Published:Updated:

மனமே நலமா? - 8

மனமே நலமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நலமா?

- மருத்துவர் யாமினி கண்ணப்பன்

”ஹலோ மினி... நான் டாக்டர் யாமினி பேசுறேன்.’’

“டாக்டர்... சொல்லுங்க, என்ன ஆச்சர்யமா காலெல்லாம் பண்ணியிருக்கீங்க?”

“மனசுக்குத் திருப்தியான ஒரு விஷயம் நடந்தது மினி, வித்தியாசமான ஒரு பிரச்னை, ரொம்ப சிரமப்பட்ட ஒரு பேஷன்டுக்கு டிரீட்மென்ட் முடிஞ்சு இப்போ குணமாகிப்போறாரு. அதைப் பத்தி உன்கிட்ட ஷேர் பண்ணிக்கத்தான். இன்னைக்கு ஈவினிங் டைம் இருந்தா கிளினிக் வாயேன்.”

“ஷ்யூர் டாக்டர். வந்துடுறேன். சீ யூ சூன்.’’


“ஹாய் டாக்டர்... சொல்லுங்க... நீங்க போன் பண்ணிக் கூப்பிடுற அளவு என்ன இன்ட்ரெஸ்ட்டிங் விஷயம்?”

“சொல்றேன் மினி... பர்ஸ்ட் உட்காரு. நம்ப முடியாத கதை. உடலும் மனமும் ஒன்றோ டொன்று நெருங்கிய தொடர்புடையதுன்னு ரொம்பத் தெளிவா புரியவைக்குற கதை.”

“அடடா... சஸ்பென்ஸ் அதிகமாகுதே. சீக்கிரம் சொல்லுங்க... தலையே வெடிச்சிடும்போல இருக்கு!”

“மனசுல கதை கேட்க ஆர்வம், அப்போ தலை ஏன் வெடிக்கணும்னு யோசிச்சுப் பாத்தியா மினி? இதுமட்டுமல்ல, கஷ்டமான ஒரு விஷயத்தை அனுபவிக்கும்போது ‘என்னால ஜீரணிக்கவே முடியல’ன்னு சொல்றோம். அதேபோலதான் ‘கோவம் கண்ணை மறைக்குது’, ‘இருக்குற வேலைய நினைச்சா தலை சுத்துது’, ‘அந்தப் பொண்ண நினைச்சாலே மனசு படபடக்குது’ன்னு எவ்ளோ சொல்றோம். ஏன்னு எப்போவாவது கேள்வி கேட்டதுண்டா?”

மனமே நலமா? - 8

“இல்லையே. நீங்க சொன்னதும்தான், ‘அட, ஆமாம்ல’ அப்படின்னு பல்பு எரியுது. ஏன்னு நீங்களே சொல்லுங்க டாக்டர்.”

“ரொம்ப சிம்பிள் மினி. நம்ம மனசுல இருக்கும் எண்ணங்கள், உணர்ச்சிகள் உடம்புல வெவ்வேறு அறிகுறிகளா வெளிப்படுது. அந்த அறிகுறிகளோட அனுபவத்தால் காலப்போக்குல ஏற்பட்ட சொலவடைகள்தான் இதெல்லாம். இதைத்தான் ‘somatization’னு சொல்றோம். மனநல மருத்துவத்துல ‘psychosomatic disorder’ அப்படிங்குற சப்ஜெக்ட்ல வரும். அதாவது, psyche அப்படிங்குறது மனம், soma அப்படினா உடல். இப்போ நான் சொல்லப்போற கதைல அது உனக்குத் தெளிவா புரியும்.”

“சொல்லுங்க டாக்டர். ஐ ஆம் வெயிட்டிங்.”

