
வாழ்வியல் - 16
உலகுக்கே உன்னதமான உணவுப்பழக்கங்களைக் கற்றுத்தந்தவர்கள் தமிழர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பாரம்பர்ய உணவுகள், நோய் தீர்க்கும் நல்ல மருந்துகளாகத் திகழ்ந்தன. ‘எதைச் சாப்பிட வேண்டும்’ என்பதை மட்டும் சொல்லாமல், அதை, ‘எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும்’ என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்தது நம் தமிழர் மரபு. உலகமயமாக்கலால் வெளிநாடுகளின் வணிக ஆதிக்கம் பெருகிவரும் இன்றைய சூழலில், உணவு மிகப்பெரிய ஆயுதமாகிவருகிறது. ‘காலையில் இட்லிக்குச் சட்னி சேர்த்துக்கொள்ளலாமா?’, ‘மதிய உணவுக்குத் தயிர் சாப்பிடலாமா?’ என்பதையெல்லாம், எங்கோ இருக்கும் மேற்கத்திய நாட்டின் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் முடிவுசெய்யும் நிலைமை வந்துவிட்டது.
நம் முன்னோரின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்றால், துணை உணவாகச் சட்னி, துவையல், மசியல் போன்றவை இருந்தன. அந்த வரிசையில் நம் முன்னோர் பின்பற்றி வந்த உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம்பிடித்தது துணை உணவுகளில் ஒன்றான ஊறுகாய். ஆனால், அந்த ஊறுகாய்தான் இன்றைக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளில் முதன்மை இடத்தில் இருக்கிறது. தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ் எனப் புதுவித வண்ண வண்ண சாஸ்களின் வரவால் ஊறுகாயின் மவுசு இறங்கிவிட்டது.

குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத காலத்தில், எதிர்காலத் தேவைக்காக உணவைப் பதப்படுத்திவைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட வழிமுறைதான் ஊறுகாய். நார்த்தங்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, மாங்காய்... என ஏதோ ஒரு காயை சிறு துண்டுகளாக நறுக்கி, நிறைய உப்பு சேர்த்து, தாளித்தப் பொருள்களைக் கலந்து, எண்ணெய் ஊற்றிச் சில நாள்கள் வைத்திருந்தால் ஊறுகாய் தயாராகிவிடும். இதைத் தனியாக ஒரு ஜாடியில் வைத்திருந்தால் போதுமானது. எந்த தட்பவெப்பநிலையிலும் தாக்குப்பிடிக்கும். கைப்படாமல் வைத்திருந்தால், நீண்ட நாள்கள் கெட்டுப் போகாது. தாளிப்பது அதிலுள்ள சத்துகளைச் சிதையாமல் பாதுகாக்கும். ஊறுகாயிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியா, செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் சேரும் நச்சுகளை அழித்து வெளியேற்றும் வல்லமை பெற்றவை.
ஊறுகாயிலுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் செரிமானக் கோளாறு, மந்தம், மூச்சிரைப்பு, வாயு, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் நெருங்காமல் தடுக்கும். எந்தக் காயில் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறதோ அதைப் பொறுத்து மருத்துவப் பலன்களும் மாறுபடும். உதாரணமாக, நார்த்தங்காய். சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும்
4,448 நோய்களில், 4,000-க்கும் மேற்பட்டவை பித்தத்தால் வரக்கூடியவை. அந்தப் பித்தத்தைத் தணிக்கக்கூடியது நார்த்தங்காய் ஊறுகாய். நெல்லிக்காய் ஊறுகாயிலுள்ள வேதிப்பொருள்கள், கல்லீரல் பாதிப்புகளை குணப்படுத்தக்கூடியவை. உடல் நச்சுகளை நீக்கி, உடலை வலுப்படுத்தும் தன்மைமிக்கவை.
ஊறுகாய்... தவிர்க்க வேண்டிய உணவா?

