Published:Updated:

கர்ப்பத்துக்கு முன் தம்பதி உடல், மனரீதியாகத் தயாராக வேண்டும்!

preganancy
News
preganancy

பிஞ்சுக் குழந்தையின் வளர்ச்சி நல்ல முறையில் தொடரும்போது, அது அந்தக் குழந்தையின் அஸ்திவாரத்தை ஆயுளுக்கும் அழகாகச் செதுக்கும். அடுத்த தலைமுறைக்கு அது வரம்! ஆம், அந்த மாதிரி நாள்கள் மீண்டு(ம்) வரவேண்டும்.

Published:Updated:

கர்ப்பத்துக்கு முன் தம்பதி உடல், மனரீதியாகத் தயாராக வேண்டும்!

பிஞ்சுக் குழந்தையின் வளர்ச்சி நல்ல முறையில் தொடரும்போது, அது அந்தக் குழந்தையின் அஸ்திவாரத்தை ஆயுளுக்கும் அழகாகச் செதுக்கும். அடுத்த தலைமுறைக்கு அது வரம்! ஆம், அந்த மாதிரி நாள்கள் மீண்டு(ம்) வரவேண்டும்.

preganancy
News
preganancy

`தீதும் நன்றும் பிறர் தர வாரா!'

ஆயிரம் விளக்கங்களைக் கொண்ட இந்தப் புறநானூற்றுப் பாடல் வரியை உணராமல், காலங்காலமாக நம் வாழ்க்கைக் கோளாறுகளுக்கு அடுத்தவர்களையும், சூழ்நிலைகளையும் குறைகூறிக்கொண்டே இருப்பவர்களாக வாழ்ந்து மடிகின்றோம். நாம் வாழும் வாழ்க்கை, உடல்நலம், குழந்தைச்செல்வம், பொருளாதார நிலை என இப்படி அனைத்தும் நம் கையில் மட்டுமே உள்ளது என்று புரிந்துகொண்டாலே வாழ்வு எளிதாகிவிடும்.

இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில், நாம் பார்த்த கதாபாத்திரங்கள் பானு மற்றும் பரத் ஆகியோரின் இன்பமயமான கர்ப்பகால நிகழ்வில் திடீரென புயல் வரத்தொடங்கியது. மருத்துவர்களின் அறிவுரையால் ஏதும் புரியாதவர்களாக மொத்தக் குடும்பமும் குழம்பி நிற்பதைப் பார்த்தோம்.

கர்ப்பம்
கர்ப்பம்

பொதுவாகவே `கர்ப்பமா இருக்கேன்' என்ற வார்த்தைகள் போதும், நம்மைச் சுற்றியுள்ள அத்துணைப் பேரும் மருத்துவர்போல அவதாரம் எடுத்துவிடுவார்கள். தங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லி, கேட்பவர்களை ஒருவித தவிப்பிற்கு ஆளாக்குவதில் இந்தச் சமூகம் பிரசித்தி பெற்றது. 'டாக்டர்கிட்டே போனியா?' என்பதில் ஆரம்பித்து, 'இப்போ நீ ரெண்டு ஆள், நல்லா சாப்பிடணும்', 'இப்படி உட்காரவே கூடாது', 'ரொம்ப நேரம் நடக்கக் கூடாது', 'இடதுபக்கம் மட்டுமே சாய்ந்து தூங்கணும்', 'பப்பாளி மட்டும் ஆகவே ஆகுது',

'இப்படி செஞ்சா உள்ள இருக்கிற குழந்தைக்குக் கொடி சுத்திக்கும்', 'ஆறு மாசத்திலே வயிறு இவ்வளவு சின்னதா இருக்கே', 'இப்படிச் செய்தா கண்டிப்பா சுகப்பிரசவம்தான்!'

அப்பப்பா! இப்படி ஒரு புத்தகம் போடும் அளவுக்கு அறிவுரைகள். இவற்றுக்கெல்லாம் மேலாக, இந்த நவயுகத்தில் நம் பெண்களுக்கு முதல் கடவுள் நம் கூகுள் ஆண்டவர். அவரிடம் தேடினால் இன்னும் ஆயிரத்து சொச்சம் அறிவுரைகள். ஆக எந்த அறிவுரையை எப்போது, எப்படி, எதற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்பதில் வரும் அடுத்தகட்ட சிக்கல்.

