`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதாகவும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள்
சென்ற இரண்டு அத்தியாயங்களில், Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மையால் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகள், கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்கும் Anti-D ஊசி குறித்து விரிவாகப் பார்த்தோம். அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் சிசுவுக்கு ஏற்படும் ரத்தசோகைக்கு அளிக்கப்படும் `கருப்பையக ரத்த மாற்ற சிகிச்சை', குழந்தை பிறந்த பிறகு Rh இணக்கமின்மையால் ஏற்படும் தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் `குருதி மாற்ற சிகிச்சை’ போன்றவை குறித்து விரிவாகக் காண்போம்.
கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள்:
மனைவியின் ரத்தப்பிரிவு நெகட்டிவ் எனில், கணவரின் ரத்தப் பிரிவை அறிய வேண்டும். அவரின் ரத்தப் பிரிவும் நெகட்டிவ் எனில், சிசுவின் ரத்தப் பிரிவும் நெகட்டிவ்வாகவே இருக்கும்; எனவே, Rh இணக்கமின்மை ஏற்படும் சாத்தியம் இல்லை. மாறாக, கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், சிசுவின் ரத்தப் பிரிவும் பாசிட்டிவ்வாக இருப்பதற்கும், அதனால் Rh இணக்கமின்மை ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். கணவரின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பின், அவரின் மரபணுவைப் பரிசோதிப்பதன் மூலம், சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பதற்கு, எவ்வளவு சாத்தியமென்பதைத் துல்லியமாக அறிந்திட முடியும்.

கர்ப்ப காலத்தில், தாய்க்கு ஏற்கெனவே Rh இணக்கமின்மை ஏற்பட்டுவிட்டதா என்பதை, Indirect Coombs test (ICT) பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். ICT பரிசோதனை பாசிட்டிவ் எனில், தாயின் ரத்தத்தில் ஏற்கெனவே Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளதென அர்த்தம். ICT பரிசோதனை பாசிட்டிவ் எனில், தாயின் ரத்தத்திலுள்ள Cell–free fetal DNA (cff DNA)வை PCR பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா எனக் கண்டறிவோம். சிசுவின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ்வாக இருப்பது உறுதியானால், தாயின் ரத்தத்திலுள்ள Rh IgG ஆன்டிபாடிகளால் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல் அபாயம் மிக அதிகம்.
எனவே, தாயின் ரத்தத்தில் எவ்வளவு Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளன என்பதை வாராவாரம் பரிசோதனைகள் மூலம் கண்டறிவோம். Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு <4 IU/mlஆக இருந்தால் சிசுவுக்கு பாதிப்புகள் ஏற்படாது. மாறாக, Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு 4 - 15 IU/ml ஆக இருந்தால், சிசுவுக்கு ரத்தச் சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) ஏற்படும் அபாயம் மிதமாகவும், அதுவே 15 IU/ml-க்கு மேலிருந்தால் சிசுவுக்கு ரத்தச் சிவப்பணு சிதைவு நோய் ஏற்படும் அபாயம் தீவிரமாகவும் இருக்கும்.
Rh இணக்கமின்மையையால் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனைகள்:
தாயின் ரத்தத்தில் உள்ள Rh IgG ஆன்டிபாடிகளால் ஏற்படும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதலின் அளவு மிதமாக இருந்தால், ரத்த சோகை மற்றும் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் வெளிப்படும் பிலிருபினால் மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படும். சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதலின் அளவு மிகத் தீவிரமாக இருந்தால், தீவிர ரத்தசோகையால் இதயத் திறனிழப்பு ஏற்பட்டு, வயிறு, நுரையீரல், மற்றும் இதயத்தைச் சுற்றி நீர் கோத்துக்கொள்ளும். இதை, ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) என்றழைப்போம். தாயின் ரத்தத்தில் உள்ள Rh IgG ஆன்டிபாடிகளின் அளவு 10 IU/ml-க்கு மேலிருந்தால், சிசுவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, வாராவாரம் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்படும். அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் மாற்றங்களைக் கண்டறிய முடியும்.