“என்கிட்டே சிகிச்சைக்கு வந்த அந்த பேஷன்ட்டுக்கு 40 வயசு இருக்கும். ஒருநாள் அவர் வேலைக்குக் கிளம்பிட்டு இருக்கும்போது, திடீர்னு அப்படியே இருந்த இடத்துல உறைஞ்சு போய்ட்டாரு. சுத்தி நடக்குற எல்லா விஷயங்களையும் உணர முடிஞ்சாலும், அவரால ரியாக்ட் பண்ண முடியல. சில மணி நேரத்துக்குக் கண்ணைத் திறக்க முடியல, பேச முடியல, எந்த இயக்கமும் இல்ல. அப்படியே சிலை மாதிரி frozen ஸ்டேட்டுக்குப் போய்ட்டாரு. அவரும் வீட்ல இருக்கவங்களும் பயந்துபோய் எல்லா டாக்டரையும் பாத்திருக்காங்க. ஆனா தீர்வு கிடைக்கல. அடிக்கடி இப்படி நடந்திருக்கு. மூளை, இதயம்னு எல்லாச் செயல்பாடுகளையும் செக் பண்ணிட்டாங்க. பண்ணாத டெஸ்ட் இல்ல, பாக்காத ஸ்பெஷலிஸ்ட் இல்ல. எல்லோரும் ஒரே மாதிரி ‘உங்களுக்கு உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்ல, மனசுல பிரச்னை இருக்கலாம். ஒரு மனநல மருத்துவரை அணுகுங்க’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களும் ரொம்ப தயக்கத்தோடுதான் என்கிட்டே வந்தாங்க. உடம்புல நடக்குற இவ்ளோ பெரிய விஷயத்துக்கும், மனசுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்ங்குற குழப்பம் அவங்களுக்கு. ‘எனக்கு அப்படி மனச பாதிக்குற எந்த பிரச்னையும் இல்லையே’னு யோசனை அவருக்கு.’’

“ஆமா, எனக்கும் குழம்புதே டாக்டர்.”

“குழப்பமே வேண்டாம் மினி. தொடர்ந்து பல நாள் இருக்குற ஒரு உடல் சிக்கல், ஆனா அதற்கு எந்த உடலியல் காரணங்களும் இல்லைன்னு தெரிஞ்சா, அது மனசு சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கலாம்னு நாம புரிஞ்சுக்கணும். அந்த மனச் சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கோ, அவர் கூடவே இருக்கிறவங்களுக்கோகூட தெரியாம இருக்கலாம். சமீபத்திய நிகழ்வா இல்லாம, எப்பவோ ஏற்பட்ட பாதிப்பின் தாக்கமா ஆழ்மனசுல பதிஞ்சுபோன விஷயமாவும் இருக்கலாம். அதை நம்ம ஆழ்மனசு தனக்கே உரிய பிரேத்யேக மொழியில உடல் மூலமா அதை வெளிப்படுத்தலாம்.”

“இவருக்கும் அப்படித்தான் நடந்ததா டாக்டர்?”

“எக்ஸாக்ட்லி. அவரைப் பற்றிய முழு விவரமும் தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான், அவருடைய இந்தப் பிரச்னைக்கான அடிநாதத்தைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. இவருக்கு இந்த மாதிரி அப்படியே ஸ்தம்பிச்சுப்போற பிரச்னை ஒவ்வொரு முறை வரும்போதும் அதுக்கு முந்தைய நாள், வீட்டு விசேஷம், ஜாலி ட்ரிப்னு உடன்பிறந்தவர்களைச் சந்திக்குறது, அவர்களோட நேரம் செலவிடுறதை செஞ்சிருக்காரு. அந்த நிகழ்வு முடிஞ்சு வீட்டுக்கு வந்து அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பும்போதுதான் ஒவ்வொருமுறையும் இவருக்கு இந்த உறைஞ்சுபோற விஷயம் நடந்திருக்கு. அதற்கு காரணம் மனசுதான். கூடப் பிறந்தவங்க நிறைய பேரு. சின்ன வயசில இருந்தே அவங்களோட ஆதிக்கமும் அதிகாரமும் இவர்மேல நிறைய இருந்திருக்கு. தன்னைப் பற்றிய தாழ்வான சுயமதிப்பீடுகள் இவர் மனசுல ஆழமா பதிஞ்சு போயிருந்தது. அவர்களோடு தன்னை நிறைய ஒப்பிட்டு, ‘அவங்களுக்கு இணையா வளரணும்’னு கடுமையா உழைச்சு அதைப் பற்றிய முனைப்பும், சிந்தனையுமா இருந்திருக்காரு. ஆனா அதுவே அழுத்தமா மாறி அவரால அவங்களுக்கு ஈடுகொடுக்க முடியல. ஒவ்வொருமுறை அவங்களைச் சந்திக்கும்போதும் இந்த அழுத்தம் தூண்டப்பட்டிருக்கு, அந்த ஆழ் மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான், உடல் அறிகுறியா வெளிப்பட்டிருக்கு.”

மனமே நலமா? - 8

“இப்படியெல்லாம்கூட ஆகுமா டாக்டர், நம்பவே முடியல. அப்பறம் என்ன ஆச்சு?”

