பெண் எப்போதும் உணர்ச்சிக்குவியலாக இருப்பவள். அதிலும் கர்ப்பிணிகள் அந்த உணர்ச்சிக்குவியலின் உச்சம். கர்ப்பகாலத்தில் ஆழிப்பேரலைகள்போல் ஆக்ரோஷமாக வேலைசெய்யும் ஹார்மோன்கள், அப்பெண்ணானவள் அதிதீவிரமாக என்னவெல்லாம் நினைக்கிறாளோ அவற்றை எல்லாம் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவை.

அதே வேகத்தில் எதிர்வினையும் ஆற்றும். அதனால்தான் கர்ப்பிணிகளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவைக்க முனைந்துள்ளனர் நம் முன்னோர்கள். கர்ப்பிணி ஆசைப்பட்டதைச் சாப்பிடுவது, அனுபவிப்பதில் ஆரம்பித்து ஏழாம் மாதத்தில் வளைகாப்பு விழாவன்று சொந்த பந்தங்கள் சேர்ந்து அவளைக் கொண்டாடி, தாய் வீட்டுக்கு அனுப்புவது வரைக்கும், அத்தனையின் பின்னணியிலும் அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
சரி, ஏழாம் மாதத்தில் கர்ப்பப்பைக்குள் இருக்கிற சிசுவுக்கு என்னென்ன நிகழ்கின்றன, இதுபற்றி அறிவியல் என்ன சொல்கிறது... இவற்றுக்கான பதில்களை நம் கதை மாந்தர்கள் பானு, பரத் வழியாகத் தெரிந்துகொள்ளலாமா?

சென்ற அத்தியாயத்தில் சீதா கொடுத்துச் சென்ற உற்சாகமும், விவரித்த சில விஷயங்களும் பானுவின் மனதிலிருந்து அகலவே இல்லை. தவிர, கர்ப்பகாலத்தில் எப்படியிருக்க வேண்டும் என்பது தொடர்பான பல வீடியோக்களை பானுவுக்கு வாட்ஸ்அப் செய்திருந்தாள் சீதா. அவற்றில் கர்ப்பகாலத்தில் முன்னோர்களின் வாழ்வியல் முதல், நவீன மருத்துவ அறிவியல் சொல்லும் கர்ப்பகால வாழ்க்கை முறைகள்வரை அத்தனையும் இருந்தன. இந்தத் தகவல்கள் எல்லாம் பானுவை எல்லையற்ற ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. சீதாவின் அறிமுகம் கிடைத்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொன்னாள் பானு.
சீதாவிடம் பேசிய இரண்டு நாள்களுக்குள் பானு மொத்தமாக மாறிவிட்டாள் என்றே சொல்லலாம். அவள் கணவர் பரத் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கருத்தரித்ததிலிருந்து உற்சாகமில்லாத முகத்துடனும் கவலை தோய்ந்த கண்களுடனும் படுத்துக்கிடந்தவளைப் பார்த்து மனதுக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தான் அவன்.

எல்லோரையும்போல, வயிறு மேடிட்ட தன் மனைவியை கையைப்பிடித்து நடைப்பயிற்சி அழைத்துச் செல்ல வேண்டும், அவளுடன் ஷாப்பிங் போய் அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும், பிறக்கப்போகிற தங்கள் குழந்தைக்கு ஆடைகள், பொம்மைகள் எல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று தான் செய்த கற்பனைகளெல்லாம் கற்பனைகளாகவே இருப்பதுகூட அவனுக்குப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.
எப்போதும் துள்ளலும் ஓட்டமுமாய் வலம்வரும் தன் மனைவி பானு சோகமாகப் படுத்திருந்த நிலைதான் அவனை ரொம்பவும் வருத்திவிட்டது. இப்போது சில தினங்களாக பானு மறுபடியும் உற்சாகமாக இருப்பதையும், காலை ஆறு மணிக்கெல்லாம் மூச்சுப் பயிற்சியும், அமர்ந்த நிலையில் சில யோகாசனப் பயிற்சிகளையும் செய்வதைப் பார்த்த பிறகு, பரத் படு உற்சாகமாகிவிட்டான். கூடவே, கர்ப்பிணி மனைவி விடியற்காலையிலேயே எழுந்து விடுகிறாளே என்ற கவலையும் அவனுக்கு வந்துவிட்டது.

