Published:Updated:

மனமே நலமா? - 10

மனமே நலமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நலமா?

- மருத்துவர் யாமினி கண்ணப்பன்

“ஹெல்லோ...ஓவ் டாக்டர்!”

“அடடா, கொட்டாவியோட சேர்த்து ஒரு ஹலோ. என்ன மினி பட்டப்பகல்ல தூங்கி வழியுற, என்னாச்சு?”

“அதுவா டாக்டர்? புத்தாண்டு ஸ்பெஷல், ஃபிரெண்ட்ஸ் கூட ஹோட்டல் போனேன். அட்டகாசமான பிரியாணி. நல்லா ஃபுல் கட்டு கட்டினேனா... அதான் உண்ட மயக்கம்.’’

“ஓ... மினி அப்போ பிரியாணி ரசிகையா?”

‘‘ரசிகையா? ‘அடிமை’ன்னு சொல்லுங்க. ‘சாப்பாடு’, ஒரு வார்த்தை; ஆனா ‘பிரியாணி’, ஒரு எமோஷன்.”

மனமே நலமா? - 10

“ம்ம்ம்... சரி சரி... உயிர் வாழ எல்லாரும் சாப்பிடுவாங்க. நீ சாப்பிடுறதுக்காகவே உயிர் வாழுற கோஷ்டின்னு சொல்லு!”

“எக்ஸாக்ட்லி. சாப்பிடறது ஒரு சந்தோஷம் டாக்டர். வெயிட்... நீங்க சிரிக்குறத பார்த்தா இதுக்குப் பின்னாடியும் ஒரு அறிவியல் விளக்கம் வெச்சிருப்பீங்க போல!”

“கண்டுபிடிச்சுட்டியே ! ஆமா மினி, உணவுக்கும் மனநலனுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. சரிவிகித உணவு எடுத்துக்கிறது உடல்நலம் போலவே மனநலத்திற்கும் அவசியம். உணர்வு நிலை, உணவு... இந்த ரெண்டுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய அறிவியல் விளக்கங்கள் உறுதியாகிட்டே இருக்கு. அதனால்தான் ‘Nutritional psychiatry’ அப்படிங்குற மனநல மருத்துவம் சார்ந்த ஒரு பிரிவு இப்போ உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கு.”

“சூப்பர் டாக்டர். சாப்பாடு மனசுக்கும் முக்கியம். இந்தக் கோணத்துல நான் யோசிச்சதே இல்ல. நீங்க மேல சொல்லுங்க!”

“மினி, சின்ன வயசுல நீ படிச்சதுதான். மூளை சரியாக இயங்க பலவிதமான நல்ல கொழுப்புகள், புரதங்கள், விட்டமின்ஸ், மினரல்ஸ் இதெல்லாம் தேவை இல்லையா? மனம் அப்படிங்குறது மூளையின் ஒரு பகுதிதான், இதைப்பற்றி கடந்த வாரங்களில் நிறைய பேசிட்டோம். அந்த வகையில் மனம் சீராக இருக்கவும் உணவு தேவைப்படுது... அவ்வளவுதான். இதுல ஆச்சர்யப்பட எதுவுமில்லை. நம்ம மனசை ஒழுங்குபடுத்தும் ஒரு பெரும் ஆயுதமான உணவு, நம்ம முழுக்கட்டுப்பாட்டுல இருக்கு. இதை அறிவியல்ரீதியான புரிதலோடு அணுகி, sensible food choices-ஐ எடுத்துக்கறது மூலம் உடலோடு மனதையும் வலுப்படுத்த முடியும்.”

“இயற்கை அற்புதமானது இல்லையா டாக்டர். நமக்குத் தேவையான எல்லா நல்லதும் ரொம்ப அடிப்படையான விஷயங்களிலேயே பொதிஞ்சு இருக்கு.”

“ரொம்ப சரி. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, அது நம்ம டிஎன்ஏ-ல பதிஞ்சிருக்கு. அதிகம் கலோரி இருக்கிற உணவுகளில் நமக்கு இயல்பாவே நாட்டம் அதிகம் வரும். அந்த மாதிரியான உணவு வகைகள் கிடைக்கும்போது, நம் எனர்ஜி தேவைக்கு அதிகம் எனத் தெரிஞ்சாலும் நாம அதை கட்டுப்பாடுகள் இல்லாம சாப்பிடுறோம் இல்லையா. ஏன்?’’