“அப்புறம் என்ன. இதுதான் சிக்கல்னு கண்டறிஞ்சு, அதை அவருக்கு விளக்கமா எடுத்துச் சொல்லிப் புரியவைச்சு, அந்த ஆழ்மனச் சிக்கலை முறையான சிகிச்சை மூலமா தீர்த்து வெச்சோம். இப்போ நல்லபடியா குணமாகியிருக்காரு.’’

“சூப்பர் டாக்டர். மனசு என்னவெல்லாம் மேஜிக் செய்யுது இல்லையா. இந்த மாதிரி வேறு என்னவெல்லாம் ஒருத்தருக்கு நிகழும் டாக்டர்?”

“மினி, உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள சக்தி வாய்ந்த தொடர்பானது உளவியல் ரீதியாக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை. நம் எண்ணங்களுக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் காரணியாக அமையும் மூளையோட பல்வேறு ரசாயன மாற்றங்களின் ஏற்றத்தாழ்வு நிலையும், மூளை ஹார்மோன்களின் தொடர்பு நிலையும் (HPA Axis ) ஏற்படுத்தும் பாதிப்புகள் தான் உடல் உபாதைகளுக்குக் காரணமாக அமையுது. இதுதான் psychosomatic disorders-ன் அடிப்படை அறிவியல் விளக்கம்.

குறிப்பா சில உடல் நோய்கள் மன ரீதியான பாதிப்புகளினால் அதிகம் நிகழும். அவை குடல் சம்பந்தமான நோய்கள், சரும நோய்கள், இதய நோய்கள், நாள்பட்ட வலிகள் மற்றும் சோர்வுத் தன்மை இப்படி வெளிப்படும்.’’

“டாக்டர், இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.”

“உதாரணமே சொல்றேன் மினி. Irritable bowel syndrome அப்படிங்குற குடல் சம்பந்தப்பட்ட நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியா வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டுட்டே இருக்கும். இன்னொன்னு செரிமானக் கோளாறுகள்(Non ulcer dyspepsia). இது ரெண்டுக்குமே மன ரீதியான காரணங்களே அதிகம் பங்கு வகிக்குது. மூளையின் உணர்ச்சிப் பகுதிகளுக்கும் குடலுக்கும் இடையேயான வலிமையான தொடர்பு நிலைக்கு gut-brain axis-னு பேரு. அதனால்தான் நம்முடைய குடல் பகுதிகளை இரண்டாவது மூளைன்னு சொல்லுவோம்.

இந்த உள - உடல் தொடர்பை இன்னும் ஆழமாக விவரிக்க ஒரு எடுத்துக்காட்டு இருக்கு மினி. அதுக்குப்பேருதான் Taketsubo cardiomyopathy. சினிமால அடிக்கடி ஒரு காட்சி வரும். அதிர்ச்சியான விஷயம் கேள்விப்பட்டதும் ஒருத்தரு அப்படியே நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு உட்காருவார். பாக்க நாடகத்தனமா இருக்கலாம். ஆனா அது நிஜத்துலயும் நிகழும். இதய நோய் எதுவுமில்லாமல் திடீர் மன அழுத்தத்தினால் மட்டுமே இது நிகழும். இதய தசைகளின் பலவீனத்தன்மையே Taketsubo cardiomyopathy.’’

மனமே நலமா? - 8

“இந்த மாதிரியான மன அழுத்தங்களுக்கு இந்த உடல் அறிகுறிகள் ஏற்படும்னு ஏதாவது வரையறைகள் இருக்கா டாக்டர்?”

“அப்படி பார்முலா எல்லாம் இல்ல. ஆனா மனசுக்குனு ஒரு மொழி இருக்கு, குறியீடாக(symbolic) மனசோட பிரச்னை உடலில் வெளிப்படும். இதை psychodynamic theories-னு சொல்லலாம். உதாரணத்திற்கு, ‘வாழ்க்கை நம்ம கட்டுப்பாட்டுல இல்ல, எமோஷனலா மனசு ஒரு நிலையில இல்ல’ன்னு நினைக்குறவங்களுக்கு இடைவிடாத வயிற்றுப்போக்கு இருக்கும். அதேசமயம், ‘பணத்தட்டுப்பாடு இருக்கு, சேமிச்சு வைக்கணும், எதையும் வீணாக்கக் கூடாது’ன்னு அழுத்தம் இருக்கவங்களுக்கு மலச் சிக்கல் ஏற்படும். இதயநோய் இல்லாம நெஞ்சுவலி இருக்கவங்களுக்கு மனசுல பாரம், பெரிய குற்றவுணர்வு இருந்து ஆழ் மனசுல அழுத்தும். இப்படி உடல் அறிகுறிகளுக்கு மனசோட ஒரு குறியீட்டுத் தொடர்பு (symbolic significance) இருக்கும். புரியுதா மினி?”

