
எதிர்ப்பாலின ஈர்ப்பில்லாத ‘ஏசெக்ஷுவல்’ நிலை... ஏன்?
எதிர்ப்பாலினத்தவர் மீது பாலியல் உணர்வு வராத சிலரும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். இதை ‘ஏசெக்ஷுவல்’ நிலை என்போம். ஆண், பெண் இரு பாலினத்திலும் ஏசெக்ஷுவல் நபர்கள் உண்டு என்றாலும், ஆண்களால் திருமண வாழ்க்கையைச் சுலபமாகத் தவிர்க்க முடியும் அல்லது திருமணத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும். ஆனால், ஏசெக்ஷுவல் பெண்களுக்கு, தங்களின் நிலை குறித்த புரிந்துணர்வு இருக்காது என்பதால் பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும் சமூகத்துக்காகவும் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், தாம்பத்திய உறவு என்ற விஷயத்தில் கணவன் - மனைவி இருவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகிவிடும்.

`ஏசெக்ஷுவல் நிலை என்றால் என்ன... அது உடல் அல்லது மனம் சார்ந்த பிரச் னையா... இதுவும் பாலியலில் ஒரு நிலை தானா...' மனநல மருத்துவர் ஷாலினி விளக்குகிறார்.
“ஏசெக்ஷுவல் நிலை என்பது பிரச்னை யல்ல, பாலியலில் ஒரு நிலை. இந்த நிலை எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது. கடந்த தலைமுறைகளில் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாதவர்களை வற்புறுத்தி, பெற்றோர் திருமணம் செய்து வைத்தாலும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாததால் திருமண உறவை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரியும்.
இன்றைய இளம் தலை முறையினர் மத்தியில், இதுபற்றிய விழிப்புணர்வு மெள்ள மெள்ள வந்துகொண்டிருப்பதால், தனக்கு எதிர்ப்பாலின நபர் மீது ஈடுபாடு வரவில்லை. அதனால் காதலோ, திருமணமோ தேவை யில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறை பெண்களில் சிலர், ‘நான் லெஸ்பியன்’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், லெஸ்பியன் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக் கிறார்கள். ஏசெக்ஷுவல் நிலையிலும் அப்படி நடந்துவிடக் கூடாது. அதை உறுதிப்படுத்த முறையான மருத்துவப் பரிசோதனைகள் இருக்கின்றன அவற்றைச் செய்து பார்த்து ஏசெக்ஷுவல் என்று முடிவானால், அதன்படி தாராளமாக வாழலாம்” என்றவர், அவை குறித்து விளக்க ஆரம்பித்தார்.
``முதலில் சம்பந்தப்பட்ட பெண் களுக்கு டிப்ரெஷன் போன்ற மனம் தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்து, `Obsessive-compulsive disorder' எனப்படும் `ஓசிடி' குறைபாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அடுத்தவர் தொடுவதுகூட பிடிக்காது. இவர்களுக்கு ஓசிடி-க்குத்தான் சிகிச்சை தர வேண்டுமே தவிர, இவர்களை ஏசெக்ஷுவல் நபர்கள் என்று குறிப்பிடக் கூடாது.
ஏசெக்ஷுவல் நபர்கள் என்றாலே அவர்கள் சாமியார்கள் போல இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் எல்லோ ரையும்போல சாதாரணமாகத்தான் தோற்ற மளிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு இல்லையென்பது தெரிந்தபிறகும் அவர்களுடைய புறத்தோற்றத்தின் மீது விருப்பப்பட்டு அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது.
ஏசெக்ஷுவல் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட கணவர்களுக்கு ஒரு வார்த்தை... ‘இவ்ளோ அழகா இருக்கா; அன்பா இருக்கா. ஆனா, கட்டிப்பிடிக்கக்கூட மறுக்குறாளே’ என்கிற தவிப்பில் அவர்களை வற்புறுத்தவோ, வன்முறையாக நடந்து கொள்ளவோ கூடாது. அது அவர்களுடைய பாலியல் நிலைமை. அதற்கு மரியாதை கொடுப்பதுதான் சரி” என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
நிறைவடைந்தது