அதை மனைவியிடமே சொல்ல, பானு, ``நாம் சம்பாதித்து வைத்திருக்கும் வீடு, நகை, பணம் இவையாவும் வயிற்றில் இருக்கிற சிசுவுக்கு ஒரு பொருட்டே இல்லை பரத். அக்குழந்தைக்கு கிடைக்கும் அபரிமிதமான ஆக்ஸிஜன் மூலம்தான் தன் ஆயுள் முழுமைக்கும் தேவையான ஆரோக்கியத்துடன் தன்னை உருவாக்கிக்கொள்கிறது'' என்று, சீதா தனக்கு சொல்லிக்கொடுத்ததைச் சொல்ல, பரத் அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தான்.
கரு உருவான நாளில் இருந்து மூன்று வயது வரைக்கும் செய்யப்படும் எதுவும் அந்தக் குழந்தையின் ஆயுளுக்கும் பிரதிபலிக்கும்பானு
``நம்ம குழந்தை நல்லபடியா வளரப்போறான்னு எனக்கு இப்பவே தெளிவா தெரியுது'' என்று பூரித்துப்போய் சொன்னவன், ``அந்த சீதா அக்கா, இன்னும் என்னென்ன சொல்லிக் கொடுத்திருக்காங்கன்னு எனக்கும் சொல்லேன்'' என்றான். ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தாள் பானு.

``நம் முன்னோர்கள் ஏழாம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா? கருவில் உள்ள குழந்தைக்கு அந்த மாதத்தில்தான் கண் விழியிலிருந்து ஆப்டிகல் நெர்வ் (optical nerve) என்ற நரம்புமண்டலம், மூளையுடன் முழுவதுமாக இணைகிறது. ஏழாம் மாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால் சில உறுப்புகள் வளர்ந்து முடியாத நிலையில் இருக்கும். முக்கியமாக நுரையீரல் மற்றும் விழித்திறன். கருவின் ஏழாம் மாதத்தில் தாயானவள் எந்த பிம்பங்களை அடிக்கடி பார்க்கிறாளோ அவற்றின் உருவங்கள், அமைப்புகள் அந்தக் குழந்தைக்குப் பின்னாளில் பரிச்சயமாய் இருக்கும்.
கருவின் ஏழாம் மாதத்தில் தாயானவள் எந்தப் பிம்பங்களை அடிக்கடி பார்க்கிறாளோ அவற்றின் உருவங்கள், அமைப்புகள் அந்தக் குழந்தைக்குப் பின்னாளில் பரிச்சயமாய் இருக்கும்!பானு!
உதாரணத்துக்கு தாயானவள் தன் கர்ப்பகாலத்தின் கடைசி மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்புடைய (குள்ளமான/உயரமான/ஒரே நிறமான) மனிதர்களைப் பார்த்து வந்தாள் என்றால், குழந்தையானது பிறந்த பின் சில மாதங்கள் வரைக்கும் வேறு அமைப்பில், உருவத்தில், நிறத்தில் வருபவர்களை எதிர்கொள்ளத் தயங்கும். அதற்காகத்தான், ஏழாம் மாதத்தில் கர்ப்பிணிப் பெண் நிறைய பேரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வளைகாப்பு நடத்தினார்கள். இது தெரியாமல் சிலர் இதை சரியாகப் பின்பற்றுவதில்லை'' என்ற பானு தொடர்ந்தாள்.

``ஒரு கருவானது ஏழாம் மாதத்தை எட்டுகிற வரைக்கும் அதன் உருவத்திலும், புரிந்துணரும் சக்தியிலும் பெரிய அளவில் வளர்வதில்லை. அதன் பிறகான ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் மாதங்களில்தான் கருவின் வளர்ச்சியானது பன்மடங்கு பெருகுகிறது. குறிப்பாக ஒரு குழந்தையின் அத்தனை புலன்களும் ஒட்டுமொத்தமாக விழித்துக்கொள்வது, அது தன் தாயின் கருவில் இருக்கிற அந்த இறுதி மாதங்களில்தான்.
அதனால்தான், வளைகாப்பு நிகழ்வில் பார்ப்பதற்கு பல வண்ணங்கள், பல மனிதர்கள், கேட்பதற்கு வளையல் ஓசைகள், நுகர்வதற்கு சந்தனமும் பன்னீரும், சுவைக்க அறுசுவைகள், உணர்வோடு உறவாட உறவினர்கள் என ஏற்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். மொத்தத்தில் கருவிலுள்ள சிசுவின் அத்தனை புலன்களையும் நிறைவு செய்யும் ஒரு நிகழ்வே வளைகாப்பு'' என்று பானு சொல்ல, இவற்றையெல்லாம் நம்புவதா, வேண்டாமா என மலைத்து நின்ற பரத், அதை அப்படியே தன் மனைவியிடமும் வெளிப்படுத்திவிட்டான்.

