமான கேள்வி... `நம் குழந்தைகள் நல்ல முறையில் ஆரோக்கியத்தோடும், மனநலனோடும் இன்றைய காலகட்டத்தில் பிறக்கிறார்களா?' இதற்கு விடை கிடைத்தாலே குழந்தை வளர்ப்பில் உள்ள 80% பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

குழந்தை
குழந்தை

ஆனால், அதிர்ச்சி எங்கு ஆரம்பிக்கிறது தெரியுமா?

இன்றைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் தரவரிசையில் முதல் 10 நாடுகளில் முதல் நாடாக இந்தியா இருக்கிறது. சீனா ஆண்டு ஒன்றுக்கு 11 லட்சம் குறை மாதப் பிறப்புடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. என்றாலும், அதைவிட நம் நாடு மூன்று மடங்கு அதிகமாக, 35 லட்சத்துக்கும் அதிகமான குறைப்பிரசவக் குழந்தைகளைப் பார்க்கிறது.

ஒவ்வொரு 53 விநாடிக்கும் ஒரு குழந்தை பிரசவத்தில் இறக்கிறது என்ற புள்ளிவிவரம், நாம் ஏதோ முக்கியமான இடத்தைத் தவறவிட்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது. அவை பல்வேறு காரணங்களாக இருந்தாலும், தாய்மையைச் சரிவர தயார்படுத்தவில்லை என்ற மையக்கருத்தில் இருந்தே தொடங்க வேண்டும். இந்தக் கட்டுரை வாயிலாக அதற்கான காரணிகளையும் தீர்வுகளையும் எத்தனையோ இடத்தில் நான் பதிவிட்டிருந்தேன். அவற்றைச் சரிசெய்யாமல் பின்னால் வரும் எந்தக் கேள்விக்கும் பதில் பொருந்தாது.

குழந்தை
குழந்தை

முதலாவதாக, குறைமாதத்தில் ஏன் குழந்தைகள் பிறக்கின்றன? ஆரோக்கியமான கர்ப்பகாலம் ஏன் நிகழாமல் போகிறது?

இளம் வயதில் திருமணம், உணவுமுறை விபரீதம், வாழ்வியல் சூழலில் பெரும் மாற்றம், மனதளவில் நிலவும் பதற்றச்சூழல், குழந்தையின்மைக்கு எடுத்துக்கொள்ளும் அதிதீவிரமான சிகிச்சை, பொறுமையில்லாமல் அவசர அவசரமாக எதையும் செய்ய நினைக்கும் நவநாகரிக வேகம், வயது கடந்து உண்டாகும் கர்ப்பம்... இவையெல்லாம்தான் முக்கியக் காரணிகள். இவற்றையெல்லாம் சரிசெய்த பின்னர், தாய்மையும்கூட இன்னும் சற்றுக் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் நல்ல தாய்மைக்குத் தயார் ஆகி, நல்ல மக்கட்பேறு உண்டானால் இந்த நாடும் ஒவ்வொரு வீடும் ஆரோக்கியமாக இருக்கப்போவதில் ஐயம் இல்லை.

முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் உலகில் உள்ள எண்ணற்ற பிரச்னைகளுக்கு மூலகாரணமாகவும் குறைகளின் ஆரம்பமாகவும், கவலைகளின் தொடக்கமாகவும், போராட்டங்களின் ஆணிவேராகவும் இருப்பது... அன்பு குறைவதே. நோய்களின் ஆரம்பமாகட்டும், மன உளைச்சலின் மருந்தாகட்டும், உறவுகளின் சிக்கலாகட்டும், சிறிய விஷயம் முதல் பெரிய பெரிய நிகழ்வுகளின் மூலாதாரம் என்பது எங்கோ, யாரோ அன்புக்காக ஏங்கும் அந்த நிமிடத்தில் தொடங்குகிறது. அதைச் சரிசெய்யாமல் எந்த மாதரி சோடனைகள் அதன் பின்னால் நடந்தாலும் எதிலும் மாற்றம் வராது.

குழந்தை
குழந்தை

கணவன், மனைவியிடம் அன்பு குறையும் பொருட்டு அது குழந்தைகளிடம் எதிர்மறை குணாதிசயங்களாக வெளிப்படும் என்பது மிகப்பெரிய உண்மை. அது அனைவருக்கும் புரிந்தே ஆக வேண்டும். குழந்தை என்பதும் கடவுள் என்பதும் என்னைப் பொறுத்தவரை வேறு சொற்கள் இல்லை.

