
- மருத்துவர் யாமினி கண்ணப்பன்
“வாமினி. பொங்கல் கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு?”
“ஊருக்குப் போய்ட்டேன் டாக்டர். கிராமத்துல மொத்தக் குடும்பமும் சேர்ந்து கொண்டாடினோம். ஒரே ஒரு சின்ன வருத்தம்தான். என் பாட்டிக்குத்தான் மறதி அதிகமாகிடுச்சு. அதைப்பத்திதான் இன்னைக்கு உங்ககிட்ட பேசணும்னு வந்தேன். வயதானவர்களுக்கு ஏற்படுற மறதிநோய் பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் டாக்டர்...”
“உலகளவில் மக்கள் மிகவும் அச்சப்படும் நோய்களில் புற்றுநோய்க்கு அடுத்தபடி ரெண்டாவது இடம் மறதி நோய்க்குத்தான்னு ஒரு ஆய்வு சொல்லுது. இந்த பயத்தினால அப்பப்போ சின்னச் சின்ன மறதிகள் ஏற்படும்போதுகூட தனக்கு மறதிநோய் வந்துடுச்சோன்னு பலருக்கு பயம் ஏற்படுது. ஆனா எல்லா மறதிகளும் மறதி நோய் கிடையாது. இதைப் பற்றி இருக்கும் தவறான நம்பிக்கைகளைக் களையுறது அவசியமானது.”
“அப்போ மறதிநோயைச் சாராத சாதாரண மறதிகள் என்னென்ன டாக்டர்?”
“சில உதாரணங்கள் சொல்றேன், ஒருத்தர் ‘என் காபி கப்பை எங்க வெச்சேன்’னு தேடுறது. பிரிட்ஜைத் திறந்து வச்சுட்டு, ‘இப்போ என்ன எடுக்க பிரிட்ஜ திறந்தேன்’னு யோசிக்குறது... இதெல்லாம் ரொம்ப சாதாரணமா அடிக்கடி நடக்குற விஷயங்கள். கவனம் வேற எங்கேயோ இருக்க ஒரு preoccupation காரணமா அந்த விஷயங்களை நாம நம் மெமரில ரெஜிஸ்டர் செய்ய முற்படாததால், அது மறதிபோல தென்படுது. இதுக்குப் பேருதான் Pseudo forgetting.

ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப rehearse செய்வதினால் மட்டுமே அது நம்மோட long term memory-ல பதிவிடப்படும். அதுவும் தக்க இடைவெளி விட்டு (Spaced Rehearsal) இதைச் செய்யும்போது மனசுல ரொம்ப அழுத்தமா பதியும். அப்படி rehearse பண்ணாம விட்டுட்டா, இது தேவையற்ற தகவல்னு மூளை அதை நீக்கிடும்.”
“வாவ்! ஸ்கூல்ல ஹோம் ஒர்க், எக்ஸாம் எல்லாம் வைக்குறது இதுக்காகத்தான்போல. சரி, மறதி நோய் பத்திச் சொல்லுங்க டாக்டர்!”
“மருத்துவத்துல இதுக்குப் பேரு ‘Dementia.’ மூளையின் திறன்கள் மழுங்குவதைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல்தான் Dementia. இதுல பல வகைகள் உண்டு. அல்சீமெர்ஸ் நோய்தான் 60% முதல் 80% வரையிலான டிமென்ஷியாவிற்கு காரணமா அமையுது. மூளையில் சில வகையான புரதக் குழம்புகள் உருவாகி, மூளை செல்களிடையே இருக்குற தொடர்புகளை அது சேதப்படுத்துறதால் மூளை தன் திறனை மெல்ல மெல்ல இழப்பதுதான் அல்சீமெர்ஸ் நோய். வாஸ்குலர் டிமென்ஷியா (Vascular Dementia) அப்படிங்குற இன்னொரு வகையில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற காரணங்களால மூளையில் ரத்த ஓட்டம் குறைஞ்சு அதனால் மூளையின் திறன் குறையும். இதேபோல பார்க்கின்சன்ஸ் நோய், பக்கவாதம், B12 குறைபாடு, குடிப்பழக்கம்னு பல காரணங்களால் Dementia ஏற்படலாம்.
2015-ம் ஆண்டு இந்தியாவில் செய்த ஆய்வின்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 3.7% பேருக்கு டிமென்ஷியா இருப்பது தெரிஞ்சிருக்கு. 60 வயசிற்கு மேலதான் ஒருத்தர் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்படுறதுக்கான ரிஸ்க் அதிகமாகுது. அதுக்குப் பிறகு ஒவ்வொரு ஆறரை ஆண்டிலும் இந்த அபாயம் இரட்டிப்பாகுது. ஆனா, ‘வயசாகிட்டாலே Dementia வந்திடும்’ங்குற நினைப்பு தவறானது.”