சீதா அக்கா சொன்னவை மட்டுமல்லாமல், தானும் சில நாள்களாக கர்ப்பகாலம் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்ததாகவும், மேலை நாடுகளில், குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்காகப் பல பல்கலைக்கழகங்கள் இயங்குவதையும், கரு உருவான நாளில் இருந்து மூன்று வயது வரைக்கும் செய்யப்படும் எதுவும் அந்தக் குழந்தையின் ஆயுளுக்கும் பிரதிபலிக்கும் என்பதையும், அதற்கான சில எடுத்துக்காட்டுகளையும், கட்டுரைகளையும் காண்பித்து கணவன் பரத்துக்கு விளக்கினாள் பானு.
ஒரு வயதில் குழந்தையின் மொழி உணரும்திறன் பெரியவர்களைவிட பலமடங்கு வேகமாக இருக்கும் என்றும், சர்வசாதாரணமாக பத்திலிருந்து பதினான்கு மொழி வரை புரிந்துகொண்டு அதற்குப் பதில் அளிக்க வல்லவர்கள் குழந்தைகள் என்ற செய்தி எல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும் என்று பானு உற்சாகம் பொங்கச் சொல்லியபோது, பரத் அவளிடம் ஒன்றை மட்டும் கேட்டான்.

``கருவுற்ற நேரத்தில் எல்லோரும் இயல்பாய் நடப்பதும், வேலைக்குப் போவதுமாய் இருக்கும்போது உனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது பானு? இப்படி இல்லாமல் இருந்திருந்தால் நீ இன்னும் இந்தக் குழந்தைக்கு என்னென்னவோ செய்திருப்பாயே...'' - கணவன் இப்படிச் சொன்னவுடன் பானு கலகலவென சிரித்தாள்.
``கவலை வேண்டாம் பரத். நான் என் முந்தைய நாள்களில் உடலை சரிவர கவனிக்காததன் விளைவுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். ஆனால், இவையெல்லாம் என் குழந்தையைப் பாதிக்காத வண்ணம் தற்காத்துக்கொள்ள கடவுள் எனக்கு வழி காட்டிவிட்டார். கடந்த காலத்தை நினைத்து இனி ஒரு நிமிடம்கூட நான் வேதனைப்படத் தயாராக இல்லை. உடலால் ஈடுகட்ட முடியாததை மனதால் இன்னும் ஒருபடி அதிகமாகவே ஈடுசெய்ய முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
Also Read

நமக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் என்பதை கற்பனையில் உருவாக்கிவிட்டேன். அந்தக் கற்பனையை நான் ஆழமாக, உணர்வுபூர்வமாக நினைக்கும்போது என் எண்ணங்கள் 200% நிறைவேறும். இப்போது நான் உடலளவில்தான் படுக்கையில் இருக்கிறேன். மனதளவில் நான் இப்போது மிகப்பெரிய மலைக்குன்றில், இயற்கை எழில் சூழ ஓர் இடத்தில் தன்னந்தனியாய் தவம் செய்யத் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.
என் குழந்தையின் உருவமும், ஆரோக்கியமும், எதிர்காலமும் என மனதுக்குள் தெளிவாகத் தெரியத் தொடங்குகிறது. நீங்கள் சந்தோஷமாக ஆபீஸ் கிளம்புங்கள். நான் போன வாரம் வரை இருண்டு கிடந்த பானு கிடையாது. இப்போது புத்துயிர்பெற்றுவிட்டேன் பரத்'' என்றவள் உற்சாகமாக தன் கணவனை வழியனுப்பி வைத்தாள்.

பல ஆச்சர்யங்களை உள்ளடக்கிய கர்ப்பகாலத்தையும், ஆரம்பகால குழந்தைப் பருவத்தையும் அழகாகச் செதுக்கி எடுத்தால் எண்ணற்ற அதிசயங்களை மனிதனின் வாழ்நாளில் நிகழ்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். இன்னும் பலவற்றை வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.