மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புதிய பகுதி: கருவில் தொடங்குதம்மா...

தாய்மை
பிரீமியம் ஸ்டோரி
News
தாய்மை

இப்படிக்கு... தாய்மை - 01

அன்பால் ஆனது உலகம்... அன்பால் மட்டுமே ஆனது இல்லறம். அப்படிப்பட்ட அன்பான இல்லறத்தின் சாட்சியாக, தூய அன்பின் வெளிப்பாடாக, தாய்மையின் இறைமையாக அவதரிப்பதே அப்பழுக்கற்ற குழந்தைச் செல்வம்! மானிட வார்ப்பு, மற்ற உயிரினங்களிலிருந்து சற்றே விலகி நிற்பதும் இதில்தான். ஏனைய உயிர்களில் இனப்பெருக்கம் என்பது காமத்தின் வெளிப்பாடு. ஆனால், அன்பு கலந்து, இல்லறம் தழைக்க, தலைமுறை காக்க உருவாகும் மானிட வர்க்கம் சற்று வியப்பானது. ஒரு குழந்தையின் உருவாக்கத்திலும் வளர்ப்பிலும் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள், பாடங்கள் அடங்கியுள்ளன. கருவிலேயே தீர்மானமாகிறது ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும். அழகான சமூகத்துக்கு ஆணிவேர் நல்ல குடிமக்கள். நல்ல குடிமக்கள் வேண்டின், நல்ல குடும்பங்கள் உருவாக வேண்டும். நல்ல குடும்பங்கள் உருவாக, நன்மக்கட்பேறு வேண்டும்.

புதிய பகுதி: கருவில் தொடங்குதம்மா...

நன்மக்கட்பேறு

எல்லோரும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், நல்ல குழந்தைகளைப் பெற்றெடுக்க சில மெனக்கெடல்கள் வேண்டும். எந்த மாதிரி மெனக்கெடல், எங்கு தொடங்க, எப்போது தொடங்க, எப்படித் தொடங்க... ஆயிரம் கேள்விகளையும், அவற்றுக்கான விடைகளையும் பல உண்மைச் சம்பவங்களுடன் இந்தத் தொடர் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.

காட்சி 1

நகரத்தின் நடுவே ஓர் அழகிய வீடு. இரவின் தென்றல் சிலுசிலுவென வீசியபடி ரம்மியமாக இருந்தது. நம் நாயகன் ஸ்ரீராமுக்கோ நாடி நரம்புகள் எல்லாம் தளர்வுற்று, உடல் முழுக்க சோர்வாக, எப்போது தூங்கலாம் என்றிருந்தது. யதேச்சையாகப் படுக்கையைப் பார்த்தவனுக்கு பகீர் என்றது. காரணம், படுக்கையின் மேல் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் நோட்டீஸ். இன்று அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வெளியே எட்டிப் பார்த்தவனுக்கு மேனகா இன்னும் சமையலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது. தளர்வாக, அயர்வாக இருந்த அவன் ஒரு நிமிடம் தன்னை உலுக்கிக்கொண்டு, விழிப்புநிலைக்கு வந்தான். விட்டால் அடுத்த கணமே தூங்கிவிட எத்தனித்தவன், மேனகாவின் ருத்ரதாண்டவத்தை எண்ணி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

அந்த மஞ்சள் நோட்டீஸ் வேறொன்றும் இல்லை. ஸ்டிக் நோட்டில் ‘டுடே ஓவுலேஷன்’ என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதாவது, மேனகாவுக்கு இன்று கருமுட்டை வளர்ச்சி முழுமை பெற்றதாக மருத்துவர் உறுதிசெய்து, இருவரும் கட்டாயம் தாம்பத்யம் மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்த நாள்.

இது கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் செயல். மறந்துவிடாமல் இருப்பதற்காகப் படுக்கையில் மஞ்சள் நோட்டீஸ். `மறந்து கண்ணயர்ந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று மேனகா தன் கைப்பேசியில் ஓர் அலாரம் செட் செய்து நடுநிசிக்கு மேல் அடிப்பதற்கு வைத்திருப்பாள். படிப்பதற்குச் சற்றுப் பதற்றமாக இருக்கலாம். தாம்பத்ய உறவு கொள்வதற்கே இவ்வளவு முன்னேற்பாடு என்றால், அடுத்த

15 நாள்களுக்கு இருவரும் ஏதோ ஐ.ஏ.எஸ் பரீட்சை எழுதின மனோபாவத்து டனேயே நாள்களைக் கடத்துவார்கள்.

40 ப்ளஸ் வயதிலிருக்கும் தலைமுறையினருக்கு இதைக் கேட்டால் ஆச்சர் யமாகவும் குழப்பமாகவும் இருக்கலாம். அதற்கும் முந்தைய தலைமுறை யினருக்கு இது புரியவே வாய்ப்பில்லை.

காட்சி 2

நகரத்தின் பிரதான மருத்துவமனை. பரத்தின் மனைவி பானுவின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மருத்துவரின் மேஜைமேல் இருந்தன. அவள் ஆறுமாத கர்ப்பமாக இருக்கிறாள். முதல் குழந்தை. போன வாரம்வரை எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தன. சில ரத்தப் பரிசோதனைகளுக்குப் பின்னர் ஸ்கேன் ரிப்போர்ட் வர, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பானுவை அசையாமல் ஒரே இடத்தில் படுக்கவைத்திருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் மருத்துவர்.

புதிய பகுதி: கருவில் தொடங்குதம்மா...