“வயசானவங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் டாக்டர்?”
“மினி, வயசாகும்போது உடலில் மாற்றங்கள், பலவீனங்கள் ஏற்படுற மாதிரி மூளை செல்களிலும் கூட இந்த Ageing Process நடக்கும். அதனால் மறதி ஏற்படுறது இயல்புதான். தொடர்ந்து சரிஞ்சுட்டே போற மனத்திறனை, பெரும்பாலான சமயத்துல மீட்டெடுக்க முடியாமலே போயிடும். ஆனா, வைட்டமின் B12 குறைபாடு, தைராய்டு குறைபாடு போன்ற காரணங்களினால் என்றால், சிகிச்சை மூலம் இதைச் சரிசெய்ய முடியும்.”
“சாதாரண ஞாபகமறதிக்கும் டிமென்ஷியாவுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும் டாக்டர்?”
“டிமென்ஷியாவில் ஏற்படுற ஞாபகமறதிக்கு ஒரு pattern உண்டு. பல வருடங்களுக்கு முன் நடந்த விஷயத்தையும் துல்லியமா நினைவுல வச்சு சொல்லுவாங்க. ஆனா நேத்து யாரு வீட்டுக்கு வந்தாங்க, இன்னைக்குக் காலைல என்ன சாப்பிட்டோம்னு அவங்களால சொல்ல முடியாது. வெளியே போய்ட்டு வீட்டுக்கு வரும் வழி தெரியாமக் குழம்பிடுவாங்க. இன்னைக்கு பாக்குற முதியவர்களின் ‘காணவில்லை’ செய்திகளுக்கு முக்கிய காரணம் dementia-தான். அதுமட்டுமல்ல, புடவை கட்டுறது, அடுப்பு பத்தவைக்குறது மாதிரி நல்லாப் பழகின விஷயங்களைக்கூட எப்படிச் செய்யுறதுன்னு தெரியாம குழம்புவாங்க. அவ்வளவு ஏன், மூளையின் திறன்கள் தொடர்ந்து மங்கும்போது குடும்பத்தினரை அடையாளம் காண்பதுலகூட அவங்களுக்கு சிக்கல் ஏற்படும்.”
“ ‘ஓகே கண்மணி’ படத்துல கூட பிரகாஷ்ராஜ் மனைவிக்கு இப்படித்தான் பிரச்னை இருக்கும். டிமென்ஷியா ஒருத்தரை வேற என்ன டாக்டர் செய்யும்?”
“மறதி மட்டுமல்ல மினி, இந்த நோய் இருக்கிறவங்களோட குணநலன்களில்கூட மாற்றம் ஏற்படலாம். உதாரணம் சொல்றேன் கேளு, ரொம்ப ரிசர்வ்ட் டைப் ஆளு, அதுக்கு அப்படியே நேர்மாறா தெரியாதவங்ககிட்டகூட கூச்ச சுபாவம் இல்லாமப் பேச ஆரம்பிப்பாங்க. இப்படியான குணநலன் மாற்றங்கள் ஏற்படுறதுதான் Fronto temporal lobe dementia என்னும் ஒருவகை dementia-வின் முக்கிய அறிகுறிகளா அமையும்.”
“நீங்க சொல்றதை வெச்சுப் பார்த்தா, இந்த மறதிநோய் ஒரு முதியவரின் குடும்பத்தையே பாதிக்கும்னு தெரியுது டாக்டர். இந்த இடத்தில குடும்பத்தினர் செய்ய வேண்டியது என்ன?”
“டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டவங்க தனக்கு இப்படி ஒரு மறதி இருக்கிறதையே உணராமக்கூட இருப்பாங்க. இல்லைனா மறதியை மறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஒருவேளை குடும்பத்தினர் அதைச் சுட்டிக் காட்டினா கோபப்படுவாங்க. குடும்பத்தினர் பொறுமை காக்க வேண்டியது முக்கியம்.
முதுமையில் ஏற்படும் தீவிர மறதிகளுக்கு மருத்துவ ஆலோசனை ரொம்ப முக்கியம். இதுமட்டுமல்ல, ‘தனக்கு மறதி நோய் அதிகமா இருக்கு’ன்னு வேதனைப்படும் பலருக்கு உண்மையில் மனவருத்த நோய் இருக்கும் வாய்ப்புகள்தான் அதிகம். முதுமையில் ஏற்படுற மன வருத்த நோய் பல சமயங்களில் மூளை மழுங்கு நோய் போலவே தோற்றமளிக்கும். இதுக்கு Pseudo dementia-ன்னு பேரு. அப்போதான் காரணங்களை ஆராய்வது, நினைவை மீட்டெடுக்கும் முயற்சிகள் செய்யுறது சாத்தியம்.”
