அவசரக் காலத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஒருவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக `சுகாதார உரிமை சட்டத்தை’ இயற்றியது ராஜஸ்தான் மாநில அரசு. முதல்வர் அசோக் கெளாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இதற்கான மசோதாவை கடந்த மார்ச் 21-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
`இந்தச் சட்டத்தின்படி அனைவருக்கும், அனைத்து சிகிச்சைகளுக்கும் இலவச மருத்துவம் என்ற தோற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்களும் மருத்துவமனைகளும் சந்திக்க வேண்டும். இலவச சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு உரிய தொகையை அரசு செலுத்த வேண்டும். ஆனால் அது தொடர்பான எந்தத் தெளிவான தகவலும் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
50 படுக்கைகள் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும், சிறிய கிளினிக்குகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல் இந்தச் சட்டத்தில் அவசர சிகிச்சை பட்டியலில் பிரசவமும் இடம்பெற்றுள்ளது, அதை நீக்க வேண்டும்’ போன்ற பல்வேறு காரணங்கள் மருத்துவர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டன.

ஏறக்குறைய இரண்டு வார ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, ராஜஸ்தான் அரசு சுகாதார சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய ஒப்புக்கொண்டதால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தங்கள் போராட்டங்களை கைவிட்டன. அரசுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக முதல்வர் கெளாட் ட்வீட் செய்துள்ளார். மேலும் அதில், ‘மருத்துவர் - நோயாளி இடையேயான உறவு எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட சட்ட விதிகளின் படி, பொது - தனியார் கூட்டுறவில் கட்டப்பட்டவை, அல்லது அரசிடமிருந்து மானியம் அல்லது நிலம் பெற்ற மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.