“டேஸ்ட்டா இருக்கறதனாலதான டாக்டர்?”

மனமே நலமா? - 10

“உண்மையில இதற்கு டேஸ்ட் தாண்டி இன்னொரு காரணமும் இருக்கு. அது பேரு ‘Survival Instinct’. ஆர்டர் பண்ணுனா வீடு தேடி உணவு வரும் காலம் எல்லாம் இப்போதான். ஆனா, பல்லாயிரம் ஆண்டுகள் மனிதன் உணவு தேடுதலையே வாழ்க்கையாகக் கொண்டவன். பஞ்சத்தினாலோ, பிற காரணங்களினாலோ உணவு கிடைக்காமத் தவிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளணும் அப்படிங்குறதுதான் மனிதனின் அடிப்படை எண்ணம். இதனால, கலோரி அதிகமுள்ள உணவை கிடைக்கும்போது சேமிச்சு வைக்குறது மனிதனுக்குப் பழக்கப்பட்ட ஒன்று. அந்த உள்ளுணர்வுதான் இந்தக் காலத்திலேயும் நிறைய உணவு உட்கொள்ளக் காரணமாகுது.”

“சொல்லிட்டீங்க இல்ல, இனிமே பாருங்க sensible உணவுப்பழக்கத்துக்கு மாறணும்னு New year resolution எடுத்துக்கப் போறேன்.”

“சந்தோஷம் மினி. ஆனா இதுக்குப் பின்னாடி ஒரு உளவியல் சிக்கல் இருக்கு.’’

“என்ன சிக்கல் டாக்டர்?’’

“நான் சொல்லல மினி, சயின்ஸ் சொல்லுது. ‘Pre-Industrial Humans’ அப்படின்னு சொல்லப்படுற, தொழில் சமூகத்திற்கு முந்தைய காலகட்டத்துல, குளிர்காலங்களில்தான் உணவு சேமிப்பு முறைகளை அதிகமா செயல்படுத்தியிருக்க வேண்டும். இதுவே உலகம் எங்கும் புத்தாண்டின்போது எடுக்கப்படுற பெரும்பாலான ‘diet control resolution’களைக் கடைப்பிடிக்க முடியாததற்குக் காரணமாய் இருக்கலாம். இப்படி நம்முடைய உணவுத் தேர்வில் மனசு பெரும்பங்கு வகிக்குது மினி.”

“இதுல இப்படியொரு விஷயமிருக்கா டாக்டர்? ம்... ம்... இந்தப் புரிதல் இருந்தா இன்னும் சரியா நம்ம உணவுப்பழக்கத்தைக் கையாள முடியும் இல்லையா. உணவுத் தேர்வுக்கும், உணர்வுகளுக்கும் இருக்குற தொடர்பு பற்றி இன்னும் விரிவா சொல்லுங்களேன்...”

“நமக்கு ரொம்பவும் பிடிச்ச உணவைச் சாப்பிடப் போறோம் அப்படிங்குற எதிர்பார்ப்பின்போதும் சரி, சாப்பிடும்போதும் சரி, நம்ம மூளையில் ‘dopamine’ அப்படிங்குற pleasure chemical சுரக்குது. இது ஒருவிதமான சாதிச்ச மனநிலையை (Reward feeling) தர்றதால, சிலர் மீண்டும் மீண்டும் அந்த உணவைச் சாப்பிடுவாங்க. இப்படி சாப்பிடுறவங்களைத்தான் ‘Emotional Eaters’னு சொல்வோம். Emotional eating / comfort eating அப்படின்னா, உணவின் மூலம் நம்முடைய உள்ளத்தைத் தேற்றிக்கொள்ள முயற்சி செய்யுறது. இந்த இடத்துல உணவு ஒரு போதை தரும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.”

“ஆமா டாக்டர்! நான்கூட சோகமா இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்.”

“அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு மினி. ஒரு மனிதன் பிறக்கும்போதே உணவுடன் சில உளவியல் தொடர்புகளும் ஏற்படுத்தப்படுது. ஒரு குழந்தை அழுதா உடனே இனிப்பான இதமான பால் கொடுப்பாங்க பாத்திருக்கியா மினி? அப்போவே ‘உணவு என்னை ஆசுவாசப்படுத்தக்கூடும்’ அப்படிங்குற ஆழமான தகவல் நம்ம மனசுல பதியுது. கொண்டாட்டங்கள், பண்டிகைகள்கூட எப்போதும் விருந்தும், இனிப்பும் இணைந்த விஷயங்களா இருக்கு. உள்ளத்து மகிழ்வின் வெளிப்பாடே இங்க உணவுதான். இப்படி உணவும் மகிழ்வும் இணக்கமாகும்போது மூளையில் ‘Endorphins’ அப்படிங்குற ரசாயனம் சுரக்குது. அதனால அந்த இணக்கம் எமோஷனல் மெமரியா மனசுல பதிஞ்சுடுது. அதனாலதான் மன உளைச்சலின்போது மனசு சாக்லேட், ஐஸ்கிரீம் இப்படி உணவை நாடுது. ‘அந்த உணவோடு கூடிய அதே மகிழ்ச்சி நிலை மீண்டும் தூண்டப்படும்’ங்குற எதிர்பார்ப்பே அதுக்குக் காரணம். பிரியாணி ஒரு எமோஷன்னு நீ சொல்றதுக்குக் காரணமும் அதான் மினி. மன உளைச்சலின் போது 40% மக்கள் அதிக உணவு உட்கொள்றதா ஆய்வுகள் சொல்லுது.

நாம ஞாபகத்துல வெச்சிருக்க வேண்டிய விஷயம் ஒண்ணுதான் மினி. உணவினுடைய பிரதான வேலை, நமக்கு ஊட்டம் அளிப்பதுதான். அதை மன ஆறுதலுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்ய ஆரம்பிச்சா, அது தற்காலிக சந்தோஷத்தைக் கொடுத்துட்டு, நிரந்தரமா கேடு விளைவிக்கும்.”

“டாக்டர், ரொம்ப பயமுறுத்துறீங்க!”

“இல்ல மினி, வழிகாட்டுறேன்னு நினைச்சுக்கோ. மன அழுத்தம் ஏற்பட்டு அதைச் சரி செய்ய நாம எடுத்துக்கிற உணவு எதுன்னு பாரு. சர்க்கரை/ உப்பு இதெல்லாம் அதிகம் இருக்கும் கார்போஹைட்ரேட் உணவு வகைகளாதான் இருக்கும். இதனால ரத்தத்துல சர்க்கரை அளவு அதிகமாகி, தற்காலிகமா மன அமைதி கிடைச்ச மாதிரி ஒரு மாயை உருவாகும். ஆனா, கொஞ்ச நேரத்துல சர்க்கரை அளவு குறையும். அதைச் சரிசெய்ய மீண்டும் கார்போ உணவை சாப்பிடுவாங்க. இந்தச் சுழற்சியில் தொடர்ந்து மாட்டிக்கிட்டா உடல்நிலைக்கு மட்டுமல்ல, மனநிலைக்கும் பிரச்னைதான். இப்படி அடிக்கடி ஏற்படும் சர்க்கரை அளவு மாற்றங்கள் எரிச்சல், கோபம் மாதிரியான எதிர்மறை எண்ணங்களைத் தூண்டும். இதை, ‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே’ன்னு ரொம்ப அழகா சொல்லியிருக்கார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

இதுமட்டுமல்ல, நம்ம மனநலத்திற்கும், குடலில் குடிகொண்டிருக்கும் நுண்ணுயிர்களுக்கும்கூட (microbes) நிறைய சம்பந்தம் உண்டு. சீரான மனநிலைக்கு serotonin எவ்ளோ தேவைன்னு நாம நிறைய பேசியிருக்கோம் இல்லையா? உடலின் 95% செரோடோனின் சுரப்பை உற்பத்தி செய்ய உதவுவது இந்தக் குடல்வாழ் உயிரினங்கள்தான். fermentation மூலம் புளிக்கும் உணவுகளான தயிர், மோர் போன்ற probiotic உணவுகளில் இந்த நுண்ணுயிரிகள் அதிகம். இப்படியான உணவுகள் அதிகம் சாப்பிடுறது உடலுக்கு மட்டுமல்ல, மனசுக்கும் நல்லது.