ஒரு குழந்தை வளரும் தறுவாயில் எந்த நேரமும் கணவன், மனைவிக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்கள் எல்லாம், பின்னர் எதிர்காலத்தில் குழந்தையிடம் எதிர்மறை எண்ணங்களாக வெளிப்பட்டே தீரும் என்கின்றன ஆராய்ச்சிகள். இங்கு நம் கதையில் வரும் ரிஷப்பின் தந்தை கப்பலில் வேலை செய்பவர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விடுமுறைக்கு வருபவர். மதுமிதா தனியாக இவனை வளர்த்து வந்தார். இன்று ஒரு குழந்தையைத் தனியாக வளர்ப்பது என்பதே பெரும் சவால்.

குழந்தை
குழந்தை

உடனே, சென்ற தலைமுறைக்கு இப்படி ஒரு கேள்வி எழுப்பும். `அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டில் 10 குழந்தைகள் இருந்தாலும் அவர்களை வளர்க்க இவ்வளவு சிரமப்படவில்லையே?' அட, அந்தக் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறதே. ஆம், 10 குழந்தைகளுக்குப் பதிலாக இன்று ஒற்றைப் பிள்ளையை வைத்துக்கொண்டு, பத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியவற்றை எல்லாம் இந்த ஒற்றைக் குழந்தைக்குத் தேவைக்கும் அதிகமாகத் திணிக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. அவசியமானவை கிடைக்காமலும் அவசியமற்றவை அதிகம் கிடைத்தும்விடுகிற காலச்சூழல் இது.

பத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்த அட்டென்ஷன் இன்று ஒன்றுக்கு மட்டும். அப்போது அந்தக் குழந்தை செய்ய வேண்டியவற்றை எல்லாம் நாமே செய்துவிடுகிறோம். ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது.
ஆனந்தி ரகுபதி

இந்த அதீத அட்டென்ஷனும் அக்கறையும் அவர்களை துன்பப்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது. கீழே விழுந்தால் தானே எழுந்து ஓடி வரும் குழந்தைக்குத்தானே நாளை வாழ்க்கையில் எங்கு சறுக்கினாலும் எழுந்து நிற்கத் தெரியும். கீழே விழவே விடாமல் வளர்க்கும் பாங்கு தவறு.

மொத்தத்தில், ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகளை எந்தக் காலத்திலும் குறைசொல்ல மாட்டார்கள். காரணம் அவர்களுக்குத் தெரியும்... தங்களைக் கண்ணாடியாகப் பாவித்தே அந்தக் குழந்தை வளர்ந்துள்ளது என்று. குழந்தைகள், இந்த பிரபஞ்சத்தையே இயக்கவல்ல மாபெரும் ரிமோட் கருவி போன்றவர்கள். அவர்களைக் கையாள பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அந்த ரிமோட்டாகவே மாறி வேலைசெய்தால் பின்னாளில் நஷ்டம் நமக்கே.

குழந்தை
குழந்தை

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற வரிகளில் எத்தனை எத்தனையோ உன்னத அர்த்தம் பொதிந்துள்ளது. சாதுரியமான குழந்தை வேறு யாரும் அல்ல, ஒரு சாதுரியமான தாயால் வளர்க்கப்படும் குழந்தையே.

ஒரு குழந்தையின் உருவாக்கமும் வளர்ப்பும் அப்படி தாய்க்கு மட்டுமே பெரும்பங்கானதாய் இருப்பது ஏன் என்று ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. கருமுட்டையிலேயே தொடங்குகிறது அந்த வேறுபாடு.

