Published:Updated:

நடிகர் சரத்பாபுக்கு ஏற்பட்ட செப்சிஸ் பாதிப்பு... என்ன, ஏன், யாருக்கு? மருத்துவ விளக்கம்

சரத்பாபு
News
சரத்பாபு

இந்த செப்சிஸ் என்கிற செப்டிசீமியா, எந்தக் காரணத்தால் ஏற்படும், இதனால் பாதிக்கக்கூடியவர்கள் யார், செப்டிசீமியாவின் அறிகுறிகள் என்ன என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த கல்லீரல் மருத்துவர் ஜாய் வெர்கீஸ்...

Published:Updated:

நடிகர் சரத்பாபுக்கு ஏற்பட்ட செப்சிஸ் பாதிப்பு... என்ன, ஏன், யாருக்கு? மருத்துவ விளக்கம்

இந்த செப்சிஸ் என்கிற செப்டிசீமியா, எந்தக் காரணத்தால் ஏற்படும், இதனால் பாதிக்கக்கூடியவர்கள் யார், செப்டிசீமியாவின் அறிகுறிகள் என்ன என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த கல்லீரல் மருத்துவர் ஜாய் வெர்கீஸ்...

சரத்பாபு
News
சரத்பாபு

பிரபல நடிகர் சரத்பாபு, செப்சிஸ் நோய் பாதிப்பால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருிலையில், அந்த நோய் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லீரல் மருத்துவர் ஜாய் வெர்கீஸ் விளக்கம் தந்துள்ளார்.

திரைப்படத்துறையில் 50 வருடங்களுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டு நடித்து வந்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 230-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சரத்பாபு நடித்திருக்கிறார். 70 வயதைக் கடந்த மூத்த நடிகரான அவருக்கு, செப்சிஸ் என்னும் நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவர் ஜாய் வர்கீஸ்
மருத்துவர் ஜாய் வர்கீஸ்

செப்சிஸ் என்பது என்ன?

இந்த செப்சிஸ் என்கிற செப்டிசீமியா, எந்தக் காரணத்தால் ஏற்படும், இதனால் பாதிக்கக்கூடியவர்கள் யார், செப்டிசீமியாவின் அறிகுறிகள் என்ன என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த கல்லீரல் மருத்துவர் ஜாய் வெர்கீஸ்...

``செப்சிஸ் என்பது உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படக் கூடிய, கடுமையான ஒரு நிலை. உடலில் ஏற்படும் தொற்றின் தீவிர நிலைதான் இந்த செப்சிஸ். பொதுவாக மனித உடலில் ஏதேனும் ஒரு தொற்று ஏற்பட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்திதொற்றை அழித்துவிடும்.

பொதுவாக தொற்று என்பது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என எதனாலும் ஏற்படலாம். உடலில் ஏற்படக்கூடிய தொற்றின் வீரியம் குறைவாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும். இதற்கு பெரிதாக மருந்துகள் எதுவும் தேவைப்படாது. முறையான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடித்தால் இந்தத் தொற்று தானாகவே அழிந்துவிடும்.

மேலும் செரிமானத்தின்போது குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா, அசிடிட்டி போன்றவை இந்தத் தொற்றின் வீரியத்தைக் குறைத்து, ரத்தத்தில் தொற்று கலக்காமல் தடுத்து அழித்துவிடும். ஒருவேளை இந்தத் தொற்றானது ரத்தத்தில் கலந்தாலுமே கூட, உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி, இந்தத் தொற்றின் வீரியத்தைக் குறைத்து, தொற்றை அழித்துவிடும். இதில் பெரிதாக அறிகுறிகள் எதுவும் தென்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி
விகடன்

மாறுபடும் அறிகுறிகள்

அதேநேரம், வீரியம் அதிகமாக இருக்கக்கூடிய தொற்று ஏற்பட்டு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்தத் தொற்றினை எதுவுமே செய்ய முடியாதபோது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதுமட்டுமன்றி நமது உடலில் எந்த உறுப்பில் தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அதன் பொருட்டு அறிகுறிகள் மாறுபடும்.