Rh IgG ஆன்டிபாடிகளால் ஏற்படும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதலால், சிசுவுக்கு ரத்தசோகை ஏற்படும். ரத்தசோகையால், ரத்த பாகுத்தன்மை (blood viscosity) குறைந்து, ரத்த வேகம் அதிகரிக்கும். டாப்ளர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம், மத்திய பெரூமூளை தமனியின் ரத்த வேகத்தை (Middle Cerebral Artery Peak Systolic Velocity / MCA PSV) கணக்கிடுவதன் மூலம், சிசுவுக்கு ஏற்பட்ட ரத்தசோகையைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். MCA PSV
>1.5 MOM-ஆக இருந்தால், சிசுவுக்கு தீவிர ரத்தசோகை ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகம். MCA PSV >1.5 MOM-ஆக இருப்பின், சிசுவின் ரத்தசோகை எவ்வளவென்று கண்டறிய, கார்டோசென்டெசிஸ்/தொப்புள் கொடி துளைப்பு (Cordocentesis) செயல்முறையில், அல்ட்ராசவுண்ட் உதவியுடன், சிசுவின் தொப்புள் கொடி ரத்த நாளத்தில் இருந்து ஊசி மூலம் சிசுவின் ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும். ரத்தப் பரிசோதனை மூலம் சிசுவுக்கு ஏற்பட்டுள்ள ரத்தசோகையின் தீவிரம் தெரிய வரும்.
தீவிர ரத்தசோகைக்கு செய்யப்படும் கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை:
சிசுவின் ரத்தப் பரிசோதனையில், தீவிர ரத்தசோகை இருப்பின் (Hematocrit < 30%), கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை (Intrauterine Transfusion/ Intrauterine Fetal Blood Transfusion) செய்யப்படும். அல்ட்ராசவுண்ட் உதவியுடன ஊசி மூலம், சிசுவின் தொப்புள் கொடி ரத்தநாளத்தின் வாயிலாகவோ (Intravascular Transfusion) சிசுவின் வயிற்றிலுள்ள பெரிட்டோனியத்துக்குள்ளாகவோ (Intraperitoneal Transfuion) O Rh-ve ரத்தமாற்றம் செய்யப்படும். இதன்மூலம் சிசுவின் தீவிர ரத்தசோகைக்கு சிகிச்சையளிக்கப் பட்டு, சிசுவின் Hematocrit அளவு 50%க்கு மேல் கொண்டுவரப்படும். Rh இணக்கமின்மையின் தீவிரத்தைப் பொறுத்து, மீண்டும் மீண்டும் கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சை தேவைப்படலாம். டாப்ளர் அல்ட்ராசவுண்ட் MCA PSV அளவைப் பொறுத்து, அடுத்தடுத்த கருப்பையக ரத்தமாற்ற சிகிச்சையின் தேவையும் நேரமும் நிர்ணயிக்கப்படும்.

தீவிர மஞ்சள் காமாலை பாதிப்பைத் தடுக்க செய்யப்படும் ரத்த மாற்றம்:
குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி ரத்த நாளத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, ரத்த வகை, ஹீமோகுளோபின், பிலிருபின், Direct Coombs Test (DCT) பரிசோதனைகளுக்கு, உடனடியாக உட்படுத்தப்படும். குழந்தையின் ரத்த வகை பாசிட்டிவ்வாக இருந்து, DCT பாசிட்டிவாக இருப்பின், பச்சிளங்குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்களின் மீது தாயின் Rh IgG ஆன்டிபாடிகள் உள்ளதென பொருளாகும். எனவே, குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் சிதைவுற்று, மிக வேகமாக உடலில் பிலிருபினின் அளவு அதிகரித்து, மூளை பாதிப்புகள் ஏற்பட நேரிடும்.
எனவே, குழந்தை பிறந்த உடனடியாகவே தீவிர ஒளிக்கதிர் சிகிச்சையைத் (Intensified Phototherapy) தொடங்கிவிடுவோம். பரிசோதனைகளில், மஞ்சள் காமாலையின் தீவிரம் அதிகமெனினும், பிலிருபினின் அளவு வேகமாக அதிகரிப்பினும், அதற்கு காரணமான சிசுவின் உடலிலுள்ள தாயின் Rh ஆன்டிபாடிகளை நீக்குவதற்காக, குழந்தையின் ஒட்டுமொத்த ரத்தமே நீக்கப்பட்டு, தாய் மற்றும் சேயின் ரத்தத்துக்கு ஒத்து வரும் (cross match) O Rh-ve ரத்தம் அல்லது நெகட்டிவ் உடைய சிசுவின் ABO ரத்த வகை ரத்தம், குருதி மாற்றத்துக்கு உபயோகப்படுத்தப்படும் (உதாரணமாக, குழந்தையின் ரத்த வகை B+ve எனில், குருதி மாற்றத்துக்கு O-ve அல்லது B-ve ரத்தம் உபயோகப்படுத்தப்படும்).

குழந்தையின் ரத்த அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு புதிய ரத்தம் உபயோகப்படுத்தப்படுவதால், இந்தச் செயல்முறை ‘Double Volume Exchange Transfusion (DVET)’ என்றழைக்கப்படுகிறது.
அடுத்த அத்தியாயத்தில், DVET செய்வதற்கான பரிந்துரை தேவைகள் மற்றும் அதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பராமரிப்போம்