காலங்காலமாகப் பின்பற்றிவந்த உணவு வேண்டாத பொருளானது எப்படி? ஊறுகாயிலுள்ள அதிகப்படியான உப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதிலிருக்கும் எண்ணெய், கொழுப்பைக் கூட்டும் என்பதுதான் ஊறுகாயை மருத்துவர்கள் தவிர்க்கச் சொல்வதற்கான காரணம். ஆனால், தயாரிக்கும் முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களாலேயே ஊறுகாய் தவிர்க்க வேண்டிய உணவாகிவிட்டது. ஊறுகாயில் அதிக உப்பு இருப்பது உண்மை. ஆனால், முன்பெல்லாம் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட உப்பு, கடலிலிருந்து நேரடியாகக் கிடைத்த உப்பாக இருந்தது. அவற்றில், சுமார் 90-க்கும் மேற்பட்ட நுண் தாதுக்கள் நிறைந்திருந்தன. நவீன முறையில் தூள் உப்பைத் தயாரிக்கும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துவிடுகின்றன.
சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ஏழு தாதுக்களில் முக்கியமானது, கொழுப்பு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடியது. எலும்பு இணைப்புகளிலுள்ள திசுக்களுக்கு வழவழப்புத் தன்மையும் ஊட்டமும் தரக்கூடியது. ‘எலும்பு மூட்டுகளின் அசைவுக்கு மிகவும் அவசியம்’ என்கிறது சித்த மருத்துவம். எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்தும் உடலுக்குத் தேவை. எந்த ஒரு தாவர எண்ணெயிலிருந்தும் கொழுப்பு நேரடியாக ரத்தத்தில் கலக்காது. எனவே, எண்ணெய் தவிர்க்க வேண்டிய உணவல்ல. அதனால் நம் பாரம்பர்ய முறைப்படி பதப்படுத்தப்படாத எண்ணெய், ‘பிளீச்’ செய்யப்படாத உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கும் ஊறுகாயை தாராளமாகப் பயன்படுத்தலாம். எனினும், இன்றைய வாழ்க்கைச் சூழலில் அளவோடு உட்கொள்ள வேண்டும்.
சாஸ் சாப்பிடலாமா?
சாண்ட்விச், ஷவர்மா, கிரில்டு சிக்கன், தந்தூரி, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், கட்லெட்... என எந்த உணவைச் சாப்பிட்டாலும், கூடவே இலவச இணைப்பாக, தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ், மயோனைஸ் எனப் பலவகை சாஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இன்றைய தலைமுறையினரில் உணவுக்கு சாஸ் தொட்டுக்கொள்பவர்களைவிட, சாஸுக்காக உணவைச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மயோனைஸின் முக்கிய மூலப் பொருள்கள் முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சைச் சாறு, வினிகர், உப்பு, எண்ணெய் ஆகியவையே. கூடவே சிறிதளவு மிளகு, பூண்டு சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டாலும் அதில் அனைத்து ஊட்டச்சத்துகளும் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கான கொழுப்பு, உப்பு ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன. அனைத்து சாஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, (புளிப்புச் சுவைக்காக) வினிகர், நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காகப் பதப்படுத்தும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் சுவையைத் தவிர வேறு எந்தச் சத்துகளும் இல்லை. அதிக கலோரி கொண்டவை. அதனால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். தினந்தோறும் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணில் தொடங்கி புற்றுநோய்வரை தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். அதனால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
நம் மரபுக்கு ஒவ்வாத இத்தகைய உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நம் பாரம்பர்ய துணை உணவுகளான வற்றல், துவையல், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்டவற்றை முறையாகத் தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால், பல நோய்கள் அணுகாமல் நலமோடு வாழ முடியும்.
தெளிவோம்...
விக்கலை விரட்டும் மருந்து!

உடலில் தோன்றும் பித்தத்தைக் குறைக்க கரும்புச் சாறு அற்புதமான மருந்து. அக்காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கு, கரும்புச் சாற்றை அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறது. உடலில் தோன்றும் எரிச்சலுக்கு, கரும்புச் சாற்றோடு தயிர் அல்லது மோர் சேர்த்துப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். விடாத விக்கல் பாடாய்ப்படுத்தும்போது கரும்புச் சாறு துணை நிற்கும்.