புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு நபர் தன் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்கக் கூட்டிச் சென்றுள்ளார். மருத்துவமனையில் மனைவி காணாமல்போக, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சில நாள்கள் கழித்து அவர் மனைவி அவருக்கு போன்செய்து தன்னை யாரோ கோயம்புத்தூருக்குக் கடத்தி வந்துவிட்டார்கள் என்றும், அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்த குழந்தையை அகற்றிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

பதற்றமடைந்த கணவன் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் தெரிவிக்க, அங்கிருந்த காவலர்கள் கோவை போலீஸாரிடம் சம்பவத்தைத் தெரிவித்து அப்பெண்ணை மீட்டனர். விசாரணையின்போதுதான் அப்பெண் உண்மையிலேயே கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார். உண்மை தெரிந்துவிட்டால் கணவர் வீட்டில் பிரச்னை ஆகிவிடும் என்பதால் இதுபோன்று நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
இதைப் போன்ற செய்திகளை அவ்வப்போது கேள்விப் படுகிறோம். இன்னும் சிலர் கர்ப்பமாக இருப்பதுபோல் ஒன்பது மாதங்கள் நடித்து, அதன் பின் குழந்தையை மருத்துவமனை யிலிருந்து திருடி வரும் சம்பவங்களும் நடக்கின்றன. திருமணமான தம்பதிகள் முன் சமூகமும் குடும்பமும் வைக்கும் முதல் கேள்வி, `எப்போ நல்ல செய்தி சொல்வீங்க?' என்பதுதான்.

குழந்தை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் சமூகத்தால் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றனவா? இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் குறித்தும், இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது குறித்தும் மதுரை அமெரிக்கன் கல்லூரி உளவியல் துறைத் தலைவர் சுரேஷ் குமாரிடம் கேட்டோம்.
``சமூகம் மற்றும் குடும்பத்தால் கொடுக்கப்படும் அழுத்தத்தால் இதைப் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. கர்ப்பமாகவில்லை என்பதை சமூகம் ஏளனமாகப் பார்க்கிறது.
அந்தப் பார்வை தன் மீது விழ வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் சில பெண்கள் இதுபோன்ற நாடகத்தை நடத்துகின்றனர். அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குபவர்கள், கர்ப்பமாக இருப்பதுபோல் நாடகமாடினால் தன்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். உளவியல் ரீதியாகப் பார்த்தால் சமூகப் பார்வையிலிருந்தும், வேலை செய்வதிலிருந்தும் தப்பிக்கவும் ஒரு தற்காப்பு உத்தியாக கர்ப்பமாக இருப்பதுபோல் நடிக்கிறார்கள்.

மற்றவர்கள் தன் மீது கொண்ட மனப்பான்மை பற்றிய கவலையாலும், தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ளவும் இப்படிச் செய்கிறார்கள். இப்படி கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பதோ, வேறு ஒருவரின் குழந்தையைத் திருடி வருவதோ அவர்களின் பிரச்னைக்கான தீர்வாக இருக்காது என்ற யதார்த்தம் புரிந்த மனப்பக்குவம் கொண்டவராகச் சம்பந்தப்பட்ட பெண் இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.
சமூகமும் குடும்பமும் கொடுக்கும் அழுத்தத்தை அவருக்குக் கையாளத் தெரிந்தாலும் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறாது. ஆனால், சிலரால் இந்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியாத தால்தான் இப்படித் தவறான முடிவுகள் எடுக்கிறார்கள். கணவன் மனைவியிடையே பரஸ்பர புரிந்துணர்வும் பகிர்தலும் இருந்தால் இதைப் போன்ற நிலை வராது. அந்தத் தெளிவு, சமூகம் கொடுக்கும் அழுத்தத்திலிருந்தும் வெளிவருவதற்கு உதவும். அதே போல், ஒரு குடும்பமாகவும் சமூகமாகவும் தம்பதிகளுக்கு அழுத்தம் கொடுக்காமலும், அவர்களை மதிப்பீடு செய்யாமலும் இருப்பது ஆரோக்கியமானது.

அக்கறைக்காக ஏங்குபவர்களைப் புரிந்துகொண்டு அவர்கள் மீது அன்பு செலுத்துவது சிறந்தது. இதைத் தவிர்த்து, திருமணம் ஆனவர்கள் சிலருக்கும் பாலியல் உறவு குறித்த தெளிவு இருப்பதில்லை. அவர்களுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வை `சைக்கோ எஜுகேஷன்' மூலம் தர வேண்டும். இது ஒருபுறம் இருக்க, ஃபால்ஸ் பாசிட்டிவ் அல்லது வயிறு பெரிதாவதாலும், தான் கர்ப்பமாக இருப்பதாக நினைப்பவர்களும் உண்டு. இதனால்தான் உண்மையாகவே கர்ப்பமாக இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் உளவியல் பிரச்னை ஏற்படும். அவர்களுக்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தகுந்த அறிவுரையும் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்" என்கிறார்.