“இந்தப் பிரச்னை வராம தடுக்க, முன்னெச்சரிக்கையா என்னென்ன செய்யலாம் டாக்டர்?”
“நம் மூளைத்திறனை நல்ல கூர்மையா வெச்சுக்க சில டிப்ஸ் சொல்றேன். கேட்டுக்க மினி.
1. மூளைத்திறன் குறைபாட்டிற்குக் காரணமான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளை மருத்துவ ஆலோசனையோடு கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்கணும். உடல் பருமனைத் தவிர்க்கணும்.
2. உணவு முறை மாற்றங்கள். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ளணும். ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்த உணவுகள் டிமென்ஷியாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆன்டி-ஆக்சிடென்ட் அதிகமுள்ள மஞ்சளுக்கு நம்முடைய மூளையைக் காக்கும் திறன் உண்டு.
3. நண்பர்கள், வேலைன்னு நம்முடைய சமூக இணைப்புகளை பலமா கட்டமைச்சு, அதுல இயங்கிக்கிட்டே இருக்கிறது. அதுவே நம்ம மூளையை ஆரோக்கியமா வைத்திருக்க உதவும்.
4. தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்யுறது உடல் மற்றும் மூளை இரண்டையும் ஆரோக்கியமா வச்சிருக்க உதவும்.
5. ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கத்துக்கிட்டே இருக்கணும். செஸ் மற்றும் குறுக்கெழுத்து மாதிரி விளையாட்டுகள், ஒரு புதுமொழியைக் கத்துக்கிறது, வேற கோர்ஸ் படிக்கிறது இப்படியான செயல்கள் நம்ம மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். அது மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
6. நல்ல தூக்கம் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. தூக்கம் கெடும்போது அது நம்ம நினைவாற்றலை பாதிக்கும்.
இதையெல்லாம் கடைப்பிடிக்குறது, அறுபது வயதிற்கு மேல டிமென்ஷியா மாதிரியான நோய்கள் வராமல் தடுத்துப் பாதுகாக்கும் மினி. புரியுதா?”
“நல்லாப் புரியுது டாக்டர். ஒரு சின்ன சந்தேகம். நீங்க சொன்ன விஷயங்களால் இந்த நோய் வராம தடுக்க முடியும் இல்லையா, அப்போ டிமென்ஷியா மரபியல் நோய் கிடையாதா டாக்டர்?”
“சரியான கேள்வி மினி. மிகச்சில வகையான டிமென்ஷியாவுக்கு மட்டுமே மரபியல் காரணங்கள் இருக்கும். அதுவும் உங்க குடும்பத்துல தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ 65 வயதுக்கு முன்னதாகவே மறதி நோய் ஏற்பட்டிருந்தா மட்டுமே இந்த ஜெனட்டிக் ரிஸ்க் அதிகரிக்குது.”
“இந்த நோய்க்கு அப்போ தீர்வுதான் என்ன டாக்டர்?”
“பெரும்பாலான சமயங்களில் டிமென்ஷி யாவுக்கு முழுத்தீர்வு இல்லை மினி. இது ஒரு progressive condition. அதாவது போகப் போக நோயின் தீவிரம் அதிகமாகிட்டே போகும். இந்த நோய் பாதிப்படைந்தவர்கள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை நிம்மதியா வாழ மருத்துவ, மனநலச் சிகிச்சைகள் உதவும். குழந்தை போலவே மாறிய இவங்கள பாத்துக்கிற குடும்பத்தினரும், அவங்கள கையாளும் முறைகள் குறித்துத் தக்க மனநல ஆலோசனைகள் பெறுவது ரொம்பவும் அவசியம்.”
“என் நண்பர் ஒருத்தர்கிட்ட போய் இதெல்லாம் முதல்ல சொல்லணும் டாக்டர். அவருக்கு இது பயன்படும். அவங்க அப்பாவிற்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கு. இந்த மாதிரி பலருக்கு நீங்க சொன்ன தகவல்கள் ரொம்பப் பயனுள்ளதா இருக்கும். ரொம்ப நன்றி டாக்டர். அப்போ அடுத்த வாரம் சந்திப்போம்.”
“நிச்சயமா மினி. சீ யூ!”
(மினி-மன உரையாடல் தொடரும்)
கடிகாரம் வரைதல் சோதனை மூலம் டிமென்ஷியா பாதிப்பை அறிதல்
கடிகாரம் வரைதல் சோதனை மூலம் டிமென்ஷியா பாதிப்பை அறிதல்
குறிப்பிட்ட நேரத்தைக் காட்டும் கடிகாரத்தை வரையுமாறு நோயாளியிடம் மருத்துவர் கேட்கிறார்