உதாரணமாக ஃபுட் பாய்சன் சம்பந்தமான தொற்று ஏற்பட்டால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நுரையீரலில் தொற்று ஏற்பட்டால், இருமல், சளி அல்லது பச்சை, மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும் மருத்துவர்களை அணுகினால், தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கிறதோ அதன் பொருட்டு ஆன்டிபயாட்டிக்ஸ் அல்லது ஆன்டிவைரல் மருந்துகள் கொடுப்பார்கள். அவை அந்தத் தொற்றை சரியாக்கிவிடும்.

இதற்கும் அடுத்த நிலை, உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றின் வீரியத்தையோ தொற்றையோ அழிக்க முடியாமல் போய், ஆன்டிபயாட்டிக், ஆன்டிவைரல் மாத்திரைகளாலும் அழிக்க முடியாத நிலையில், இந்தத் தொற்று உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும்.

உதாரணமாக, சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தால், அது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கும். மேலும், இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கும் அடுத்த கட்டமாக நுரையீரலை பாதிக்கும். இதைதான் ARDS (Acute Respiratory Distress Syndrome) என்பார்கள். இப்படி கடுமையான தொற்று ஏற்பட்டு, பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்போது, நோயாளி நினைவை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது.

தொற்று நோய்கள்
தொற்று நோய்கள்

சுருக்கமாக, ஓர் உறுப்பு பாதிப்படைந்து மற்ற உறுப்புகளையும் பாதிப்பதுதான் செப்சிஸ் அல்லது செப்டிசீமியா என்று அழைக்கப்படுகிறது. இது, உயிருக்கு ஆபத்தானதும் கூட. இந்த செப்சிஸ் ஏற்படும்போது, ஏராளமான துணை மருந்துகளும் பிற சிகிச்சை முறைகளும் தேவைப்படும். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி என்னும் தெரபி செய்யப்படும். அப்போது, தற்காலிகமாக அவரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஏதேனும் தொற்று அவரை பாதித்தால், அவருக்கும் செப்சிஸ் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

யாருக்கெல்லாம் தொற்று பாதிப்பு ஏற்படலாம்?

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக குறையும். இந்தக் காலகட்டத்திலும் தொற்று ஏற்படக்கூடும்.

மேலும் 70, 80 வயது ஆனவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகிவிடும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

Representational Image
Representational Image

நோயாளியின் மருத்துவ வரலாற்றைக் கருத்தில் கொண்டும், அப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டும், உரிய மருத்துவர்கள் சேர்ந்து, குழுவாகத்தான் சிகிச்சை அளிப்பார்கள். மருத்துவரை அணுகி, மாத்திரையை வாங்கி, அவ்வப்போது விட்டுவிட்டு உட்கொள்ளும்போது, உடலில் உள்ள தொற்று அந்த மருந்துக்கு பழகிக்கொள்ளும். அந்த மருந்தானது தொற்றை எந்த வகையிலும் அழிக்க முற்படாது.

இந்தத் தொற்று பிறருக்குப் பரவும்போது அதே ஆன்டிபயாட்டிக் அல்லது ஆன்டிவைரல் மருந்துகளைதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அப்போது, அந்த மருந்தானது நோயாளிக்கு எந்த முன்னேற்றத்தையும் அளிக்காது. இந்த நிலையும் தொற்றை அதிகப்படுத்தி செப்சிஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.

முறையான உணவுப் பழக்கம் அவசியம்!

தாமதமான சிகிச்சையும் செப்சிஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்கும். உதாரணமாக, ஒரு தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்திலேயே அதற்குரிய சிகிச்சையளித்தால், அந்தத் தொற்றை சுலபமாக அழித்துவிடலாம். ஆனால், அந்தத் தொற்று ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள உறுப்புகளையும் பாதித்து, தொற்றின் வீரியம் அதிகரிக்கும்போது தொற்றை எந்த மருந்துகளாலும் அழிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் ஒருவருக்கு செப்சிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

சத்தான உணவு
சத்தான உணவு

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து, சத்தான உணவுகளையும் முறையான உணவுப் பழக்கத்தையும் கொண்டிருந்தால் எந்த ஒரு தொற்றும் அவரை அண்டாது. மேலும் செப்சிஸ் என்பது பரவும் நோய் அல்ல. ஆனால் தொற்று பரவும். ஒரு தொற்று பரவும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அந்தத் தொற்றின் வீரியம் அதிகரித்து செப்சிஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்குமே தவிர செப்சிஸ் என்றுமே பரவாது" என்றார்.