சென்னை, காவேரி மருத்துவமனையில், ரத்தநாள அழற்சி எனப்படும் அரிதான பிறவிப் பிறழ்வு இருந்த 60 வயது நபருக்கு வெற்றிகர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கரு வளரும்போது, பெருந்தமனியில் இருந்து இடுப்பு மூட்டுத்தமனி (Sciatic Artery) தொடங்குகிறது. இதுதான், கால்களுக்கு ரத்தத்தை வழங்கும் பெரிய ரத்தக்குழாயாகும். பிறந்து குழந்தை வளரும்போது கால்களுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் புதிய நிரந்தர தமனியான ஃபெமோரல் எனப்படும் தொடைத்தமனி உடலில் உருவாகும். அதன்பிறகு இடுப்புமூட்டுத் தமனி விரைவிலேயே மறைந்துவிடும். ஆனால், சிலருக்கு இடுப்பு மூட்டுத்தமனி மறையாமல் அது உடலில் இருக்குமானால், சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக, உட்காரும்போது இந்தத் தமனி அழுத்தத்திற்கு ஆளாகி சேதமடைவதால், ரத்தநாள அழற்சி மற்றும் ரத்த உறைவுக் கட்டிகள் உண்டாகின்றன.

இந்த நிலையில், சென்னை, காவேரி மருத்துவமனையில், நிலையான இடுப்புமூட்டுத்தமனியின் (PSA) ரத்தநாள அழற்சி எனப்படும் அரிதான பிறவிப் பிறழ்வு இருந்த நபருக்கு, வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான வலி, வலது பிட்டத்தில் துடிப்பு, வலது காலின் பெருவிரல் கறுப்பாக நிறமாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளோடு, அந்த நபர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள ரத்தநாள மற்றும் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது பிட்டத்தில் துடிப்புடன் கூடிய வீக்கம் இருப்பதும் மற்றும் வலது காலின் பெருவிரலில் தசை, திசு அழுகியிருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்தச் சிகிச்சை குறித்து, மருத்துவமனையின் ரத்தநாள மற்றும் ரத்தக்குழாய்கள் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் என். சேகர் கூறுகையில், ``நோயாளிக்கு ஆஞ்சியோகிராம் சோதனை செய்ததில், இடுப்பு மூட்டுத் தமனியில் ரத்த உறைவுடன் கூடிய ஒரு பெரிய ரத்தநாள அழற்சி இருப்பது தெரிய வந்தது. அவரது தொடையில் தொடைத்தமனி இல்லாததும் கண்டறியப்பட்டது.

இடுப்பு மூட்டுத் தமனியானது, முழங்கால் வரை கீழ்நோக்கிச் செல்வதும் மற்றும் காலிலுள்ள தமனிகளோடு இணைந்திருப்பதும் ஆஞ்சியோகிராம் சோதனையில் அறியப்பட்டது. அவரது கால் பகுதியில் ரத்த ஓட்ட பராமரிப்புடன் ஒரு ஹைபிரிட் மருத்துவ செயல்முறை இந்நோயாளிக்கு செய்யப்பட்டது. பிறழ்வுள்ள தமனி மற்றும் குருதிநாள அழற்சியை ஓர் அடைப்பானைப் பயன்படுத்தி அடைத்ததோடு ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர், படிப்படியாக குணமடைந்த அவர், தற்போது வலியில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளார்” என்றார்.
இந்த நோய் பாதிப்பு குறித்து காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், ``இந்தக் குறைபாடு, லட்சத்தில் ஒருவருக்கு நிகழ்வதுண்டு. இப்பாதிப்பில் அறிகுறிகள் அரிதாகவே வெளிப்படும். ரத்தநாள அழற்சி உருவாக்கத்தில் தமனியின் சுவர் பலவீனமடையும்போது இயல்புக்கு மாறான பெரிய வீக்கம் ஏற்படுவது மற்றும் காலில் ரத்த ஓட்டக்குறைவு ஆகிய சிக்கல்கள், இதனால் ஏற்படும்.

காலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்; காலை அகற்றும் நிலை கூட ஏற்படலாம். நோய்க்கான காரணத்தை அறியும் செயல்பாடு மிகச்சரியாக செய்யப்பட்டதால் இந்தப் பிறவிக்குறைபாடுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடிந்தது” என்றார்.