தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நோ மீன்ஸ் நோ!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

பாலியல் மருத்துவர் காமராஜ்

`ஒப்புதல்'... அழகான இந்தத் தமிழ்ச் சொல்லை அடிக்கடிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது உச்சரித்திருப்பீர்கள், அதன் அர்த்தம் தெரியாமலேயே. ஒரு விஷயம் நடப்பதற்கான அனுமதி அல்லது ஒன்றைச் செய்வதற்கான ஒப்பந்தம் என்றுகூட இதைச் சொல்லலாம். ஒப்புதல் என்பதற்கு மரியாதையும் சரியான தகவல் பரிமாற்றமும் தேவைப்படுவது. பெரியவர்களாகிய பெற்றோருக்கு இதன் அர்த்தம் புரியாமலிருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலக் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே ஒப்புதலின் கோட்பாடு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். பெற்றோர், நட்பு, வாழ்க்கைத்துணை, சமூகம் என எல்லா மனிதர்களிடமும் சுமுகமான உறவைத் தக்கவைத்துக்கொள்ள இதுவே அடிப்படை. தன்னுடைய எல்லையை மட்டுமன்றி, மற்றவர்களின் எல்லைகளைத் தெரிந்துகொள்வதும் மதிப்பளிப்பதும்கூட ஒப்புதலில் அடக்கமே.

ஒப்புதலை எப்படிப் புரிந்துகொள்வது?

பாலியல் கல்வியைப் போதிப்பதற்கு முன் பிள்ளைகளுக்கு ஒப்புதல் என்ற வார்த்தையின் மகத்துவத்தைப் புரியவைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இரண்டுக்கும் நிறைய தொடர்புண்டு என்பதே காரணம். பின்வரும் வழிகள் பெற்றோருக்கு உதவலாம்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நோ மீன்ஸ் நோ!

குழந்தைகளின் உடல் என்பது அவர்களின் உரிமை. அவர்களின் உடல் தொடர்பான முடிவுகளை எடுப்பதும் அவர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை என்று புரிய வையுங்கள். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் உட்பட அடுத்தவர்களின் அரவணைப்பு, முத்தம், தொட்டுப் பேசுதல் என எதையும் மறுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்கிற அடிப்படையை இதில் புரியவைக்க வேண்டும்.

அடுத்தவரின் உடல் மொழிகள் உணர்த்தும் விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் அவை உறுத்தும் நேரத்தில் உடனே சுதாரித்துக்கொள்ளவும் குழந்தைகளைப் பழக்க வேண்டும். உதாரணத்துக்கு யாரோ ஒருவர் குழந்தையை உரசும்படி நிற்கலாம் அல்லது உட்காரலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உடனே சில அடிகள் விலகிச்செல்ல வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமை.

தங்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தும் எந்தச் சூழலையும் அனுமதிக்கக் கூடாது என்றும், உடனடியாக அதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.

இது சரியில்லை, ஏதோ தவறாகத் தெரிகிறது என தர்மசங்கடமாக உணரும் தருணங்களைப் பற்றி உடனே குரல் கொடுக்க வேண்டும் எனச் சொல்லுங்கள்.

குழந்தை யாரையாவது கட்டிப் பிடிக்கவோ, முத்தமிடவோ விரும்பினாலும் அதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்றும் சொல்லுங்கள்.

அடுத்தவர்கள் சொல்லும் ‘நோ’க்களுக்கு மரியாதை கொடுக்க குழந்தைகளைப் பழக்க வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் குழந்தை தன் நண்பருடன் வன்முறையான விளையாட்டில் ஈடுபட்டிருக்கலாம். அப்போது அந்தக் குழந்தை அதை நிறுத்தச் சொல்லலாம். அதற்கு உடனே மதிப்பு கொடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்

தன் அந்தரங்கத்தை மதிக்கவும் காப்பாற்ற வும் வேண்டியதன் அவசியத்தை மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். ஆன்லைன் பாதுகாப்பு இதில் மிகவும் முக்கியம்.

இணையதள தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அவற்றின் மூலம் உருவெடுக்கும் உறவுகள் விஷயத்திலும் ஒப்புதல் மிக மிக முக்கியம். குறிப்பாக அடுத்தவருக்கு அனுப்பும், அடுத்தவரிடமிருந்து பெறும் குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள் இத்யாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஏதேனும் புகைப்படத்தையோ, வீடியோ வையோ, பர்சனல் தகவல்களையோ மற்றவருடன் பகிரக் கூடாது என்றும், அவசியமான தருணங்களில் பெற்றோரின் சம்மதத்துடன் பாதுகாப்பாகப் பகிர வேண்டும் என்றும் சொல்லித்தர வேண்டும்.

ஸ்பரிசம்... ஓகேவா, இல்லையா?

தொடுதலின் மூலம் ஒருவர் மற்றவருடன் சுலபமாகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்வது வழக்கம். தொடுதல் என்பது அழகான ஓர் உணர்வு. நாம் மற்றவரின் அன்புக்கும் அக்கறைக்கும் உரியவராக இருக்கிறோம் என்பதை உணர்த்தக்கூடியது. (அரவணைப்பது, முத்தமிடுவது, முதுகில் தட்டிக்கொடுப்பது, ஹைஃபைவ் என எல்லாம் இதில் அடக்கம்). ஆனாலும் இந்தத் தொடுதலின் நோக்கம் நல்லதா, அல்லதா என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். தவறான ஸ்பரிசம் என்று உணர்ந்தால் உடனே அதை எதிர்க்கவும் தொடரவிடாமல் தடுக்கவும் குழந்தைகள் துணிய வேண்டும்.