குழப்பம் ஆகாமல், எதற்கும் பதற்றப்படாமல், எப்போதும் பயம் இல்லாமல், எளிமையாய், இயல்பாய், தெளிவாய், இலகுவாய் ஒரு கர்ப்பம் உருவாகி, பானுவிற்கு ஏற்பட்டதைப்பேல ஏதும் நிகழாமல், அந்த கர்ப்பமானது அழகாய், அமைதியாய் நகர்ந்து ஆரோக்கியமான தாய் சேய் நலன் வாய்ப்பது என்பது, அந்தக் காலம்போல் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அதற்குச் சில முயற்சிகள் இருக்கும்போது, முதல் சில ஆண்டுகளுக்கு அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வளர்ச்சி நல்ல முறையில் தொடரும்போது, அது அந்தக் குழந்தையின் அஸ்திவாரத்தை ஆயுளுக்கும் அழகாகச் செதுக்கும். அடுத்த தலைமுறைக்கு அது வரம்! ஆம், அந்த மாதிரி நாள்கள் மீண்டு(ம்) வரவேண்டும்.

ஓர் உயிரை எந்தவிதமான குறையும் இல்லாமல் சிருஷ்டித்து இந்த உலகிற்கு அனுப்பும் ஓர் உன்னதமான தருணம் கர்ப்பகாலம். அப்படி நடப்பின் அது ஒரு மென்மையான சமுதாயப் புரட்சி. ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வித்திடும் ஒரு புதுமையான முயற்சி.
கர்ப்பம்
கர்ப்பம்

இறை நம்பிக்கை உள்ளோர் கோயில்களின் கருவறையை எப்படி உணர்வார்களோ அதற்கு நிகரானதுதான் தாயின் கருவறை. ஆனால் இந்தக் கருவறையின் சுவாரஸ்யமும், கர்ப்பகாலத்தின் மகிமையும் மேலோட்டமாக மட்டுமே இன்னும் நம் சமூகத்தில் பார்க்கப்படுவதாய் உணர்கிறேன். பயம் மற்றும் மூடநம்பிக்கை சார்ந்து இன்னும் எண்ணற்ற கருத்துகளும் உலவுகின்றன. சற்று ஆழ்ந்து, கூர்ந்து நோக்கவேண்டிய விஷயமாக இந்த கர்ப்பகாலம் இருக்கிறது. இதில் இந்நாள் வரை அறியப்பாடாமல் உள்ள சில பல அதிசயத் தகவல்கள் அறிவிக்கப்பட, பயணிப்போம் நம் கதாபாத்திரங்களின் வாயிலாக இக்கட்டுரையில்.

மனித மனம் எப்போதும் ஒன்றை ஒன்றோடு ஒப்பீடு செய்துகொண்டே இருக்கும் ஒருவித கருவி. இங்கும் நம் கதாபாத்திரங்கள் பானு மற்றும் சீதா பற்றி அப்படி ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு நடக்கிறது வாருங்கள். பானு திருமணத்திற்கு முன்னர் இருந்தே வேலைக்குப் போகும் பெண். சரியான ஓய்வு, அமைதியான நாள்கள், சரிவிகித உணவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் வேலை பார்க்கும் அவசரயுகப் பெண். அவள் அண்டை வீட்டில் சீதா என்ற குடும்பத்தலைவி. அப்படியே எதிரான வாழ்க்கை முறையில் வாழும் பெண். மிக சாந்தமான இல்லத்தரசி. இருவரின் வீட்டிலும் வீட்டு வேலைபார்ப்பது ஒருவரே. அது நம் இரும்புப் பெண் மாலா. எதிர்வீடும் அண்டை வீடுமாய் சைலஜா மற்றும் கல்பனா.