ஆணின் விந்துவின் அளவை ஒப்பிட்டால் பெண்ணின் கருமுட்டை 30 மடங்கு பெரியது. அடுத்தபடியாகக் குழந்தையை வளர்த்து ஆளாக்க அவள் தன் உதிரம், தனக்குக் கிடைக்கும் பிராணவாயு, அவளுடைய ஆற்றல் இப்படி அனைத்திலும் 30% கொடுத்து இன்னோர் உயிரை ரத்தமும் சதையுமாக மாற்றுகிறாள். அதோடு தூக்கத்தை எல்லாம் இழந்து, தன் எண்ணங்கள் முழுக்க அக்குழந்தையை மட்டுமே ஆக்கிரமித்து, அவளின் உடலில் நடக்கும் பற்பல மாற்றங்களைத் தாங்கி, மனதளவில் அதைவிட பலமடங்கு நடக்கும் மாற்றங்களை ஏற்று, இப்படி எல்லா இடங்களிலும் அவள் ஆணைவிட ஒரு படி மேலே இருக்கும் ஒரு தெய்வத்தைப் போன்ற ஜீவன். அன்பு காண்பிப்பதில் அவள் ஆதி ஊற்று. உணர்ச்சியின் உச்சம். ஆக, பெண் இனத்தை உடல், மன, ஆன்ம நிலையில் யாரிடமும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு அவளுக்கு நிகர் அவள் மட்டுமே.

குழந்தை
குழந்தை

அப்படியிருக்கையில் கர்ப்பிணிப்பெண்ணை நாட்டின் கண்களாகப் பேண வேண்டும். படைப்பின் கடவுளாக நான் அவர்களை எப்போதும் உருவகப்படுத்துவேன். அது மிகையாகாது. அடுத்த தலைமுறை நல்லபடியாக உருவாக அவளே ஆணிவேர். அப்படிப்பட்டவள், தாய்மைக்கு நல்ல முறையில் தயார்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே என்னில் ஓங்கி நிற்கிறது. இன்னும் அதிகப்படியாக இன்றைய பதின்ம வயதுப் பெண்ணிடமிருந்து இந்த முன்னேற்பாடுகள் தொடங்கியே ஆக வேண்டும். அது கட்டாயம்.

அப்படிப்பட்ட அழகான கர்ப்பகால முன்னேற்பாடுகள் இன்னும் ஆளுமை மிக்க ஆரோக்கியமான குழந்தைகளையும் தலைமுறையையும் கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாளை கர்ப்பம் ஆன பிறகு கருச்சிதைவு, உதிரப்போக்கு, குறைமாத பிரசவம், குறைவான வளர்ச்சி, பலவீனமான நஞ்சுப்பை, பனிக்குட நீர் வற்றிப்போதல்,நோய்த்தொற்று போன்ற பலவிதமான குழப்பங்கள் இன்றியும் குழந்தைகள் பிறப்பார்கள். பின்னாளில் அந்தக் குழந்தைகள் நல்ல புரிந்துணர்வும் பக்குவமும், முதிர்ச்சியும் பெறுவதை தாயின் கர்ப்பகாலமே தீர்மானிக்கிறது என்பதையெல்லாம் சற்று உள்வாங்கி அடுத்த தலைமுறையை நல்வழியில் எடுத்துச்செல்வோம்.

ஆனந்தி ரகுபதி (குழந்தைப் பிறப்பு பயிற்சியாளர்)
ஆனந்தி ரகுபதி (குழந்தைப் பிறப்பு பயிற்சியாளர்)

ஆக முடிவுரையாக, கர்ப்பகாலத்தில் ஆண், பெண்ணின் நல்ல அணுக்களின் கூட்டு மட்டுமே குழந்தையாக மாறுவது இல்லை. அதோடு அந்தக் கர்ப்பிணியின் சுற்றுப்புறச் சூழலும் பாதி குழந்தையைத் தீர்மானிக்கிறது என்ற உண்மையை உணர்ந்து

நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, நல்லமுறையில் ஆழ்ந்து தூங்கி எழுந்து, அளவான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு, மனதளவில் பதற்றம் இல்லாமல் சாந்தமாக இருக்க எல்லா வழிமுறையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கர்ப்பத்துக்குத் தயாராவதற்கு முன்பே வைட்டமின் குறைபாடுகள், ரத்தசோகை, ஹார்மோன் மற்றும் வேறு சில ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் அவற்றையெல்லாம் சரிசெய்து அதற்கான தீர்வு தரும் சில உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

குழந்தை
குழந்தை

கர்ப்பப்பையைத் திடமாக்க சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஆணும் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு செயல்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் கணவன், மனைவி அடுத்த தலைமுறைக்குப் பெரும் புண்ணியத்தையும் ஆரோக்கியத்தையும் தங்கள் குழந்தை மூலமாகச் சேர்க்கிறார்கள். குழந்தையை மட்டுமல்ல... நல்ல சமுதாயத்தையே உருவாக்கிய பெருமையைப் பெறுவார்கள்.

முற்றும்.