கட்டுரைகள்
Published:Updated:

குளிர்காலத்தில் நுரையீரல் பாதிப்பு; பாதுகாப்பு!

உடற்பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
உடற்பயிற்சி

அதிகாலையிலும், பனி தொடங்கும் மாலை வேளைக்கு மேலும் வெளியே செல்லக் கூடாது. குளிர் காலத்தில் வெளியில் செல்வது, கூட்டமான இடங்களுக்குச் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

மார்கழி என்றால் அதிகாலை கோலம், பனி, திருப்பள்ளி எழுச்சி எனப் பலருக்கும் பிடித்த மாதம். ஆனால், இம்மாதத்தின் கடுமையான குளிர், பலருக்கு உடல்நலத் தொந்தரவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, நிமோனியா, சைனஸ், ஆஸ்துமா, சளி, மூச்சுத்திணறல் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது கடக்கக் கடினமான காலமாக இருக்கும். இந்த சீதோஷ்ண நிலையில் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகள், மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிகள் பற்றி சொல்கிறார் திருச்சியைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ராஜ் திலக்.

ராஜ் திலக்
ராஜ் திலக்

நிமோனியா மற்றும் குளிர்கால வைரஸ் தொற்றுகள்

இந்தக் குளிர்பனிக் காலத்தில், நுரையீரல் பிரச்னைகள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் 60 வயதிற்கு மேலானவர்களுக்கும் குளிர்கால வைரஸ் தொற்றுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு இடைப்பட்ட வயதினருக்கும் இந்த வைரஸ் தொற்றுகள் ஏற்படும் என்றாலும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களுக்கு இது சரியான வாய்ப்புள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கவனிக்கப்படாமல் விடும் பட்சத்தில் இது கடுமையான நிமோனியாவாக மாறி, மருத்துவமனையில் அட்மிட் செய்யுமளவுக்குத் தீவிரமாக வாய்ப்புள்ளது. கொரோனா, பன்றிக் காய்ச்சல்(H1N1), சாதாரணமாக ஏற்படக்கூடிய இன்ஃப்ளூயன்சா (சளி) வைரஸ் ஆகியவை கவனம் கொடுக்க வேண்டிய பிரச்னைகள். குழந்தைகளுக்கு, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தும் RSV போன்ற கடுமையான வைரஸ் பரவவும் வாய்ப்புள்ளது.

குளிர்காலத்தில் நுரையீரல் பாதிப்பு; பாதுகாப்பு!

குளிரால் தீவிரமாகும் நோய்கள்

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், (Chronic obstructive pulmonary disease - COPD), பனியில் தீவிரமாகும். சிகரெட் பிடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு அருகில் இருப்பதால் அந்தப் புகையை சுவாசிக்க நேர்பவர்கள் (Passive smoking), விறகு அடுப்பில் சமைப்பவர்கள், அதிக அளவு வாகனங்களின் புகையை சுவாசிக்க நேர்பவர்கள், நச்சுப்புகை வெளியேறும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள்... இவர்களுக்கு எல்லாம் இந்தப் பனிக்காலத்தில் சுவாசப் பிரச்னைகள் அதிகமாகும் வாய்ப்புள்ளது. மரபு, அல்லது உணவு, தூசு, காலநிலை போன்றவற்றால் ஏற்படக்கூடிய ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்தப் பனிக்காலத்தில் மூச்சுத் திணறல் அதிகமாகலாம். சிலருக்கு, குளிர்காலத்தில் மட்டுமே ஆஸ்துமா ஏற்படலாம். மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு, மூக்குப் பாதையில் தசை வீங்குவதால் வலி, சளி, சளி தேங்குவது, தலைவலி, ஒற்றைத் தலைவலி, இருமல், தும்மல் போன்றவை ஏற்படும். இவை தவிர, கொரோனாப் பெருந்தொற்றால் நுரையீரல் பிரச்னை ஏற்பட்டவர்களுக்கும், நுரையீரல் சம்பந்தப்பட்ட வேறு பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இந்தக் குளிர்காலத்தில் சளி, மூச்சுத்திணறல் பிரச்னைகள் ஏற்படவும், தீவிரமாகவும் செய்யலாம்.

குளிர்காலத்தில் நுரையீரல் பாதிப்பு; பாதுகாப்பு!

எப்படித் தவிர்ப்பது?

* அதிகாலையிலும், பனி தொடங்கும் மாலை வேளைக்கு மேலும் வெளியே செல்லக் கூடாது. குளிர் காலத்தில் வெளியில் செல்வது, கூட்டமான இடங்களுக்குச் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

* அவசியமான காரணங்களுக்கு வெளியில் செல்லும்போது ஸ்வெட்டர், கை கால்களுக்கு உறை, காதுகளை மூடிக்கொள்ளும் வகையில் தலைப்பாகை போன்றவற்றை அணிந்துகொள்ளவும்.

* அதிகாலையில் வாக்கிங் செல்பவர்கள் நேரத்தை மாற்றி, சிறிது வெயில் வந்த பின்னர் செல்லலாம்.

* ஏற்கெனவே சளி, மூச்சுத்திணறல் எனப் பிரச்னை இருப்பவர்கள் நேரம் தவறாமல் தங்களது வாடிக்கையான மருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* குளிக்க, குடிக்க குளிர்ந்த நீர் தவிர்க்க வேண்டும். அறை வெப்பநிலையில் இருக்கும் நீர் அல்லது வெந்நீர் பயன்படுத்தவும்.

* குளிர்பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாட்டில் பானங்கள்.

* பழங்களை அப்படியே சாப்பிடவும். ஜூஸ் செய்தால் ஐஸ் சேர்க்காமல், ஃபிரிட்ஜில் வைக்காமல் உடனே சாப்பிட்டுவிடவும். அலர்ஜி எனக் கருதும் பழங்களைத் தவிர்க்கவும்.

குளிர்காலத்தில் நுரையீரல் பாதிப்பு; பாதுகாப்பு!

* கொரோனா காலத்தில் பின்பற்றியதுபோல மாஸ்க், சானிட்டைசர், ஹேண்ட்வாஷ் பயன்படுத்தவும். ஹேண்ட்வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது முக்கியம்.

* மிக முக்கியமாக, இணை நோய்களான நீரிழிவு, இதர நுரையீரல் பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

* மூச்சுத்திணறல் பிரச்னைக்கு என இரண்டு தடுப்பூசிகள் உள்ளன. H1N1 எனக் கூறப்படும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை 6 மாதக் குழந்தையில் ஆரம்பித்து அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் போட்டுக்கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு இரண்டு (செப்டம்பர்) மாதங்களுக்கு முன்பிருந்தே போடப்பட வேண்டும். அடுத்ததாக, நீமோகாக்கல் தடுப்பூசி என்ற பாக்டீரியல் தடுப்பூசி. இதனை கர்ப்பிணிகளும் போட்டுக்கொள்ளலாம்.

* சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் காலையில், மூக்கில் அடிக்கக்கூடிய ஸ்பிரேயை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம். காலையில் ஆவிபிடிப்பதை மேற்கொள்ளலாம்.

* உடற்பயிற்சி, வாக்கிங், யோகா போன்றவை ரெகுலராகச் செய்துவருபவர்கள் தவிர்க்க வேண்டாம், தொடரலாம்.

* உணவுகளில் ஜங் உணவுகள், குளிர்ந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்கவும்.