Published:Updated:

ஆச்சர்ய வரலாறும் ஆபத்தும் நிறைந்த பால் புட்டிகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 17

பால் பாட்டில்
News
பால் பாட்டில்

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பல்வேறு பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மரம், செராமிக் மற்றும் மாடுகளின் கொம்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 19-ம் நூற்றாண்டில், ஃபீடிங் பாட்டில்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

Published:Updated:

ஆச்சர்ய வரலாறும் ஆபத்தும் நிறைந்த பால் புட்டிகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 17

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பல்வேறு பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மரம், செராமிக் மற்றும் மாடுகளின் கொம்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 19-ம் நூற்றாண்டில், ஃபீடிங் பாட்டில்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

பால் பாட்டில்
News
பால் பாட்டில்

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு.ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

சென்ற அத்தியாயத்தில், பாலாடையில் பவுடர் பால் அளிக்கும்போது, தவறுதலாக, நோய்த்தொற்று பவுடர் பாலின் வழியாகக் குழந்தைக்குச் செல்வதைத் தடுத்திட, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில், குழந்தைகளுக்கு ஏன் புட்டிப்பால் கொடுக்கக் கூடாதென்பதை விரிவாகக் காண்போம்.

மருத்துவர் மு. ஜெயராஜ்
மருத்துவர் மு. ஜெயராஜ்

புட்டிப்பாலின் வரலாறு

கி.மு 2000-ம் ஆண்டு முன்னர் உபயோகப்படுத்தப்பட்டுள்ள களிமண்ணால் ஆன பாலூட்டும் பாத்திரங்கள், பல்வேறு குழந்தைகளின் கல்லறைகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தப் பாத்திரங்கள், நீள்வட்டமாக, நிப்பிள் (nipple) போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளன.

ஆரம்பத்தில், இவை எண்ணெய் விளக்குகளாக உபயோகப்பட்டிருக்கும் என்று கருதப்பட்டாலும், ஆய்வு முடிவுகளில் அவற்றின் படிமங்களில், விலங்குகளின் பாலிலுள்ள கேசீன் புரதம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், பண்டைய காலங்களில் தாய்ப்பாலுக்கு மாற்றாக, விலங்குகளின் பால் உபயோகப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பல்வேறு பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மரம், செராமிக் மற்றும் மாடுகளின் கொம்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 19-ம் நூற்றாண்டில், ஃபீடிங் பாட்டில்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 1845-ம் ஆண்டு ரப்பரால் ஆன நிப்பிள் உபயோகப்படுத்தப்பட்டது.

feeding
feeding

1924-ம் ஆண்டு, வெப்ப எதிர்ப்புத் திறனுடைய Pyrex glass கண்டறியப்பட்டவுடன், அது பால் புட்டி செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. அதனுடன் செயற்கை நிப்பிள் பொருத்தப்பட்டு, பரவலாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில்தான், பால் பவுடர் உபயோகம் உலகம் முழுதும் அதிகரிக்க, பால் புட்டியின் உபயோகமும் மிகவும் பரவலானது. தற்போது, பெரும்பான்மையாக பிளாஸ்டிக்காலான பால் புட்டிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

தடை செய்யப்பட்ட பிஸ்பீனால் ஏ பாட்டில்கள்

2011-ம் ஆண்டுக்கு முன்னர் வரை, பாலிகார்பனேட் (Polycarbonate) பிளாஸ்டிக், பால் புட்டி செய்ய பயன்படுத்தப்பட்டது. பாலிகார்பனேட் (Polycarbonate) பிளாஸ்டிக்கின் முக்கிய கெமிக்கலான பிஸ்பீனால் ஏ (Bisphenol A/ BPA), ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படுத்துவதை ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப் பட்டது. குறிப்பாக, மலட்டுத்தன்மை, உடல்பருமன், நீரிழிவு நோய், இதய நோய், மூளை வளர்ச்சியில் பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, 2008-ம் ஆண்டு முதல், பல்வேறு நாடுகளில் பிஸ்பீனால் ஏ பால் புட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards - BIS), IS 14625:2015-ன் படி, பால் புட்டி தயாரிப்பில் பிஸ்பீனால் ஏ உபயோகப்படுத்துவதை தடை செய்தது.

ஆச்சர்ய வரலாறும் ஆபத்தும் நிறைந்த பால் புட்டிகள் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 17

பிஸ்பீனால் ஏ தடை செய்யப்பட்டதால், அதற்குப் பதிலாக பிஸ்பீனால் எஸ் (Bisphenol S/ BPS) மற்றும் பிஸ்பீனால் எஃப் (Bisphenol F/ BPF) பயன்படுத்தப்படுகின்றன. இவை பிஸ்பீனால் ஏ போன்று, உருவ அமைப்பு மற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளதால், பிஸ்பீனால் ஏ போன்று ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. பல்வேறு மருத்துவ ஆய்வுகள் பிஸ்பீனால் எஸ் மற்றும் பிஸ்பீனால் எஃப் கெமிக்கல்களும், உடலில் பாதிப்புகள் ஏற்படுத்துவதை உறுதி செய்துள்ளதால், பிஸ்பீனால் ஏ மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக அனைத்து பிஸ்பீனால்களையும் பால் புட்டி உற்பத்திக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கோருகின்றனர்.

2019-ல் டெல்லி மற்றும் 7 மாநிலங்களில் பிராண்டடு மற்றும் லோக்கல் பால் புட்டிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பிஸ்பீனால் ஏ இருந்தது தெரிய வந்தது. இதில் பெரும்பாலான பாட்டில்களில், `BPA-free or Zero percent BPA’ என்று பொறிக்கப்பட்டிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஸ்பீனால் ஏ தடை செய்யப் பட்டிருந்தால்கூட, BPA-free என்று பொறிக்கப்பட்ட பால் புட்டிகளை நம்பிக்கையுடன் வாங்கி உபயோகப்படுத்தலாமா என்ற கேள்வி தற்போதும் தொடர்வதே நிதர்சனம்.

baby
baby

பால் புட்டிகள், ஆய்வு நிறுவனங்களால் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, இவ்வாறு பிஸ்பீனால் ஏ போன்ற தடை செய்யப்பட்ட கெமிக்கல்கள் கண்டறியப்பட்டால், அந்த நிறுவனங்களுக்கு சீல் வைப்பதுடன், தீவிர நடவடிக்கைகளை அரசு எடுப்பதன் மூலமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஒவ்வொரு நாளும், உலகம் முழுதும் புட்டிப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள், பாலுடன் கோடிக்கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் (microplastics) துகள்களையும் உட்கொள்கின்றனர் என்னும் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகளை அடுத்த அத்தியாயத்தில் விரிவாக அலசுவோம்.

பராமரிப்போம்…