மூளை சிறப்பாச் செயல்படறதுக்கு உணவு அளிக்குற பங்களிப்பு பற்றி மருத்துவ உலகம் நிறைய பேசுது. பலவிதமான நரம்பியல் கோளாறுகளை இதுக்கு ஆதாரமாக் காட்டறாங்க. வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு அதிகம் கொழுப்பும், குறைந்த அளவு கார்போவும் உள்ள ketogenic diet பரிந்துரைக்கப்படுது. வைட்டமின் B12, B3 குறைபாட்டினால் மூளை மழுங்கல் ஏற்படுது. Antioxidants அதிகமுள்ள மஞ்சள் இதுக்கு மருந்தாகுது. வைட்டமின் B9 குறைபாடு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தும். வைட்டமின் B1 குறைபாட்டினால் பலவிதமான மூளைச் செயல்பாடுகள் மாறுது. வைட்டமின் D நினைவாற்றலுக்கும், கவனத்திற்கும் (attention) உதவுது. இப்படி இன்னும் சொல்லிட்டே போலாம்.”

“நாம சாதாரணமா கடந்து போற ‘உணவு ரசனை’க்குள்ள, நாம தெரிஞ்சுக்க வேண்டிய இவ்ளோ விஷயங்கள் இருக்கே டாக்டர்.’’

“ஆமா மினி. தவறான உணவுப் பழக்கங்களால் வரும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏராளம். இதைப் பற்றிய விழிப்புணர்வுதான் தீர்வுக்கான முதல் படி.”

“ என்ன மாதிரியான மனநலன் பிரச்னைகள் டாக்டர்?”

“நிறைய இருக்கு மினி. பொதுவா இதை ‘Eating disorders’னு சொல்வோம். அதாவது உண்ணுதல் கோளாறுகள். உணவுப் பழக்கத்துல திடீர்னு ஏற்படுற அதீத மாற்றங்கள்கூட இதோட அறிகுறியா இருக்கும். உதாரணத்துக்கு, உடல் எடையைக் குறித்த சமூக எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் அழுத்தம் மற்றும் உளவியல் காரணங்களாலும் Anorexia nervosa அப்படிங்குற பிரச்னைக்குக் காரணமாகும். அதாவது, ‘எடை கூடிடும்’னு பயம் இவங்கள ஆட்டிப்படைக்கும். இயல்பைவிடக் குறைவான எடையில் இருந்தாலும், தான் குண்டா இருக்கோம்னு வலுவா நம்புவாங்க. அதனால அத்தியாவசிய உணவு சாப்பிடுறதையே ரொம்பவும் குறைச்சுடுவாங்க (Restricting type), இல்லைனா சாப்பிட்ட உணவை வாந்தி மூலமா வெளியேற்ற முயற்சி பண்ணுவாங்க (Purging type). இன்னொரு வகையான உண்ணுதல் கோளாறு உண்டு. அதுக்கு பேரு Bulimia nervosa. இந்தப் பிரச்னை இருக்கவங்க, குறைஞ்ச நேரத்துல மிக அதிக உணவை சுயக்கட்டுப்பாடு இல்லாம சாப்பிடுவாங்க. உடனே அதை ஈடு செய்யணும்னு வாந்தி, பேதி, தீவிர உடற்பயிற்சி இப்படி நிறைய Compensatory behaviour-ல ஈடுபடுவாங்க. இந்த மாதிரி compensatory behaviour இல்லாம, ஆனா நிறைய சாப்பிட்டு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, வெட்கத்தில் மன உளைச்சலுக்குச் சிலர் தள்ளுப்படுவாங்க. வாரம் ஒரு முறைன்னு இப்படி மூணு மாசம் தொடர்ந்து நடந்தா அவங்களுக்கு இருக்கிறது Binge eating disorder. இப்போ புரியுதா மினி, உணவிற்கும் மனநலத்திற்கும் உள்ள தொடர்பு?’’

“யெஸ் டாக்டர். நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே உணவுல கவனமா இருப்பேன் டாக்டர். தேங்க் யூ!”

“ரொம்ப சந்தோஷம் மினி. ஆல் தி பெஸ்ட்”

(மினி-மன உரையாடல் தொடரும்)

பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளில் உண்ணப்படும் ‘Mediterranean diet’ முறையே மனநலத்திற்கு உகந்தது என்கின்றன ஆய்வுகள். இந்த டயட்படி எதை அதிகம் உண்ண வேண்டும் என்கிற உணவு பிரமிடு இது...

மனமே நலமா? - 10