பரத்தின் தாய், தந்தை, பானுவின் தாய், தங்கை என அனைவரும் சென்ற வாரம்வரை எவ்வளவு குதூகலமாக இருந்தார்களோ இன்று அதற்கு நேரெதிராக பயத்தோடும் வேதனையோடும் தவித்து நின்றார்கள். பானு வீட்டில் முழுநேர வேலை செய்யும் மாலா, புரியாத புதிராக அங்கு நடப்பதை கவனித்தபடி இருந்தாள். அவளுக்கு நான்கு பிள்ளைகள். எல்லோரும் நல்லபடியாகப் பிறந்து, வளர்ந்து, ஆளாகிவிட்டார்கள். பின்னோக்கி நினைவுகளில் நகர்ந்தாள். மூன்றாவது பிரசவத்தின்போது வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டதால், மாலாவின் கணவன் அவளுடன் இல்லை. பிள்ளைகள் அவள் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தனர். வலி வர ஆரம்பித்ததும், தானே தனியாக பஸ் பிடித்து அரசு மருத்துவமனைக்குச் சென்றவள், மூன்றே நாள்களில் குழந்தையுடன் வீடு திரும்பியதெல்லாம் கண்முன்னே படமாக விரிந்தது. ‘நம்மையெல்லாம் எந்தச் சாமி காப்பாத்திச்சோ’ என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டாள்.

காட்சி 3

அன்று சனிக்கிழமை. அந்த அப்பார்ட்மென்ட் முழுக்க குழந்தைகளின் ஆரவாரம். மதுமிதா மட்டும் தன் ஆறு வயது மகன் ரிஷப்பை விளையாட வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள் அவனுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். ஊரிலிருந்து வந்திருந்த மதுவின் சித்தப்பா எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும் அவள் பிடிவாதமாக மறுத்தாள். ‘இவன் ஒரு நாள் கீழே போனா, நான் ஒரு மாசத்துக்கு பஞ்சாயத்துக்காக அசோசியேஷன் மீட்டிங் போகணும். `எதிர் வீட்டுக் குழந்தையைத் தள்ளிவிட்டான்’கிறதுல ஆரம்பிச்சு, `பக்கத்து பிளாக்ல நின்ன சைக்கிள்ல காத்தைப் பிடுங்கிவிட்டான்’, `பார்க்கில் மத்த குழந்தைங்க மேல மண்ணை வாரிப் போட்டான்’னு நூறு கம்ப்ளெயின்ட் வருமுங்க சித்தப்பா. இவனோட நான் வீட்டுக்குள்ள எவ்வளவு மல்லுக்கட்டினாலும் பரவாயில்லை... மத்தவங்களுக்கு பதில் சொல்லி, மன்னிப்பு கேட்டுக்கிட்டிருக்க வேண்டியிருக்காது பாருங்க’ என்றாள். இதற்கிடையே ரிஷப் கார்ட்டூன் சேனலில் மூழ்கிப் போயிருந்தான்.

புதிய பகுதி: கருவில் தொடங்குதம்மா...

சித்தப்பா மனதில் ஆயிரம் கேள்விகள். தன் சிறுவயதில் நண்பர்களோடு வேப்ப மரத்தில் ஏறி உச்சாணியிலிருந்து தவறி விழுந்து கால் உடைந்தபோது, பக்கத்து வீட்டுத் தாத்தாவின் கண்ணாடியை உடைத்து ஆராய்ச்சி செய்தபோது, வீட்டில் அம்மா கை வலிக்கத் தண்ணீர் இறைத்து வைத்திருந்த குடங்களிலெல்லாம் மண்ணைப்போட்டு விளையாடியபோது... இப்படி எண்ணற்ற குறும்புகளைச் செய்திருந்தும், யாரும் நம்மை வீட்டுக்குள் பூட்டி வைக்கவில்லையே என்று அவர் மனம் புலம்பியது.

இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருந்தாலும், பிழைகள் மையமானவையே. இனி ஸ்ரீராமுக்கும் மேனகாவுக்கும் நடுவில் ஒட்டப்படும் மஞ்சள் நோட்டீஸ் விரைவில் மழலையால் கிழிக்கப்படுமா?

பரத்தும் பானுவும் கர்ப்பகாலத்தை நிம்மதியாக எதிர்கொள்ளும் ஆரோக்கிய சூழல் வாய்க்குமா?

ரிஷப்பின் உணர்வுகளை அவன் தாயும் சமூகமும் புரிந்துகொண்டு மனமாற்றம் கொள்வார்களா?

இப்படி நாம் காணும் ஆயிரம் ஆயிரம் காட்சிகளுக்குப் பின்னால் இருப்பவை, நாம் தெரியாமல் பல வருடங்களாகச் செய்துவரும் தவறுகள். அவற்றைக் கண்டுபிடிக்க முயல்வோம். குழந்தைகள் எங்கு தொடங்குகிறார்களோ, அங்கிருந்தே சரிசெய்ய வேண்டியது அவசியம்; நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட.

வருங்காலத்துக்கான தீர்வுகளை நோக்கிப் பயணிப்போம்.

(பகிர்வோம்...)

பலா, கொய்யா, வெள்ளரி... எப்படிச் சாப்பிடுவது?

பலாப்பழம் சாப்பிட்டால் உண்டாகும் மந்த உணர்வைத் தடுக்க, அதனோடு தேன் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

புதிய பகுதி: கருவில் தொடங்குதம்மா...

கொய்யா சாப்பிடும்போது, தொண்டை கரகரப்பதுபோலத் தோன்றினால், இருக்கவே இருக்கிறது மிளகு. வெள்ளரிப்பழம் மற்றும் விளாம்பழத் தசையோடு பனைவெல்லாம் சேர்த்துச் சாப்பிட்டால், சுவைகூடும், வயிற்று உபாதைகள் மறையும்.தகவல்

உதவி: வி.விக்ரம்குமார், சித்த மருத்துவர்