
`தமிழகத்தைப் பொறுத்தவரை, மக்களின் உணவுமுறை உள்ளிட்ட வாழ்வியல் முறைகள் மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிவிட்டதாலும், உடலுழைப்பு குறைந்துவரும் காரணத்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரைநோய்
- (Gestational Diabetes Mellitus - GDM) இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது’ என்று ஒரு தனியார் ஆராய்ச்சி மையம் புள்ளிவிவரம் தருகிறது.
அதேவேளையில், `கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தினால், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல தொற்றாத நோய்களையும், வேறு சில பரம்பரை நோய்களையும் கட்டுப்படுத்தலாம்’ என்கிறது அதே ஆய்வு. இந்த ஆய்வு கூறும் ஒரு முக்கிய அம்சம் இது... `கர்ப்பிணிக்கு ரத்தச் சர்க்கரை அதிகரிக்கும்போது, அது கருவில் வளரும் சிசுவுக்கும் கடத்தப்படுகிறது. அப்போது சிசுவின் கணையத்தில் இன்சுலின் சுரப்பதை மிகச் சீக்கிரத்திலேயே அது தூண்டிவிடுகிறது. இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே இன்சுலின் சுரப்பு குறைந்துவிடுவதால், சர்க்கரைநோய் வருவது எளிதாகிறது.

இதனால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. மேலும், தாயின் கர்ப்பப்பையில் குழந்தை சிசுவாக இருக்கும்போதே அதன் மரபணுக்களில் எதிர்கால நோய்கள் குறித்தும் பதிவுசெய்யப்படுகிறது.
தாய்க்கு சர்க்கரைநோய் இருந்தால் அதன் பின்விளைவாக ஏற்படும் மாரடைப்பு, சிறுநீரகநோய் உள்ளிட்ட பல வாழ்வியல் நோய்களுக்கு அப்போதே அச்சாரம் தரப்படுகிறது. எனவே தாய்க்கு, கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்’ என அந்த ஆய்வு எச்சரித்திருக்கிறது.
கர்ப்பகால சர்க்கரைநோய்
கர்ப்பப்பையில் உள்ள நஞ்சுக்கொடியில் (Placenta) புரோஜெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சுரக்கும். இவை கர்ப்பிணியின் ரத்தத்திலிருக்கும் இன்சுலினுக்கு எதிராக வேலை செய்யும். இதனால், கர்ப்பிணிக்கு இன்சுலின் செயல்பாடு குறைந்து, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதைச் சரிசெய்ய கர்ப்பிணிக்கு இன்சுலின் அதிகமாகச் சுரக்கும். இன்சுலின், ரத்தச் சர்க்கரையை சரியான அளவுக்குக் கொண்டுவந்துவிடும். இது கர்ப்பிணிகள் எல்லோருக்கும் இயல்பாக நிகழும். சிலருக்கு மட்டும் கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதற்கு இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது. இதன் காரணமாக, தொடர்ந்து அவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அதிகமாகவே இருக்கும். அப்போது அவர்களுக்கு கர்ப்பகால சர்க்கரைநோய் ஏற்பட்டுவிடும்.

யாருக்கெல்லாம் வாய்ப்பு?
பெரும்பாலும் சர்க்கரைநோய் உள்ள பரம்பரையில் பிறந்தவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், மிகத் தாமதமாக கர்ப்பம் தரிப்பவர்கள், ‘பிசிஓடி’ பிரச்னை உள்ளவர்கள், முதல் பிரசவத்தில் இந்த நோய் இருந்தவர்கள், முந்தைய பிரசவத்தில் பெரிய தலை/அதிக எடையுடன் குழந்தையைப் பிரசவித்தவர்கள் அல்லது இறந்த குழந்தையைப் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
பரிசோதனைகள்
முதன்முறையாக கர்ப்பம் தரித்தவர்களுக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, மருத்துவரிடம் வரும் முதல் விசிட்டில், வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தும் ரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்யப்படும். வெறும் வயிற்றில் இதன் அளவு 90 மி.கி. / டெ.லி-க்கு அதிகமாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120 மி.கி. / டெ.லி-க்கு அதிகமாகவும் இருந்தால், சர்க்கரைநோய் இருக்கிறது என்று அர்த்தம்.
பிறகு, கர்ப்பம் தரித்த 16-வது வாரம் ‘ஓஜிடிடி’ (OGTT) பரிசோதனை செய்யப்படும். இதில் கர்ப்பிணிக்கு 75 கிராம் குளூக்கோஸ் குடிக்கத் தரப்படும். இரண்டு மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரை பார்க்கப்படும். 140 மி.கி./டெ.லி-க்குக் கீழ் இருந்தால் சர்க்கரைநோய் இல்லை; அதற்கு அதிகமாக இருந்தால் சர்க்கரைநோய் இருக்கிறது என்று அறியப்படும். சிலருக்கு 24-வது வாரமும், 32-வது வாரமும் இதை மறுபடியும் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
ஹெச்பிஏ1சி (HbA1C) பரிசோதனை
கர்ப்பிணிக்கு, கடந்த மூன்று மாதங்களில் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்ததா, இல்லையா என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. கர்ப்பம் ஆரம்பித்த நாளிலிருந்தே சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா, இல்லையா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதன் அளவு 6% என்று இருந்தால் சர்க்கரைநோய் இல்லை. 6%க்கு அதிகமாக இருந்தால் ஏற்கெனவே சர்க்கரைநோய் இருக்கிறது என்று அர்த்தம்.

என்ன சிகிச்சை?
கர்ப்பகால சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இன்சுலின்தான் சிறந்த சிகிச்சை. காரணம், இன்சுலின் நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே, பிரசவம் ஆகும்வரை இன்சுலினைத் தொடர வேண்டியது முக்கியம். அதோடு உணவுமுறையைச் சரிப்படுத்துவது, தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டியது இன்னும் முக்கியம்.
ஆபத்துகள்
கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதைத் தொற்று, காளான் தொற்று, பூஞ்சைத் தொற்று போன்றவை ஏற்படலாம். கருச்சிதைவு ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகி, ‘முன்பிரசவ வலிப்பு’ (Preeclampsia) வரலாம். கர்ப்பத்தின் கடைசி மூன்று வாரங்களில் குழந்தை கர்ப்பப்பையிலேயே இறந்துவிடலாம். குழந்தை அதிக எடையுடன் அல்லது பெரிய தலையுடன் பிறக்கலாம். பிறந்த குழந்தைக்கு மஞ்சள்காமாலை ஏற்படலாம்; குழந்தை பிறந்ததும் இறந்துவிடலாம். கர்ப்பிணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
எச்சரிக்கை
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் முடிந்ததும், சர்க்கரைநோய் மறைந்துவிடும்; சிகிச்சையும் தேவைப்படாது. என்றாலும், பாதிப் பேருக்கு அடுத்த 5 - 20 வருடங்களுக்குள் டைப் 2 சர்க்கரைநோய் வர வாய்ப்பிருக்கிறது. ஆகவே, இதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, சரியான உணவு முறையைக் கடைப்பிடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைப் பராமரித்து சர்க்கரைநோய் வராமல் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுப்படுத்த என்ன வழி?
‘ஓஜிடிடி’ பரிசோதனை மற்றும் ஹெச்பிஏ1சி பரிசோதனையை நம் நாட்டில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் கட்டாயமாக்க வேண்டும். முக்கியமாக, இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு இந்தப் பரிசோதனைகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு இந்த இரண்டு பரிசோதனை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டியது அரசின் கடமை.