வீட்டுவேலை செய்யும் மாலா அடிக்கடி பானு வீட்டில் நடப்பதை வந்து சீதாவிடம் சொல்வது வழக்கம். அதைக் காதுகொடுத்து சீதா கேட்காவிட்டாலுமேகூட மாலா தனியாகப் புலம்பிக்கொண்டே வேலை செய்வாள். 'அக்கா... பானுக்கா தோசைமாவு வெளியேதான் வாங்கிங்கிறாங்க. ஒருநாள்கூட வீட்டில் கிரைண்டரில் அரைக்கிறதே இல்ல', 'எப்பவுமே பானு அக்காவும் பரத் சாரும் ஜீன்ஸ் பேன்ட்தான் போடறாங்க. அதைத் துவைக்கிறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு', 'பானு அக்கா அடிக்கடி ஏதோ மாத்திரை சாப்பிட்டுக்கிட்டே இருக்கு, உடம்புக்கு என்னான்னு தெரியலே, கேட்டாலும் சொல்லாது', 'எப்பவும்போல நேத்து ராத்திரியும் ரெண்டு பேரும் வெளியேதான் சாப்பிட்டுட்டு வந்தாங்க, அதனால இன்னிக்கு பாத்திரம் எதுவும் இல்ல' - இப்படி நூறு விஷயங்களைச் சொல்வாள். சீதா அதையெல்லாம் பலநேரங்களில் காது கொடுத்துக்கூடக் கேட்க மாட்டாள். ஆனால் மனதிற்குள் ஒரு பிம்பம் அந்தக் குடும்பம் பற்றி அவளுக்கு உருவானது.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் பானு கர்ப்பமாக இருப்பதையும் குடும்பமே குதூகலித்த விஷயத்தையும் சொல்லி இருந்தாள் மாலா. சில வருடங்களாக எதிர் எதிர் வீட்டில் வசித்தாலும், பானுவும் சீதாவும் பார்த்துப் பேசிக்கொண்ட நாள்கள் மிகக் குறைவு. எப்போதாவது பார்த்தால் ஒரு சின்ன புன்னகையோடு நகர்ந்துவிடுவாள் பானு. 15 நாள்களுக்கு மேலாக வெளியூர் சென்று வந்த சீதாவிடம், பரபரப்பாகச் சொல்ல ஓடி வந்தாள் மாலா. என்ன என்று கேட்பதற்கு முன், பானுவின் கர்ப்பத்தில் ஏதோ பிரச்னை என்றும், டாக்டர்கள் பானுவை ஒரே இடத்தில் அசையாமல் இருக்கச் சொல்லி விட்டதாகவும் கவலையுடன் சொல்லி பெருமூச்சு விட்டாள். சீதாவிற்கு ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. மனதிற்குள் மட்டும் வேண்டிக்கொண்டாள், நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று.

கர்ப்பம்
கர்ப்பம்

இங்கு நடப்பதையெல்லாம் சைலஜாவும் கல்பனாவும் தினமும் கவனித்துப் பேசிக்கொள்வது வழக்கம். அப்படி இருவரும் இன்று ஆசுவாசமாக அமர்ந்து அண்டைவீட்டு நடப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் சீதா மிகவும் பரிச்சயமானவர், பானு பற்றி யாருக்கும் பெரிய அபிப்ராயம் கிடையாது. எல்லோருமே சீதாவிடம் மிக அன்பாக இருப்பார்கள், அதுமட்டுமன்றி அவளின் இரண்டு மகள்களையும் அந்த அப்பார்ட்மென்டே மெச்சும். அதிலும் இரண்டாவது குழந்தையை மெய் சிலிர்த்து பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.

சீதாவின் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. ஆக கல்பனா எப்போதும் சீதாவை நல்லபடியாக விசாரிப்பதும், வேண்டிய விஷயங்களைச் செய்து தருவதும் உண்டு. எப்போதும் அவர்கள் அனைவரும் சீதாவை ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். குழந்தைகளை வளர்க்கும் விதம், உணவிற்கும், உடல்நலத்திற்கும், உறவுகளுக்கும் அவள் கொடுக்கும் முக்கியத்துவம் எல்லாமும் மிக ஆச்சர்யமாக இருக்கும். இப்படியான நேரத்தில் சைலஜா எப்போதும் சீதாவிடம் சொல்வது, 'உன் குழந்தைகள் மாதிரி இருந்தா பத்துக் குழந்தை வளர்த்திடலாம் சீதா. நீ ரொம்ப லக்கி' என்பதுவே. அவர் மட்டுமல்ல... சீதாவின் நட்பு வட்டாரத்தில் உள்ள பலரும் சொல்லும் வார்த்தைகள் இவை.

