
கூடற்கலை
`காலம் தாண்டிக் கிடைக்கும்போது
காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெல்லம் கசந்து போகும்
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு...’
- கவியரசர் கண்ணதாசன்
அண்மையில்தான் அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடந்திருந்தது. ஆனால், பார்ப்பதற்கு 50 வயதுக்குள் இருப்பவர் போன்ற தோற்றம். எத்தனையோ இளைஞர்கள் தங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் குறைபாடுகள், பிரச்னைகளுக்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், வயதானவர்கள் `அந்த’ப் பிரச்னைக்காக என்னைத் தேடி வருவது அரிது. பொலிவான அவரது தோற்றம் வசீகரிக்கும்படி இருந்தது. ``டாக்டர், எனக்கு ரொமான்டிக் மூடு கொஞ்சம் அதிகம். கல்யாணமான புதிதில் மனைவியுடன் அவ்வளவு நெருக்கமாக இருப்பேன். அதற்கு அவள் ஒருபோதும் என்னிடம் மறுப்பு தெரிவித்ததில்லை. இப்போது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எனக் காரணம் சொல்லி விலகிவிடுகிறாள். யாரும் இல்லாத நேரத்தில் அழைத்தாலும், என்னைத் தவிர்க்கிறாள். `உங்களுக்குக் காம உணர்வு அதிகமாக இருக்கிறது. இந்த வயதுக்கு இது தேவையில்லை. ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெறுங்கள்’ என்று அட்வைஸ் செய்கிறாள். அவளது திருப்திக்காகத்தான் வந்தேன். நான் என்ன செய்யட்டும் டாக்டர்?” என்றார் அவர்.

``உங்கள் மனைவிக்குத்தான் கவுன்சலிங் தேவையே தவிர, உங்களுக்கு இல்லை’’ என்றேன். பிறகு அவர் மனைவியை வரவழைத்து கவுன்சலிங் கொடுத்தேன். இனி, 70-ம் கல்யாணமே முடிந்தாலும், அந்தத் தம்பதியருக்குத் தாம்பத்யத்தில் சிக்கல் ஏற்படாது. தாம்பத்யத்துக்கு வயது ஒரு தடை இல்லை. 20 வயதில் நன்றாக சாப்பிட்ட ஒருவரால், 60, 70 வயதுகளில் அதே அளவு சாப்பிட முடியாதுதான். ஆனால், சாப்பிடாமலேயே இருக்க மாட்டார் அல்லவா... அதைப்போலத்தான் தாம்பத்ய உணர்வும்; மனமிருந்தால் போதும். `தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க, நீங்கள் வயதளவில் மட்டும் இளைஞராக இருக்கத் தேவையில்லை’ என்பதை மையமாகவைத்து பிரபல எழுத்தாளர்
ஈ.எல்.ஜேம்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். `பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே’ (Fifty Shades of Grey) என்ற அந்தப் புத்தகம், இளைஞர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தரப்பையும் சேர்ந்த பலரின் அந்தரங்க வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியது.
உடலுறவு உயிரோட்டமானது. உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. 20 வயதுகளில் இருந்த உடலமைப்பும் ஆர்வமும் இல்லாமல் போனாலும், வயதும் அனுபவமும் வலிமையையும் தைரியத்தையும் கூட்டியிருக்கும். இள வயதுக் கற்பனைகளோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல் அல்லது குறைந்து போயிருந்தாலும், நமக்கு என்ன பிடிக்கும் என்பதில் தெளிவு ஏற்பட்டிருக்கும். வயதாகும்போது, உடலுறவு குறித்த கற்பனைகளில் மாற்றம் அவசியம். கொஞ்சம் கற்பனைத்திறனும் கலந்துரையாடலும் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக்கும்; சுவாரஸ்யம் கூட்டும்.