“ரொம்ப நல்லாப் புரியுது டாக்டர். நம்ம உடலில் மனசு ரொம்பப் பெரிய பங்கு வகிக்குதுன்னு புரியுது.”

“1895-ம் ஆண்டு பிரிட்டிஷ் மனநல மருத்துவர் ஹென்றி மௌட்ஸ்லி சொன்ன ஒரு வரி இங்க பொருந்தும் மினி. ‘ கண்ணீர் மூலம் வெளிப் படாத துயரங்கள் எல்லாம் உடல் உறுப்பு களின் அழுகையாய் வெளிப்படும்’னு சொன்னாரு. இன்னொன்னும் சொல் றேன் கேளு, ஜப்பானிய மொழியில ஒரு சுவாரஸ்யமான வார்த்தை உண்டு. ‘Shikishin funi’. Shiki அப்படினா உருவம் உடையது. அதாவது உடற்கூறியலில் அடக்க முடிந்தது. Shin அப்படின்னா உருவமில்லாதது. Shikishin அப்படிங்குற வார்த்தை உடல் மற்றும் உள்ளத்தைக் குறிக்குது. funi அப்படின்னா, Two but not Two-ன்னு அர்த்தம். அதாவது ரெண்டும் இரு வேறு விஷயங்களானாலும் வேற வேற கிடையாது. உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று ரொம்ப நெருங்கிய தொடர்புடையது அப்படிங்குறதைப் புரிஞ்சுக்கணும். எந்தவொரு உடலியல் சார்ந்த பிரச்னைக்கும் உடல்நலன் சார்ந்த காரணங்கள் இல்லைன்னா அது மனநலன் சார்ந்ததா இருக்கலாம்னு நம்ம யோசிக்கணும். அந்தப் புரிதல், விழிப்புணர்வு எல்லோருக்கும் இருக்கிறது அவசியம்.”

மனமே நலமா? - 8

“எல்லாம் சரி டாக்டர், மனசோட பிரச்னை உடலில் வெளிப்பட காரணங்கள் என்ன?’’

“மனசில் ஏற்படுற சிக்கல்கள், அழுத்தங்களுக்கான வடிகால் எல்லோருக்கும் எப்பவும் கிடைக்குறது இல்ல. இந்த ஆழ்மனச் சிக்கல்கள் அச்சுறுத்தலான விஷயம். முன்னாடியே சொன்ன மாதிரி அது சிறு வயதில் ஏற்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவமா இருக்கலாம், பாலியல் தொல்லையா இருக்கலாம், சிறுவயது கசப்பான அனுபவங்களா இருக்கலாம். அதை நேரடியா எதிர்கொள்ள அப்போ மனசு தயாரா இல்லாம அதை அப்படியே அழுத்திடும். அதைப் பற்றி யோசிச்சாலே வலிக்கும், கஷ்டமாயிருக்கும்னு அழுத்தி ஒடுக்கப்பட்ட (repressed) எண்ணங்கள், பிற்காலத்தில் இப்படி வெளிப்படும். அப்போ ஒரு விஷயத்தைச் செய்னு மூளை தன் செல்களுக்குக் கொடுக்குற கட்டளையைக் கொடுக்காமல் விட்டுரும். இதுக்கு பேருதான் ‘learned inability’. அதாவது மனசு ஒரு இயலாமையை உருவாக்குறது. இதை ஒருத்தருக்குப் புரியவச்சு அவங்க மூளையை திரும்பவும் மாற்றிப் பழக்கப்படுத்துறதுதான் (Retraining the brain) ஒரு மனநல மருத்துவரோட வேலை.”

“சல்யூட் டு யூ டாக்டர். தேங்க் யூ சோ மச். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி ரொம்ப விரிவா பேசியிருக்கீங்க. இன்னைக்கு நிறைய கத்துக்கிட்டேன். அடுத்த வாரம் எப்ப வரும்னு யோசிச்சுட்டே இப்போ கிளம்புறேன்.”

“பை பை மினி. அடுத்த வாரம் சந்திப்போம்...’’

(மினி-மன உரையாடல் தொடரும்)

நண்பர்களே... மனநலம் தொடர்பாக உங்கள் கேள்விகள், சந்தேகங்களை manam@vikatan.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.