இந்தக் கருத்தின் பின்னணி சொல்லும் ஐந்து விஷயங்கள்.

1. உன் உடல் உன் உரிமை!

குழந்தையின் உடலைப் பார்க்கவும் தொடவும் யாருக்கும் அனுமதியில்லை. தவறான ஸ்பரிசங்கள் அனுமதிக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல, குற்றமும்கூட. குழந்தையின் சிறுவயதிலிருந்தே அவர்களின் உடல் உறுப்புகளைச் சரியான பெயர்களோடு கற்றுத் தருவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம். அந்தரங்க உறுப்புகள் எவை என்ற புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும். `நோ' சொல்லவும், அடுத்தவர்சொல்லும் `நோ'வை மதிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

2. பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பற்ற, அசௌகர்யமான சூழல்களில் இருக்கும்போது அவற்றை அடையாளம் கண்டு உடனே வெளிப்படுத்துவது...

சில நேரங்களில் ஸ்பரிசம் தவறானது எனத் தெரிந்தாலும் அதைச் சில குழந்தைகள் ரசிக்கலாம், அனுமதிக்கலாம். உள்ளுணர்வுக்கு அது தவறென்றுபட்டால் உடனே எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தை யும் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

3. நம்பகமான நபராக இருத்தல்

குழந்தைகள் தாம் சொல்ல நினைக்கிற, பகிர நினைக்கிற அனைத்துக்கும் நம்பிக்கைக்குரிய நபராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் நம்பகத்துக்குரிய நபர்கள் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ, நெருங்கிய குடும்ப நண்பர்களாகவோ, அக்கம்பக்கத்து வீட்டாராகவோ, ஆசிரியராகவோ, பயிற்சி யாளராகவோ இருக்கலாம்.

4. ஸ்பரிசத்தில் ரகசியமில்லை

தொடுதலில் ரகசிய தொடுதல் என எதுவுமில்லை. பதற்றத்துக்கோ, பயத்துக்கோ, அசௌகர்யத்துக்கோ, மன அழுத்தத்துக்கோ உட்படுத்தும் எந்த ரகசியமும் நல்லதல்ல என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். அப்படிப்பட்ட ரகசியங்களைப் பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரிய பெரியவர் களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லித்தர வேண்டும்.

5. குழந்தைகளின் மேல் நம்பிக்கை வையுங்கள்

தன்னை யாரோ தொட்டதாகவோ, தவறான எண்ணத்துடன் அணுகியதாகவோ, அப்படி நடத்தப்பட்டதாகவோ குழந்தை சொல்லும்போது அதை நம்புங்கள். எதனால் குழந்தை அப்படி உணர்ந்தது என்று பேசித் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் பேச்சை நம்பிக் கேளுங்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

பாலியல் தொடர்பான விஷயங் களிலும் ஒப்புதல் என்பதற்கான முழுமையான அர்த்தம் குழந்தை களுக்கு விளக்கப்பட வேண்டும். பாலியல் தொடர்பான செயல்கள் (முத்தமிடுவது, தொடுவது, அணைப்பது, உறவுகொள்வது என அனைத்தும்) இரு தரப்பினரின் ஒப்புதலின் பேரிலேயே நிகழ்த்தப்பட வேண்டியவை என்பதைப் பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இது பின்பற்றப்பட வேண்டும்.

மேற்சொன்ன விஷயங்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது முழுக்க முழுக்க தனிநபர் சம்பந்தப் பட்ட உரிமை என்ற தெளிவும் அவர் களுக்கு வேண்டும். பின்னாளில் பாலியல் துஷ்பிரயோகங்களைத் தவிர்ப்பதற்கு இந்தப் புரிந்துணர்வு உதவும்.

இதைப் பிள்ளைகளிடம் எப்படிப் பேசுவது?

உங்கள் குடும்ப மதிப்பீடுகளையும், பாலியல் சுதந்திரம் தொடர்பான உங்கள் குடும்பத்தினரின் பார்வையையும் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.

அந்தரங்க எல்லைகள் பற்றி சொல்லுங்கள். அந்த எல்லை எதுவரை என்பதை உணரச் செய்யும் விதமாக உங்கள் குழந்தைகளையே சில சூழல்களைக் கற்பனை செய்து பார்க்கச் சொல்லுங்கள்.

பாலியலில் ஒப்புதல், வற்புறுத்தல், துன்புறுத்தல், தாக்குதல் எனப் பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். இவற்றைப் பற்றி குரல் கொடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டென்பதையும், அதைக் கேட்க நீங்கள் தயாராக இருப்பதையும் புரியவையுங்கள்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதால் ஏற்படும் சட்ட, சமூக, உணர்வுரீதியான சிக்கல்களையும் எடுத்துச் சொல்லுங்கள்.

`நோ மீன்ஸ் நோ' என்பதைச் சிறுவயதிலேயே குழந்தைகளின் மனத்தில் பதியவையுங்கள்.