தாம்பத்யம் சுவாரஸ்யமாக…
பளிச்சென இருக்கும் விளக்குகளைவிட, குறைவான ஒளிகொண்ட விளக்குகள் செக்ஸ் கிளர்ச்சியை உண்டாக்கக்கூடியவை. அதிலும், மெழுகுவத்திகள் ரொமான்டிக் உணர்வைக் கொடுப்பவை. அதிக வெளிச்சத்தில் சாதாரணமாகத் தெரியும் அழகு, மெழுகுவத்தி வெளிச்சத்தில் அதீத அழகாகத் தெரியும்.
மெனோபாஸ் நேரத்தில், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். அந்த நேரத்தில் மட்டும் ஏதேனும் உயவு சாதனங்களைப் பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாதபட்சத்தில், ஹார்மோன் தெரபி எடுத்துக்கொள்ளலாம்.
நாம் நாமாக இருப்பதுதான் இருப்பதிலேயே செக்ஸியான விஷயம். எனவே, உறவின்போது நமக்கு நம்மிடம் என்ன பிடிக்குமோ அதைச் செய்ய வேண்டும். பிடித்ததுபோல, தலைமுடியை அலங்கரித்துக்கொள்ளலாம். வாசனைத் திரவியம் பயன்படுத்தலாம். புதிய, அழகிய உள்ளாடைகள் அணிவதுகூட சந்தோஷச் சாரலை அதிகரிக்கும்.
தாம்பத்யத்துக்கு முன்னரும் பின்னரும் உறவு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் பேசுவது, அந்தச் சுகத்தை இன்னும் நீட்டிக்கும். ஏதாவது நெருடலான விஷயம் இருந்தாலோ, பிடிக்காமலிருந்தாலோ அதைப் பற்றிப் பேசுவது அந்தச் சிக்கலைத் தவிர்க்க உதவும்.
வயதாகும்போது எழுச்சியோடு செயல்பட முடியாத ஆண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
தாம்பத்யத்தின்போது, கவலை இல்லாமலும், மனம் இலகுவாகவும் இருக்க வேண்டும். நெருடல்கள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய வெளியிடங்களுக்குச் செல்லுதல், ஹோட்டலில் பிடித்த உணவுகளைச் சாப்பிடுதல், இசை கேட்டல், சினிமா பார்த்தல் என நம் மனநிலையை மாற்றும் எதையாவது செய்யலாம்.
உடலுறவு நேரம் தவிர மற்ற நேரங்களிலும் இணையுடன் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம். தொட்டுப் பேசுதல், அவ்வப்போது சில்மிஷங்கள் செய்தல் நல்ல பலன் தரும். ஒன்றாகக் குளிக்கலாம்; மசாஜ் செய்துவிடலாம்; கைகளைப் பிடித்துக்கொண்டு பேசலாம்; நெட்டி முறித்துவிடலாம். உங்கள் இணையின் உடலைத் தொட்டபடி இருக்கும் எந்தச் செயலையும் நீங்கள் செய்வது நல்ல பலன் தரும்.

ஐம்பது வயதை எட்டியவர்களுக்கு, இளமையில் இருந்ததைப்போல உடல் ஒத்துழைக்காது. எனவே, `செக்ஸ் முன் விளையாட்டுகள்’ எனப்படும் ஃபோர்பிளே மிக அவசியம். இதனால், உறவின்போது இணையின் உடல் இலகுவாகி, நல்ல பொசிஷன் கிடைக்கும்.
ஓய்வு பெற்ற பிறகு, பகல் வேளையில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. தாம்பத்யத்துக்கு ஏற்ற நேரம் இரவு மட்டுமல்ல. பகலில் உறவுகொள்வது புது சுகத்தையும் புரிந்துணர்வையும் தரும். ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் உறவில் ஈடுபடுவது, சுவாரஸ்யத்தைக் கூட்டும்.
வாழ்க்கையில் அடுத்தகட்டத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ பெரிய கவலை இல்லாமல் இருக்கும்போதுதான், பலரும் நெருக்கத்தையும், உடலுறவில் அதிகமான இன்பத்தையும் பெறுகிறார்கள். அதாவது, கமிட்மென்ட்கள் இல்லாத அந்தக் காலகட்டம் தாம்பத்யத்தில் ஈடுபடுவதற்குப் பொன்னான நேரம். தற்போது 30, 40 ப்ளஸ் வயதுகளில் இருப்பவர்களும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. `நமக்கென்ன... நன்றாகத்தானே இருக்கிறோம்?’ என்ற அலட்சியம் கூடாது. நாளை நமக்கும் ஐம்பதும் வரும்... ஆசையும் வரும்!
- கற்போம்...