இரண்டாவது மகளுக்கு மூன்றரை வயது. இப்போதே ஒவ்வோர் இடத்திலும் அவள் தனித்துவம் மிகுந்தவளாய்த் திகழ்கிறாள்! ஆசிரியர்கள், உறவினர்கள், வீட்டில் பெரியவர்கள், வெளி இடங்களில் பார்க்கும் அனைவருக்கும் ஒரே மாதிரி ஆச்சர்யப்படும் காரணிகள் - எப்படி இப்படி இருக்கா? அபாரமான சிந்தனை, அளவுகடந்த தெளிவு, எதையும் உற்றுநோக்கும் திறன், அனைத்தையும் நொடியில் கற்கும் சாமர்த்தியம், எல்லா மனிதர்களிடமும் சகஜமாகப் பழகும் பாங்கு, எந்த இடத்திலும் அனுசரிக்கும் குணம், நல்ல உடல் நலம், எவ்வளவு தூரப் பிரயாணங்களும் அவளுக்கு ஆனந்தமே, தைரியமான உடல்மொழி, எளிதில் எல்லோரிடமும் பாசமாகப் பழகும் விதம், ஓயாத கேள்விகள், பலநேரங்களில் சகோதரிக்கும், தாய் தந்தைக்கும் அறிவுரை கூறும் பாங்கு... அப்பப்பா... இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தனைக்கும் பின்னால் இருப்பவை என்ன?

கல்பனா பல வருடங்களாக சீதாவின் குடும்பத்தோடு நெருக்கம் கொண்டவள். ஆனால், சைலஜாவிற்கு சீதா பற்றி எதுவும் தெரியாது, இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இந்த அப்பார்ட்மென்ட்டுக்குக் குடிவந்தவள். அவள் 'லக்கி' என்று அடிக்கடி சீதாவைப் பார்த்துச் சொல்வதைக் கேட்டு கல்பனா, சீதாவின் கடந்தகால விஷயங்களை சைலஜாவிடம் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினாள்.

ஆனந்தி ரகுபதி
ஆனந்தி ரகுபதி

முதல் குழந்தை பிறந்த சமயம் சீதாவிற்குப் பெரிதாக அலைச்சல் இல்லை, உடல் உபாதைகள் எதுவும் இல்லை. நல்ல முறையில் குழந்தைப் பேறு நிகழ, குழந்தை அழகாக, எல்லாக் குழந்தைகளைப்போலவே வளர்ந்தாள். ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது குழந்தை வேண்டும் என்று தோன்றியபோது, சீதா சற்று பலவீனமானவளாக இருந்தாள். ஆனால் ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தயாராக வேண்டி சில மாதங்கள் தன்னை பலப்படுத்தினாள். உடல் நலம் மற்றும் மன நலனில் அக்கறை காட்டி அவளும் கணவரும் இயன்றவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்(இரண்டாவது குழந்தைக்கு ஏன் பிரத்யேகமாகத் தயார் ஆக வேண்டும்? எப்படித் தயார் ஆக வேண்டும்? - தனி பதிவில் காண்போம்).

கர்ப்பகாலத்திற்கு முன்னரே தங்கள் உடலைக் கணவன், மனைவி இருவரும் தயார்படுத்தி, எடை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரிசெய்து, நல்ல சரிவிகித உணவு மேற்கொண்டதோடு, சீதா தன் உடலோடு மனதையும் பேணி பேரமைதிகொள்ள யோகப்பயிற்சியும், மனநலனிற்கு சில பயிற்சிகளையும் மேற்கொண்டாள். கர்ப்பமாக இருக்கும்போது எல்லோரும் ஓடி வந்து பணிவிடை செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிட்டும். ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் இல்லாதபோதும், ஒருநாள்கூட குறை எதுவுமே சொல்லாமல், வீட்டில் வேலை அதிகம் என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளாமல், ஒன்பது மாதங்களும் வீட்டுப்பணிகளோடு சேர்த்து உற்சாகத்தோடு உடற்பயிற்சியையும், கர்ப்பகால யோகப்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டாள்.

கர்ப்பம்
கர்ப்பம்

இவை மட்டுமா? இப்படி இன்னும் என்னென்ன முயற்சிகளை சீதா கர்ப்பகாலத்தில் மேற்கொண்டாள் என்பதைக் கேட்டால், அந்த 'லக்கி' என்ற வார்த்தைக்குள் இருக்கும் உழைப்பு தெரியும். கல்பனா இவற்றையெல்லாம் சைலஜாவிடம் சொல்லி நிறுத்தினாள்.

அடுத்த பதிவில், சீதாவின் சுவாரஸ்யமான பல வாழ்வியல் முறைகளைக் காண்போம்.